மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவி செல்வி நிரூபா தனபாலசிங்கம் (வயது 23) சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து பல்கலைக்கழகத்தின் கலை கலாசாரபீடம் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என பதிவாளர் கி. போகீந்திரன் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இந்த தற்கொலை நடைபெற்றுள்ளதால் விடுதியில் தங்கும் ஏனைய மாணவிகள், தொடர்ந்தும் தமது விடுதியில் தங்கியிருக்கவோ கல்வி நடவடிக்கைகளை தொடரவோ மன நிலை இடமளிக்கவில்லை என்றும் தற்காலிகமாக சுமார் இரண்டு வாரத்துக்கு விடுமுறை தருமாறும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.
முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட மாணவி தனது உறவினர்களுடன் நீண்ட நாட்களாக தொடர்பு இல்லாமல் இருந்ததாகவும் இதனால் விரக்தியடைந்ததாலேயே தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். தன்னைப் போல் மற்றுமொரு யுவதியும் இதே விரக்தி நிலையில் இருப்பதால் அவரை காப்பாற்றுமாறும் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 12.00 மணியளவில் இறந்த யுவதியின் சடலம் அவரது சகோதரர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சடலத்தின் பிரேத பரிசோதனை, மரண விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில் சுமார் 100 மாணவர்களும் சடலத்துடன் இணைந்து வவுனியாவுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் மரணமான யுவதி பெயர் குறிப்பிட்டிருந்த மற்றைய யுவதியையும் வவுனியாவிலுள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்று வருமாறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மகளிர் விடுதியிலுள்ள ஏனைய யுவதிகள் அனைவரும் நேற்று முன்தினம் மட்டு. நகரிலுள்ள மன்றேசா இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு நேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.