March

March

வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமில் தீபிடிப்பு; உடைமைகள் நாசம்

poonthotham.jpgவவுனியா பூந்தோட்ட அகதிகள் முகாம் நேற்றுக் காலை தீக்கிரையானது. திடீரென ஏற்பட்ட தீ காரணமாக அகதிகள் தங்கியிருந்த கொட்டில்கள் முற்றாக எரிந்ததுடன் மக்களின் உடைமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

நேற்றுக் காலை சுமார் 10.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ முகாம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இராணுவத்தினர் ஸ்தலத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இத்தீவிபத்து காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 160 பேர் பாதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பணிப்பின் பேரில் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்க வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். தீ பரவுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன.

1990 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் பூந்தோட்ட முகாமில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களே உள்ளனர். காலை 10.30 மணியளவில் இத்தீவிபத்து ஏற்பட்டதால் உயிரிழப்புகள், காயமடைதல் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் மூலம் 90 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள்

ship.jpgபாதுகாப்புப் பிரதேசத்துக்குள் வந்துள்ள மக்களுக்கென 90 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் 40 மெ. தொன் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதேநேரம்,  இன்று 50 மெ. தொன் அத்தியாவசியப் பொருட்கள் கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன தெரிவித்தார்.

படையினரால் பாதுகாப்பு பிரதேசம் என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வரும் குழந்தைகளுக்குரிய பால்மா வகைகள் தட்டுப்பாடின்றி கிடைக்கக் கூடியதாக, குழந்தைகளுக்கான பால்மா சுமார் 1000 பக்கற்களை மேலதிகமாக அனுப்பி வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கூறினார். இதனை மற்றொரு கப்பலில் அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் பகுதியிலுள்ள பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள மக்களுக்கென 40 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அதேநேரம், குழந்தைகளுக்குத் தேவையான பால்மா வகைகளையும் அனுப்ப உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இன்று கின் ஓஷியன் என்ற கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படும் கப்பலில் சீனி, மா, அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் அடங்குகின்றன.

கின் ஓஷியன் கப்பல் இன்று புறப்பட்டு முல்லைத்தீவு கடல் பரப்புக்கு செல்கிறது. அங்கிருந்து படகுகள் மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும். உலக உணவு திட்டத்தினரின் அத்தியாவசிய பொருட்களுடனும், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுப்பப்படும் பொருட்களுடனுமே கப்பல் புறப்படுகிறதென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

சார்க் பல்கலை 2010 இல் ஆரம்பம்; உணவு வங்கியும் தயார் நிலையில் – செயலாளர் நாயகம் ஷர்மா

saarc_flagss.jpgதெற்காசிய பிராந்திய நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சார்க் உணவு வங்கி தற்போது தயாரான நிலையில் உள்ளதாக “சார்க்” அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி ஷர்மா தெரிவித்தார்.

15வது சார்க் உச்சி மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானங்களின் பிரகாரம், பிராந்தியத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக கலாநிதி ஷர்மா தெரிவித்தார்.

“சார்க்” வெளி விவகார அமைச்சர்களின் 31வது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கலாநிதி ஷர்மா இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பு – சிலோன் கொன்ரினன்ரல் ஹோட்டலில் நேற்று முன்தினம் அமர்வு ஆரம்பமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம அமர்வுக்குத் தலைமை தாங்கினார்.

ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய கலாநிதி ஷர்மா, உச்சி மாநாட்டின் தீர்மானங்களுக்கு அமைய “சார்க்” பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் அடுத்த ஆண்டிலிருந்து (2010) ஆரம்பமாகுமென்று தெரிவித்தார். இது தொடர்பில் அரசுகளுக்கிடையிலான செயற்பாட்டுக் குழு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். வேறு இனங்காணப்பட்ட விடயங்களிலும் முன்னேற்ற கரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கலாநிதி ஷர்மா தெரிவித்தார். சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 31 வது அமர்வு நேற்று (28) மாலை நிறைவடைந்தது.

“வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிப்பு’

srilanka-students.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் 20,000 மாணவர்களது கல்விச் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ. ஒஸ்வோல்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்; வவுனியா மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் 20 ஆயிரம் மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுடைய கல்விச் செயல்பாட்டிற்கு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முழுமையான கல்வி செயற்பாடுகள் நடைபெறவில்லை.

எட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இங்கு கல்வி பயின்ற மாணவர்களுக்கு மாற்று திட்டங்களை ஏற்படுத்தினோம். ஆனாலும், திருப்திகரமான கல்விச் சூழல் காணப்படவில்லை. நிரந்தர மாணவர்கள், இடம் பெயர்ந்து வந்துள்ள மாணவர்கள், மெனிக்பாமில் குடியேற்றப்பட்ட மாணவர்கள் என மூன்று தரத்தையும் சேர்ந்தவர்கள் உள்ளனர். நலன்புரிநிலையங்களில் ஏழாயிரம் மாணவர்களும் 373 ஆசிரியர்களும் உள்ளனர். இடம்பெயர்ந்து வந்துள்ள ஆசிரியர்கள் நலன்புரி நிலையங்களைவிட்டு வெளியேற முடியாது. அவர்கள் அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி புகட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்குரிய வேதனங்கள் வழங்க அனுமதி கிடைத்துள்ளது.

வலயக்கல்விப்பணிப்பாளர், நலன்புரிநிலையத்தில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள, வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள சிறுவர்களுக்குரிய கல்வி நடவடிக்கையில் “யுனிசெப்’ கவனம் செலுத்தியுள்ளது. நலன்புரி நிலையத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு சிறுவர்களுக்கான கல்வி செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய கல்வி செயற்பாட்டிற்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வசதிகளையும் யுனிசெப் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தலுக்கான திகதியினை மாற்றுமாறு கட்சிகள் கோரிக்கை.

election_.jpgமேல் மாகாணசபைத் தேர்தலுக்கான திகதியினை மறுபரிசீலணை செய்யுமாறு பிரதான இரு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஏப்பிரல் மாதம் 25ம் திகதி தேர்தலினை நடாத்துவது என கடந்த 26ம் திகதி தேர்தல்கள் செயலகம் அறிவித்திருந்தது. இந்த திகதியினை மாற்ற வேண்டும் என இரண்டு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தேர்தலுக்கான காலம் நீடித்துள்ளதன் காரணமாக இந்த திகதியை மாற்ற வேண்டும் என தாம் தேர்தல்கள் செயலகத்திடம் கோரியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திகதியில் தேர்தலினை நடாத்துவதில் தமக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த திகதியினை மாற்றுவது தொடர்பில் ஐ.தே.க பொதுச் செயலாளர் தம்முடன் கலந்துரையாடினார் எனவும் ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியினை ஒருபோதும் மாற்ற முடியாது எனத் தாம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் காலங்களில் தேர்தலுக்கான திகதியினை அறிவிக்கும்போது தேர்தல்கள் ஆணையாளர் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடும் முறைமையொன்றினை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்துகிறது தேசிய சுதந்திர முன்னணி

wimal.jpgவிடுதலைப் புலிகளை நீண்டகாலத்துக்கு ஓரம்கட்டிவைத்திராமல் தனது மனிதாபிமான நடவடிக்கைகளை இராணுவம் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் நடவடிக்கைகளை எடுக்காமல் விடுவது படையினருக்கு அதிக இழப்புகளை ஏற்படுத்திவிடுமெனவும் ஏனெனில் பொதுமக்கள் மத்தியில் பதுங்கியிருந்து புலிகள் தாக்குதல்களை நடத்தும் சாத்தியம் இருப்பதாகவும் தேசிய சுதந்திரமுன்னணித் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மோதல்களுக்கிடையில் பொதுமக்கள் சிக்கி விடுவார்கள் என்பதற்காக அவர்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை இராணுவம் நிறுத்திவிடக்கூடாது. யாருக்காவது பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் இந்த யுத்த சூழ்நிலையில் அது தவிர்க்கமுடியாமல் செலுத்தப்படும் விலையென கருதப்படவேண்டும்.புலிகளை அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியேற்றுவதற்கான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதுவே தருணமாகும். இப்போது அவர்கள் 50 சதுரகிலோ மீற்றர் பரப்புக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது பொதுமக்களின் இறப்புகளை தவிர்ப்பதற்காக தியாகங்களை செய்யும் நிர்ப்பந்தத்திற்குள் படையினர் தள்ளப்பட்டுள்ளனர். இந்த யுத்தம் விரைவில் முடித்துவைக்கப்படவேண்டும் என்று ஆங்கிலப்பத்திரிகையொன்றுக்கு விமல்வீரவன்ச கூறியுள்ளார்.

