ஈரோட்டைத் திரும்பத் தருமாறும், அதற்குப் பதில் மத்திய சென்னையை எடுத்துக் கொள்ளுமாறும் மதிமுகவிடம் அதிமுக கூறியுள்ளதாம். இதனால் வைகோ கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக அதிமுக, மதிமுக இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தல் முதலே அதிமுகவுடன் இருந்து வருகிறார் வைகோ. ஆனால் லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் மதிமுகவை எவ்வளவுக்கெவ்வளவு ஓரம் கட்ட முடியுமோ அவ்வளவும் செய்து விட்டார் ஜெயலலிதா.
கடைசி நேரத்தில் வந்து சேர்ந்த பாமகவுக்கு அது கேட்ட 7 தொகுதிகளையும் தூக்கிக் கொடுத்து உடன்பாட்டை முடித்தார் ஜெயலலிதா. ஆனால் மதிமுக விவகாரத்தில் அப்படியே தலைகீழ். அவர்கள் கேட்டது ஆரம்பத்தில் 7 தொகுதிகள். ஆனால் ஜெயலலிதா சொன்னது 3 தொகுதிகள் மட்டுமே என்று.
இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீண்டு கொண்டே வந்தது. இறுதியில், கிட்டத்தட்ட 2 வார குழப்பத்திற்குப் பின்னர் மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என ஜெயலலிதா திட்டவட்டமாக கூறி விட்டார். இதை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வைகோவுக்கு.
இப்படியாக முடிவுக்கு வந்தது மதிமுக – அதிமுக தொகுதிப் பங்கீடு உடன்பாடு. இதன்படி, மதிமுகவுக்கு விருதுநகர், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் இப்போது திடீரென புதுப் பூசல் வெடித்துள்ளதாம். ஈரோட்டில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த விரும்புகிறாராம் ஜெயலலிதா.இதனால் ஈரோட்டை எங்களிடம் கொடுத்து விடுங்கள். நீங்கள் மத்திய சென்னையில் போட்டியிடுங்கள் என்று அதிமுக தரப்பில் மதிமுகவும் கூறப்பட்டுள்ளதாம்.
மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்த்து மோத நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் விரும்பவில்லையாம். இதனால் மதிமுகவை மத்திய சென்னையில் தள்ளி விட அதிமுக முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இந்தத் தொகுதியைத்தான் மதிமுகவுக்காக அதிமுக ஒதுக்கியிருந்தது. ஆனால் வேண்டவே வேண்டாம் என்று வைகோ தீர்மானமாக கூறி விட்டார். இந்தத் தொகுதியால்தான் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நிலவியது. இந்த நிலையில் தற்போது மறுபடியும் மத்திய சென்னையை எடுத்து்க கொள்ளுங்கள், ஈரோட்டைத் தாருங்கள் என அதிமுக கூறியுள்ளதால் மதிமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம்.