March

March

“சுடர்ஒளி’ ஆசிரியர் வித்தியாதரனுக்கு மூன்று மாதம் தடுப்புக் காவல் உத்தரவு

vithyathara-01.jpgகுற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள “சுடர்ஒளி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. வித்தியாதரன் நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

கொழும்பு கோட்டை நீதிவான் ஜெஹான் பலப்பிட்டிய முன்னிலையில் இவரை ஆஜர் செய்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், கொழும்பில் இடம்பெற்ற விமானத் தாக்குதல் தொடர்பில் வெளிநாடுகளிலிருந்து இவருக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மூன்று மாத தடுப்புகாவல் உத்தரவினை பிறப்பித்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அத்துடன், சுடரொளி பிரதம ஆசிரியர் தொடர்பில் மருத்துவ அறிக்கையினையும் மன்றில் சமர்ப்பித்துள்ளனர். இதனையடுத்து, வித்தியாதரனை தடுத்து வைப்பதற்கான அனுமதியினை நீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த 26ஆம் திகதி கல்கிசையில் வைத்து கைதுசெய்யப்பட்ட சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இருவரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

இரான் தொலைக்காட்சியில் ஸ்லம்டாக்

Slumdog_Millionaire_Sceneஆஸ்கர் விருதுகள் பல பெற்றுள்ள ஆங்கிலத் திரைப்படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தையும், ஹாலிவுடன் திரைப்படமான தி டார்க் நைட் திரைப்படத்தையும் இஸ்லாமிய புத்தாண்டு கொண்டாட்டக் காலத்தில் தாம் தொலைக்காட்சியில் திரையிடப் போவதாக இரான் நாட்டின் அரச தொலைக் காட்சி அறிவித்துள்ளது.

திரைக்கு வந்து சில காலமேயான புது திரைப்படங்களை திரையிடுவது இரான் நாட்டு தொலைக்காட்சியில் வழக்கமேயல்ல. இரானுக்கு வெளியேயிருந்து வரும் பாரசீக மொழி செயற்கைக் கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இருந்து இளைஞர்களின் கவனத்தை திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நிருபர்கள் கூறுகின்றனர்.

வருண் காந்திக்கு மேலும் சிக்கல்-2 வழக்குகள்

varun-gandhi.jpgபிலிபித் தொகுதியின் பாஜக வேட்பாளர் வருண் காந்தி முஸ்லீம்கள் குறித்து விஷமத்தனமாக பேசி சிக்கலில் மாட்டியுள்ள நிலையில் மேலும் சிக்கலாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லீம்களைக் கொல்வேன் என்று பேசியது தொடர்பாக அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான பதட்டத்தை ஏற்படுத்துதல், வன்முறையை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தப் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.

முதல் வழக்கைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டவுடனேயே வருண் காந்தி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தனது பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நாளை முற்பகல் 11 மணிக்குள் வருண் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே வருண் காந்தியின் பேச்சு இடம் பெற்றுள்ள வீடியோ டேப்புகளை தடவியல் சோதனைக்கு அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் கலந்து கொண்ட, பேசிய அனைத்து கூட்டங்களின் வீடியோ பதிவுகளையும் கண்டுபிடித்து சமர்ப்பிக்கவும் உ.பி. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: இதற்கிடையே, உ.பி. மாநிலம் பிசால்பூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஒரு புதுப் புகார் வருண் காந்தி மீது கிளம்பியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அக்தர், பிசால்பூருக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலத்தைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

நிவாரணக் கிராமங்களின் சுகாதாரம்; 64 மருத்துவர், 107 தாதியர்கள் பணியில்

health-care.jpg வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை உடனுக்குடன் பெற்றுக் கொடுக்கவென 64 மருத்துவ அதிகாரிகளையும், 107 தாதியரையும் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு கடமையில் ஈடுபடுத்தியுள்ளது.

இதேநேரம் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிவாரணக் கிராமத்திற்கும் ஒரு அம்புலன்ஸ் வண்டி வீதம் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார். உலக காசநோய் தினத்தையொட்டி இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்படித் தகவல்களைத் தெரிவித்தார்.

சுகாதாரக் கல்வி பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் சரத் அமுனுகம தலைமையில் பணியகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில் டாக்டர் மஹீபால மேலும் கூறுகையில்: புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த மக்கள் வவுனியாவில் அமை க்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இக்கிராமங்களில் சுமார் 34 ஆயிரம் பேர் தங்கியுள்ளார்கள்.