நடவடிக்கைகளுக்கு காலம் எடுப்பதால் சர்வதேச சக்திகள் தலையிட்டு புலிகளுக்கு புதிய மூச்சை அளிக்க வழிசமைப்பதாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசும் புலிகளும் தற்காலிக மோதல்நிறுத்தத்துக்கு செல்லவேண்டுமென ஐ.நா.வும் அமெரிக்காவும் கோரிக்கை விடுத்திருப்பதை விமர்சித்திருக்கும் தேசிய சுதந்திர முன்னணி அத்தகைய நடவடிக்கை புலிகள் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இடமளிப்பதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

தமது பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளிவர புலிகள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அதனால் யுத்த நிறுத்தம் இந்தத் தருணத்தில் நோக்கத்தை நிறைவேற்றாது என்றும் வீரவன்ச கூறியுள்ளார். அகப்பட்டுள்ள பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாகவும் இந்தியா விடுத்திருக்கும் கோரிக்கை தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்திருக்கும் விமல்வீரவன்ச அந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கான தேவை இல்லை என்று கூறியுள்ளார்.

அந்தமாதிரியான பொறிமுறைக்கான தேவை ஏற்படவில்லை. ஒரேதடை புலிகள்தான். அவர்களை தாம் அழிக்கவேண்டும் என்று வீரவன்ச தெரிவித்துள்ளார்

பல்கலை இரு வாரத்துக்கு பூட்டு; மரணத்தின் பின் உறவுகள் இணைவு

eastern-university.jpgமட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவி செல்வி நிரூபா தனபாலசிங்கம் (வயது 23) சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து பல்கலைக்கழகத்தின் கலை கலாசாரபீடம் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என பதிவாளர் கி. போகீந்திரன் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இந்த தற்கொலை நடைபெற்றுள்ளதால் விடுதியில் தங்கும் ஏனைய மாணவிகள், தொடர்ந்தும் தமது விடுதியில் தங்கியிருக்கவோ கல்வி நடவடிக்கைகளை தொடரவோ மன நிலை இடமளிக்கவில்லை என்றும் தற்காலிகமாக சுமார் இரண்டு வாரத்துக்கு விடுமுறை தருமாறும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட மாணவி தனது உறவினர்களுடன் நீண்ட நாட்களாக தொடர்பு இல்லாமல் இருந்ததாகவும் இதனால் விரக்தியடைந்ததாலேயே தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். தன்னைப் போல் மற்றுமொரு யுவதியும் இதே விரக்தி நிலையில் இருப்பதால் அவரை காப்பாற்றுமாறும் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 12.00 மணியளவில் இறந்த யுவதியின் சடலம் அவரது சகோதரர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சடலத்தின் பிரேத பரிசோதனை, மரண விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில் சுமார் 100 மாணவர்களும் சடலத்துடன் இணைந்து வவுனியாவுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் மரணமான யுவதி பெயர் குறிப்பிட்டிருந்த மற்றைய யுவதியையும் வவுனியாவிலுள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்று வருமாறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மகளிர் விடுதியிலுள்ள ஏனைய யுவதிகள் அனைவரும் நேற்று முன்தினம் மட்டு. நகரிலுள்ள மன்றேசா இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு நேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இலங்கையில் அமைதி நிலவ வேண்டும்; தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் : ஏ.ஆர். ரஹ்மான்

ar-ragman.jpg“இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளை பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள் எவரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்” என ஒஸ்கார் புகழ் இசை நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழ்வதற்கு தேவையான பின்னணி ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘ஸ்லம்டொக் மில்லியனர்’ என்ற திரைப்படத்திற்காக அண்மையில் நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை ஏர்.ஆர்.ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.

மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில், “இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று நிருபர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ரஹ்மான், “இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளைப் பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன். ‘ஒஸ்கார்’ விருது வழங்கும் விழாவோ அல்லது இந்த மேடையோ அரசியல் விடயங்களுக்கான இடமல்ல. இருந்த போதும், எந்த உயிரினத்திற்கும் துன்பம் ஏற்படக்கூடாது என்றே நான் விரும்புவது உண்டு.

இலங்கையில் அமைதியான சூழலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன்; நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் ” என்றார்.

“சர்வதேச அழுத்தம் அரசுக்கு இல்லை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டுக்கு நன்றி’

l-yaappa-abayawardana.jpgஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 32 நாடுகள் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டுமென தெரிவித்ததையிட்டு நன்றி தெரிவிப்பதாக ஊடகஅமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்ததுடன், வெளிநாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக சில பத்திரிகைகள் தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லையெனக் கூறினார். தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்; ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் அரசாங்கம் இடம்பெயர்ந்து வருவோரை நல்ல முறையில் பராமரித்து மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெயர்ந்து வருவோருக்கான சகல வசதிகளுடன் கூடிய முகாமை சில தினங்களுக்கு முன்பு அங்குசென்று பார்வையிட்டதன் பின்பே அரசாங்கம் எவ்வாறு மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து அறிந்த பின்னரே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கையின் நிமிர்த்தம் யுத்தத்தை முன்னெடுக்கும் அதேநேரம், பொதுமக்கள் இதில் பாதிக்காத வகையில் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இடம்பெயர்ந்து வரும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க அரசு தேவையான நடவடிக்கையெடுத்து வருகின்றது.

இதேவேளை, விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து பேச்சுக்குச் செல்லவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 32 நாடுகள் தெரிவித்துள்ளன. அரசாங்கம் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும்மட்டும் அவர்களுடன் பேச்சுக்கு இடமில்லையென தெரிவித்துள்ளநிலையில், அவர்கள் இவ்வாறு தெரிவித்ததையிட்டு எமது நன்றிகள்.

சில பத்திரிகைகள் அரசாங்கத்திற்கு வெளிநாடுகள் மற்றும் அமைப்புகள் அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ளன. உண்மையில் எவரும் அரசுக்கு எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லையெனத் தெரிவித்தார்

பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவோருக்கு தங்கு தடையின்றி நஷ்டஈடு வழங்கப்படும் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

risard.jpgஅரசாங்கம் பயங்கரவாத பிரச்சினைக்கு முகம்கொடுத்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையிலும் பயங்கரவாதம் காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்குரிய நஷ்ட ஈடுகளை எவ்வித தங்குதடையுமின்றி வழங்கி வருவதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத பிரச்சினை காரணமாக 1990 ஆம் ஆண்டிற்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு புதன்கிழமை மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் இடம்பெற்றது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக்கொடுப்பனவுகளை வழங்கினார். பயங்கரவாத பிரச்சினை காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் 58 பேருக்கும் சொத்துகளை இழந்த 20 பேருக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்குமாக மூன்று மில்லியன் ரூபாவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சொத்துகளை இழந்த அரச ஊழியர்களுக்காக இரண்டு மில்லியன் ரூபாவும் மொத்தமாக வழங்கப்பட்டது.

இங்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் உரையாற்றுகையில்; கடந்த காலங்களில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட அதிகமான நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை எந்த அமைச்சிலும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் எவ்வித தாமதமுமின்றி கிடைக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருக்கின்றார்.

ஜனாதிபதியினதும் அவரது ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவினதும் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் எனக்கு அதிகமாக கிடைத்து வருகின்றது. இதன்காரணமாக பாதிக்கப்படுபவர்கள் உடனுக்குடன் தமது நஷ்ட ஈடுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.