April

April

புதுவருட தினத்தன்று கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கைது

arrest.jpgதமிழ், சிங்கள புதுவருடத் தினமாகிய நேற்று புதன்கிழமை கொழும்பில் சிறிலங்கா விசேட அதிரடி்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 11 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

48 மணிநேர போர் நிறுத்தத்தையடுத்து மோதல் மீள ஆரம்பம்

army-attack.jpgபுது வருடத்தை முன்னிட்டு விடுக்கப்பட்டிருந்த 48 மணித்தியால போர்நிறுத்தம் முடுவடைந்ததையடுத்து இரு தரப்பும் மோதல்களை மீள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுதலை புலிகளிற்கு எதிரான மோதலை பாதுகாப்பு படையினர் மீள் ஆரம்பித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து விடுதலை புலிகளும், இராணுவத்தினரும் பரஸ்பரம் எறிகணை தாக்குதல்களை மேற்கொள்வதாக தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. 

ஈரோட்டை திரும்பக் கேட்கும் அதிமுக – மதிமுக கடும் அதிருப்தி

jayalalitha.jpgஈரோட்டைத் திரும்பத் தருமாறும், அதற்குப் பதில் மத்திய சென்னையை எடுத்துக் கொள்ளுமாறும் மதிமுகவிடம் அதிமுக கூறியுள்ளதாம். இதனால் வைகோ கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக அதிமுக, மதிமுக இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தல் முதலே அதிமுகவுடன் இருந்து வருகிறார் வைகோ. ஆனால் லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் மதிமுகவை எவ்வளவுக்கெவ்வளவு ஓரம் கட்ட முடியுமோ அவ்வளவும் செய்து விட்டார் ஜெயலலிதா.

கடைசி நேரத்தில் வந்து சேர்ந்த பாமகவுக்கு அது கேட்ட 7 தொகுதிகளையும் தூக்கிக் கொடுத்து உடன்பாட்டை முடித்தார் ஜெயலலிதா. ஆனால் மதிமுக விவகாரத்தில் அப்படியே தலைகீழ். அவர்கள் கேட்டது ஆரம்பத்தில் 7 தொகுதிகள். ஆனால் ஜெயலலிதா சொன்னது 3 தொகுதிகள் மட்டுமே என்று.

இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீண்டு கொண்டே வந்தது. இறுதியில், கிட்டத்தட்ட 2 வார குழப்பத்திற்குப் பின்னர் மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என ஜெயலலிதா திட்டவட்டமாக கூறி விட்டார். இதை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வைகோவுக்கு.

இப்படியாக முடிவுக்கு வந்தது மதிமுக – அதிமுக தொகுதிப் பங்கீடு உடன்பாடு. இதன்படி, மதிமுகவுக்கு விருதுநகர், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில் இப்போது திடீரென புதுப் பூசல் வெடித்துள்ளதாம். ஈரோட்டில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த விரும்புகிறாராம் ஜெயலலிதா.இதனால் ஈரோட்டை எங்களிடம் கொடுத்து விடுங்கள். நீங்கள் மத்திய சென்னையில் போட்டியிடுங்கள் என்று அதிமுக தரப்பில் மதிமுகவும் கூறப்பட்டுள்ளதாம்.

மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்த்து மோத நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் விரும்பவில்லையாம். இதனால் மதிமுகவை மத்திய சென்னையில் தள்ளி விட அதிமுக முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இந்தத் தொகுதியைத்தான் மதிமுகவுக்காக அதிமுக ஒதுக்கியிருந்தது. ஆனால் வேண்டவே வேண்டாம் என்று வைகோ தீர்மானமாக கூறி விட்டார். இந்தத் தொகுதியால்தான் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நிலவியது. இந்த நிலையில் தற்போது மறுபடியும் மத்திய சென்னையை எடுத்து்க கொள்ளுங்கள், ஈரோட்டைத் தாருங்கள் என அதிமுக கூறியுள்ளதால் மதிமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம்.

ஈழக் கொலைகள்-100 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

fasting-100.jpgஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களையும் குழந்தைகளையும் மக்களையும் காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதிலும் இருக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நேற்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின், கொளத்தூர் பகுதியில், இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. பேராசிரியை சரஸ்வதி தலைமையில் 100 பெண்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மாணவிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், உழைக்கும் பெண்கள் உள்ளிட்ட என பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். முதலில் காவல்துறையினர் இதை அனுமதிக்கவில்லை. அனுமதி இல்லாமல் இப்படி கூடக் கூடாது என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அருகில் உள்ள பிளாட்பாரத்தில் பந்தல் போட்டு பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் இன்று காலை சிறிய நில நடுக்கம்

சற்று நேரத்துக்கு முன்னர் இலங்கையின் பல பகுதிகளிலும் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வினை உணரக் கூடியதாக இருந்தது.

இந்த நில அதிர்வானது பண்டாரவளை, அட்டாம்பிட்டிய, நுவரெலியா, பொத்துவில், அம்பாறை, கல்முனை, கண்டி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் தொடர்பான உத்தியோகபூர்வமான செய்திகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இது குறித்த மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக, இலங்கை நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புலிகள் மீது ஐ நா குற்றச்சாட்டு

sirjohnholmes.jpgமனித நேயப் போர் நிறுத்தம் அல்லது இலங்கைப் பாதுகாப்புப் படையினர் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஒரு தற்காலிக நிறுத்தம் என்பது நடைமுறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஐ நா கூறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித நேயப் பணிகளுக்கான துணைப் பொதுச் செயலர் ஜான் ஹோம்ஸ் பி பி சியின் ஆங்கில செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியின் போது இதைக் குறிப்பிட்டார்.