இக்கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையை உடனுக்குடன் பெற்றுக்கொடுக்க வென 64 மருத்துவ அதிகாரிகளையும் 107 தாதியரையும் 19 மருத்துவ மாதுகளையும் 5 மயக்கமருந்து கொடுக்கும் டாக்டர்களையும் 12 பொது சுகாதாரப் பரிசோதகர்களையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.

இவர்கள் வவுனியா பொது வைத்தியசாலை, செட்டிக்குளம் தள வைத்தியசாலை மற்றும் பூவரசங்குளம் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள் ளனர். என்றாலும் இந்த டாக்டர்களில் ஒரு தொகுதியினர் தினமும் இந்த நிவாரணக் கிராமங்களுக்குச் சென்று மருத்துவ கிளினிக்குகளையும் நடாத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இம் மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்கென செட்டிக்குளம் ஆஸ்பத்திரியின் மருத்துவ ஆய்வு கூட வசதிகள் மேம் படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு அங்கு நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆய்வு கூட வசதியும் ஏற்படுத்த ப்பட்டுள்ளன.

இம்மக்களுக்கு அடுத்த மாதம் முதல் காசநோய் தடுப்புக்கான சிறந்த மருத்துவ சேவையைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் அமைச்சு அதிகாரிகளும், உலக சுகாதார ஸ்தாபன பிரதிநிதிகளும், காசநோய்த் தடுப்புக்கான தேசியத் திட்ட அதிகாரிகளும் விரைவில் வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் மருத்துவ நிபுணர்களான டாக்டர் ஏ. கே. எஸ். பி. டி. அல்விஸ். டாக்டர் அமித பெரேரா, கபில சூரியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

யாழ். தேவி ஆரம்ப பணிகள் 23ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைப்பு

mahinda-rajapaksha.jpgயாழ்ப்பாணத் துக்கான ரயில் சேவை ஆரம்பிப் பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளன. வடக்கிற்கான ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான தேசிய செயலகமொன்றை அன்றைய தினம் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.

யாழ். தேவி சேவையை ஆரம்பிப்பதற்கென தேசிய மட் டத்தில் சகல மக்களினதும் பங்களிப்பு பெறப்பட உள்ளதோடு இதனூடாக யாழ்ப்பாணம் வரையான 37 ரயில் நிலையங்கள் மீளமைக்கப்படவுள்ளன.

இந்தப் பூர்வாங்க பணிகள் இன்று (19) இடம் பெற இருந்தபோதும் தவிர்க்க முடியாத காரணங்களினால் 23 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.
 
 

புலிகளின் பொலிஸ் நிலையம், வாகனங்கள் பொதுமக்களால் தீ வைத்து எரிப்பு – இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள பொதுமக்களையும், அவர்களது பிள்ளைகளையும் புலிகள் பலாத்காரமாக தூக்கிச் சென்று படையில் இணைத்துக் கொள்ள முயற்சித்ததை அடுத்து பொதுமக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான வாக்குவாதம் பெரும் மோதலில் முடிந்துள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பொலிஸ் நிலையத்தையும், வாகனங்களையும் தீவைத்து நாசப்படுத் தினரென்று புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த பொது மக்கள் தெரிவித்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பொதுமக்கள் தமது கட்டுப்பாட்டை மீறியதையடுத்து ஆயுதங்களுடன் அங்கு விரைந்த புலிகள் பொதுமக்களை இலக்கு வைத்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் கொல்லப்பட்டும், பாடுகாயமடைந்தும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்றுக் காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடி யர் மேலும் தகவல் தருகையில், புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் பாதுகாப்பு வலயத்தை அறி வித்தது. தற்பொழுது பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் புலிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

புதுமாத்தளன் பிரதேசத்திலுள்ள பொதுமக்களையும், அவர்களது பிள்ளைகளையும் யுத்தத்தில் ஈடுபடுத்துவதற் காக பலாத்காரமாக தூக்கிச் செல்லும் வகையில் நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் புலிகள் முயற்சித்துள்ளனர். தங்களது பிள்ளைகளை கொண்டு செல்ல வேண்டாம் என்றும் அங்குள்ள பொதுமக்கள் புலிகளை கேட்டுள்ளனர்.  அந்தப் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்காக அந்தப் பிரதேசத்திலுள்ள புலிகளின் பொலிஸ் நிலையத்தை நோக்கி விரைந்துள்ளனர். அங்கிருந்த ஒரு சில புலிகளின் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்று பின்னர் அது கலவரமாக விஸ்வரூபம் எடுத் துள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் புலிகளின் பொலிஸ் நிலையத்தையும், இரண்டு வான் மற்றும் இரண்டு மோட் டார் சைக்கிள்களையும் தீவைத்து நாசப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஆயுதங்கள் ஏந்திய சுமார் 60 புலிகள் அந்தப் பிரதேசத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப் படுத்த முயற்சித்துள்ளனர். நிலைமை கட்டுப் பாட்டை இழந்ததையடுத்து அங்கு கூடியிருந்த பொது மக்களை இலக்கு வைத்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். புலிகளின் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் உள்ளனர். அந்தப் பிரதேசத்திலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்திற்கு முன் பாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பிரதேசத்திலிருந்து 1565 பொதுமக்கள் காட்டு வழியாகவும், கடல் ஏரி வழி யாகவும் தப்பி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நேற்று வந்தடைந்துள்ளனர். இந்த பொதுமக்களே இந்தச் சம்பவத்தினை விபரித்ததாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

தங்களுக்கு உணவு எதுவும் வேண்டாம், எங்களை உடனடியாக விடுவியுங்கள் என்று ஐ. சி. ஆர். சி. பிரதிநிதி களிடம் பொதுமக்கள் வேண்டியதாகவும் அந்தப் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கம் அறிவித்துள்ள மோதல் தவிர்ப்பு பிரதேசத்தில் ஊடுருவியுள்ள புலிகள், படையினருடனான மோதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் சடலங்களை அங்கு அடக்கம் செய்துவிட்டு அவற்றை வீடியோ படம் எடுத்து படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களையே தாம் அடக்கம் செய்வதாக உலகில் பொய்ப் பிரசாரம் செய்யும் முயற்சியொன்றை மேற்கொண்டு வருகின்றனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களைக் காப்பாற்றும் நடவடிக்கையாகவே முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் மோதல் தவிர்ப்பு பிரதேசத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. மக்களோடு மக்களாக இங்கு ஊடுருவியுள்ள புலிகள் அங்கு தமது உறுப்பினர்களின் சடலங்களை புதைத்துவிட்டு, அவர்கள் படையினரால் கொல்லப்பட்ட பொதுமக்கள் என வீடியோக்கள் மூலம் உலகுக்கு பொய்த்தகவல் வழங்குகின்றனர்.

அத்துடன் பொதுமக்கள் அமைத்துள்ள குடிசை களுக்கு மத்தியில் பதுங்கு குழிகளை அமைந்துள்ளனர். மேலும் தமது கனரக ஆயுதங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவற்றையும் இந்த மோதல் தவிர்ப்பு பிரதேசத்திலேயே புலிகள் பதுக்கி வைத்துள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

தபால் மூல வாக்களிப்புக்கான 5379 விண்ணப்பங்கள் நிராகரிப்பு – தேர்தல் திணைக்களம் தகவல்

election_ballots.jpgமேல் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கென 35ஆயிரத்து 424 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளனர். 5ஆயிரத்து 379; விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமனசிறி தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கென சுமார் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 3,038 விண்ணப்பங்களும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,102 விண்ணங்களும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,239 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்; இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 15ஆயிரத்து 789 பேரும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 10ஆயிரத்து 926 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 8ஆயிரத்து 699 பேரும் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 2ஆம் 3ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. 

தப்பிச் செல்லும் பொது மக்கள்மீது தாக்குதல் நடத்த சூசை உத்தரவு – கடற்படைப் பேச்சாளர் தகவல்

navy_spokesman_dasanayaka.jpgமுல்லைத் தீவு புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து 31 படகுகளில் தப்பிச் சென்ற  பொது மக்கள்மீது தாக்குதல் நடத்துமாறு கடற்புலிகளின் தலைவர் சூசை கடற்புலிகளுக்கு உத்தரவு பிறப்பித்தமை புலிகளின் தகவல் பரிமாற்றத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு கெப்டன் டீ.கே.பி. தஸநாயக்க  மேலும் கூறியதாவது

புதுமாத்தளன் பிரதேசத்தில் இடம்பெயர்ந்தோருக்காக எம்.வி. பின்தான் என்ற கப்பலில் உணவுப் பொருட்கள் இறக்கப்படடுக்கொண்டிருந்த நேரம் சிறுவர்களைக் கடத்திச் செல்லும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டனர். தமது பிள்ளையைக் கடத்திச் செல்லும் முயற்சியைத் தடுத்த பெற்றோரையும் பிள்ளையையும் புலிகளின் பொலிஸார்  சுட்டுக் கொன்றதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் புலிகளின் பொலிஸ் நிலையத்துக்கு தீ வைத்து பொலிஸாரையும் தாக்கியுள்ளனர்.

