ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 32 நாடுகள் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டுமென தெரிவித்ததையிட்டு நன்றி தெரிவிப்பதாக ஊடகஅமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்ததுடன், வெளிநாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக சில பத்திரிகைகள் தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லையெனக் கூறினார். தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்; ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் அரசாங்கம் இடம்பெயர்ந்து வருவோரை நல்ல முறையில் பராமரித்து மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெயர்ந்து வருவோருக்கான சகல வசதிகளுடன் கூடிய முகாமை சில தினங்களுக்கு முன்பு அங்குசென்று பார்வையிட்டதன் பின்பே அரசாங்கம் எவ்வாறு மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து அறிந்த பின்னரே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கையின் நிமிர்த்தம் யுத்தத்தை முன்னெடுக்கும் அதேநேரம், பொதுமக்கள் இதில் பாதிக்காத வகையில் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இடம்பெயர்ந்து வரும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க அரசு தேவையான நடவடிக்கையெடுத்து வருகின்றது.
இதேவேளை, விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து பேச்சுக்குச் செல்லவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 32 நாடுகள் தெரிவித்துள்ளன. அரசாங்கம் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும்மட்டும் அவர்களுடன் பேச்சுக்கு இடமில்லையென தெரிவித்துள்ளநிலையில், அவர்கள் இவ்வாறு தெரிவித்ததையிட்டு எமது நன்றிகள்.
சில பத்திரிகைகள் அரசாங்கத்திற்கு வெளிநாடுகள் மற்றும் அமைப்புகள் அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ளன. உண்மையில் எவரும் அரசுக்கு எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லையெனத் தெரிவித்தார்