தற்போதைய இராணுவ சூழலை வைத்துப் பார்க்கும் போது, பொதுமக்கள்தான் விடுதலைப் புலிகளுக்கு இருக்கும் கடைசி கேடயம் என்று தோன்றுவதாக கூறிய அவர், தான் ஒரு இராணுவ ஆய்வாளர் இல்லை என்ற போதிலும், அங்குள்ள சூழல் புலிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாகத் தோன்றவில்லை என்றார் அவர்.

இதற்கு ஒரே தீர்வு புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதுதான் என்று ஹொம்ஸ் கூறினார் மேலும் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு சற்று முன்னதாகவும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர முயன்ற ஆறு பொதுமக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றுள்ளனதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் நடத்தை விதி மீறிய லாலு திடீர் கைது – ஜார்கண்டில் பரபரப்பு

laluprasat.jpgமுன் அனுமதி பெறாமல் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கிய விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தை ஜார்கண்ட் போலீசார் நேற்று திடீரென கைது செய்தனர். பிரசார பொதுக்கூட்ட மேடையில் அவரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜார்கண்ட் மாநிலம் கார்வா பகுதியில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கடந்த 7ம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது, லாலு வந்த ஹெலிகாப்டர், அதற்காக அமைக்கப்பட்டிருந்த தளத்தில் இறங்கவில்லை. பொதுக் கூட்டம் நடந்த இடத்துக்கு அருகில் இருந்த பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என்று கூறி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் ஜார்கண்டில் பிரசாரம் செய்ய லாலு நேற்று மீண்டும் வந்தார். பலாமு தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் குரன் ராமை ஆதரித்து பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசினார். அப்போது, பொதுக்கூட்ட மேடையில் ஏறிய போலீசார், லாலுவை கைது செய்தனர். இதனால் பிரசார கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், உடனடியாக அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

களுத்துறை சிறையில் தப்பி செல்ல முயன்ற கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம்: 6 பேர் பலி

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் தப்பி செல்ல முயன்ற 11 கைதிகளில் 6 பேர் பலியாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் சரணடைந்துள்ளதாகவும் களுத்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளை முற்றிலும் அழிப்போம்: சரத் பொன்சேகா

army-wanni.jpgவிடுதலைப் புலிகளை இலங்கையில் இருந்து முற்றிலுமாக அழித்து ஒழிப்போம்’ என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.  சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினங்களை முன்னிட்டு இலங்கை ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பொன்சேகா கூறியிருப்பதாவது:

முன்பு விடுதலைப்புலிகளிடம் இருந்த 13 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான பகுதிகள், தற்போது 23 சதுர கி.மீ. அளவுக்கு சுருங்கி விட்டது. விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், விமானங்கள், படகுகள் போன்றவற்றை அழித்து விட்டோம். இலங்கையில் இருந்து தீவிரவாதம் மற்றும் தனி ஈழம் கோரும் விடுதலைப்புலிகளின் கனவு ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிப்பதே எங்களின் லட்சியம்.

விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து வரும் அப்பாவி மக்களுக்கு உபசரிப்பு, நட்பு மற்றும் அன்பை ராணுவம் அளித்து வருகிறது. பாதுகாப்பு வளைய பகுதிக்குள் வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இதற்கு உதாரணம் ஆகும். விடுதலைப்புலிகள் பிடியில் இருக்கும் மற்ற அப்பாவி மக்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இலங்கையில் விரைவில் அமைதி பூத்து குலுங்கும் என்று கூறியுள்ளார்.

சோமாலியக் கடலில் தொடரும் கப்பல் கடத்தல்கள்

somaliya-robbery.jpgசோமா லியாவை அண்டிய ஏடன் வளைகுடா பகுதியில், சர்வதேச கடல் சார் படையினர் பாதுகாப்பை அதிகப்படுத்தி வருகின்ற அதேவேளையில், மேலும் இரண்டு சரக்குக் கப்பல்களைக் கைப்பற்றியுள்ள சோமாலிய கடற்கொள்ளையர்கள், மூன்றாவது ஒரு கப்பலின் மீது சுட்டும் உள்ளார்கள்.

இரண்டு நாட்களில் கடத்தப்பட்ட நான்காவது கப்பலாக டோகோ கொடியுடன் பயணித்த ஒரு 5000 தொன் கப்பல் அமைகின்றது. 24 மாலுமிகளுடன் கிரேக்க கப்பல் ஒன்று கடத்தப்பட்டதை அடுத்து இந்த கப்பலும் கடத்தப்பட்டுள்ளது.

மேலும் இருபது மாலுமிகளுடன் இரு எகிப்திய படகுகளும் கடத்தப்பட்டுள்ளன. லைபீரிய கொடியுடன் பயணித்த ஒரு கப்பலின் மீது சிறிய படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் சுட்டிருக்கிறார்கள்.