கப்பல் மூலம் 90 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள்

ship.jpgபாதுகாப்புப் பிரதேசத்துக்குள் வந்துள்ள மக்களுக்கென 90 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் 40 மெ. தொன் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதேநேரம்,  இன்று 50 மெ. தொன் அத்தியாவசியப் பொருட்கள் கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன தெரிவித்தார்.

படையினரால் பாதுகாப்பு பிரதேசம் என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வரும் குழந்தைகளுக்குரிய பால்மா வகைகள் தட்டுப்பாடின்றி கிடைக்கக் கூடியதாக, குழந்தைகளுக்கான பால்மா சுமார் 1000 பக்கற்களை மேலதிகமாக அனுப்பி வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கூறினார். இதனை மற்றொரு கப்பலில் அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் பகுதியிலுள்ள பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள மக்களுக்கென 40 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அதேநேரம், குழந்தைகளுக்குத் தேவையான பால்மா வகைகளையும் அனுப்ப உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இன்று கின் ஓஷியன் என்ற கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படும் கப்பலில் சீனி, மா, அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் அடங்குகின்றன.

கின் ஓஷியன் கப்பல் இன்று புறப்பட்டு முல்லைத்தீவு கடல் பரப்புக்கு செல்கிறது. அங்கிருந்து படகுகள் மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும். உலக உணவு திட்டத்தினரின் அத்தியாவசிய பொருட்களுடனும், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுப்பப்படும் பொருட்களுடனுமே கப்பல் புறப்படுகிறதென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *