அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை நிறுத்தும்வரை நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதெனத் தெரிவித்துள்ள அமைச்சர் சரத் அமுனுகம, நாட்டை அபிவிருத்தி செய்ய அரசுக்கு கிடைக்கும் வரிமூல வருமானம் பற்றாக்குறையாக உள்ளதெனவும் தெரிவித்தார். அத்துடன், அரசுக்கு கிடைக்கும் வருமானங்களின் மூலம் அரச ஊழியர்களின் ஊதியத்தை வழங்கவும் பெற்றகடன்களை திருப்பி அடைக்கவும் ஓய்வூதியம் வழங்கவும் அரச கட்டிடங்களுக்கு இடைக்கிடை வர்ணம் பூசவுமே போதியதாக இருக்கின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தகவல் மற்றும் ஊடக அமைச்சின் அனுசரணையின் கீழ் பிணை பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் நிதிச் சேவைகள் அக்கடமி ஆகியன இணைந்து நடத்தும் நிதியியல் ஊடகச் சான்றிதழ் கற்கைநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொது நிர்வாக மற்றும் உள்விவகார அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்தார்.
பிரட்டனில் வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக இருதரப்பு விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒன்று இங்கிலாந்து வங்கி மற்றையது “பினான்சியல் ரைம்ஸ்’ என்ற ஆங்கில பத்திரிகை. இதிலிருந்து அரச கருமங்ளில் ஊடகத்துறையின் பங்கு எவ்வளவு முக்கியமென்பதை தெளிவாக அறிய முடிகின்றது.
தற்பொழுது மக்கள் பத்திரிகை வாசிப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. காரணம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாகும். இணையத்தளத்தின் மூலம் செய்திகளை அறிந்து கொள்ளும் மக்கள் பத்திரிகைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அண்மையில் நாட்டின் வடபகுதியில் மோதல்கள் தீவிரமடைந்திருந்த நிலையில் உலகளவில் பொருளாதாரத்துறை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்ததுடன் நெருக்கடிக்கும் உள்ளாகியது. இச்சந்தர்ப்பத்தில் யுத்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் பொருளாதாரப் பிரச்சினை குறித்த செய்திகளுக்கு முக்கியம் வழங்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் விண்ணப்பித்திருக்கிறது. இவ்விடயம் தொடர்பாகவும் ஊடகங்கள் உரிய விளக்கங்களையோ விமர்சனங்களையோ வழங்கவில்லை. இலங்கையில் கிட்டத்தட்ட 140 அரச நிறுவனங்கள் உண்டு. இந்நிறுவனங்கள் அரசுக்கு இலாபம் தேடித்தரவில்லை. மாறாக தமது நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் வரிமூல அல்லது ஏனைய வருமானங்களைக் கொண்டு ஊதியம் வழங்கி மக்களின் பணத்தை வீணடிக்கின்றன. அரச நிறுவனங்களில் ஊழல் மோசடிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றை நிறுத்தும்வரை நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது இயலாத காரியமெனத் தெரிவித்தார்.