தெற்காசிய பிராந்திய நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சார்க் உணவு வங்கி தற்போது தயாரான நிலையில் உள்ளதாக “சார்க்” அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி ஷர்மா தெரிவித்தார்.
15வது சார்க் உச்சி மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானங்களின் பிரகாரம், பிராந்தியத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக கலாநிதி ஷர்மா தெரிவித்தார்.
“சார்க்” வெளி விவகார அமைச்சர்களின் 31வது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கலாநிதி ஷர்மா இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பு – சிலோன் கொன்ரினன்ரல் ஹோட்டலில் நேற்று முன்தினம் அமர்வு ஆரம்பமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம அமர்வுக்குத் தலைமை தாங்கினார்.
ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய கலாநிதி ஷர்மா, உச்சி மாநாட்டின் தீர்மானங்களுக்கு அமைய “சார்க்” பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் அடுத்த ஆண்டிலிருந்து (2010) ஆரம்பமாகுமென்று தெரிவித்தார். இது தொடர்பில் அரசுகளுக்கிடையிலான செயற்பாட்டுக் குழு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். வேறு இனங்காணப்பட்ட விடயங்களிலும் முன்னேற்ற கரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கலாநிதி ஷர்மா தெரிவித்தார். சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 31 வது அமர்வு நேற்று (28) மாலை நிறைவடைந்தது.