இதன் பின்னர் அங்கு வந்த 60 க்கும் அதிகமான புலிகள் பொது மக்களைக் கண்மூடித்தனமாகத்  தாக்கியுள்ளனர். இதனால் பலர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். அங்கிருந்த ஐ.நா. பிரதிநிதியின் முன்னிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது,  எமக்கு உணவு வேண்டாம். எங்களை இங்கிருந்து வெளியேற அனுமதியுங்கள் என பொது மக்கள் அந்த ஐ.நா. பிரதியிடம் மன்றாடிக் கேட்டுள்ளனர்.

அதன்பின்னர் அந்த மக்கள் 31 படகுகளில் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குத் தப்பிச்செல்ல முயன்றபோது படகுகளைப் பின்தொடாந்து நான்கு படகுகளில் வந்த கடற்புலிகளின் தலைவர்களான மாறன், இனியவன், ரங்கன் மற்றும் அழகன் ஆகியோர் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கான உத்தரவை கடற்புலிகளின் தலைவரான சூசையே விடுத்திருந்தார்.

உடனடியாக கடற்படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் அந்த நான்கு படகுகளும் தப்பிச் சென்றன. இப்படகுகளில் வந்த 550 பேர் பருத்தித்துறை முனைப் பிரதேசத்தில் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர் என்றும் கெப்டன தஸநாயக்க தெரிவித்தார்

ஆயுதங்களை களையாவிட்டாலும் பரவாயில்லை பொதுமக்கள் வெளியேற அனுமதியுங்கள் – புலிகளுக்கு அரசு கோரிக்கை

people-_flee.jpgபுலிகள் ஆயுதங்களை களையாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை எமது படையினர் கவனித்துக்கொள்வார்கள்  அவர்கள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ள மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர இடமளிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

புலிகளிடம் சிக்கியுள்ள மக்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நாளாந்தம் அரசகட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தருகின்றனர். வடக்கில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் சிறந்த முறையில் இடம்பெறுவது இதன் மூலம் புலனாகிறது.

ஜனவரி முதல் இதுவரை 45 ஆயிரத்து 519 பேர் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 1567 பேர் வந்துள்ளனர். அவர்கள் கூறும் கருத்துக்களைக் கேட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் கஷ்டங்கள் அனைத்தும் அரசாங்கத்தினாலல்ல என்பது நன்கு தெளிவாகின்றது.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர தொடர்ந்தும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அனைவரையும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் அழைத்து வருவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆயுதங்களை கீழே வைக்குமாறு புலிகளை அரசு கேட்டுக்கொண்டது. அதேபோன்று உலக நாடுகளும் கேட்டுக்கொண்டன. எனினும் புலிகள் அதற்கு செவிமடுக்கவில்லை. இருப்பினும்; ஆயதங்களைக் களைந்தால் தீர்வுத்திட்டம் முன்வைப்பதில் கவனம் செலுத்தும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அந்தமான் – நிகோபார் தீவுகளில் தடுத்து வைத்துள்ளோரை விடுவிக்க தூதரகம் முயற்சி

கடந்த இரு தினங்களில் மேலும் 15 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் மீன்பிடித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் லால் தெரிவித்தார். இவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 51 இலங்கை மீனவர்களை விடுதலை செய்வது குறித்து ஆராய சென்னை பிரதி உயர் ஸ்தானிகராலய குழுவொன்று நேற்று அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் கூறினார். இது தொடர்பாக வினவியபோது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இதுவரை 121 இலங்கை மீனவர்கள் சென்னை விசாகப்பட்டிணம் மற்றும் அந்த மான், நிகோபார் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாகவும் கூறினார்.

தெவிநுவர பகுதியில் இருந்து இரு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ஐவர் நேற்று முன்தினம் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர ஏற்கனவே கைது செய்யப்பட்ட 31 மீனவர்கள் விசாகப் பட்டிணத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளதோடு சென்னையில் 24 பேர் தடுத்து வைக் கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளதோடு மேற்படி இலங்கை மீனவர்கள் விரைவில் இலங்கை திரும்ப உள்ளனர்.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சென்னை பிரதி உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகள் அத்தீவு உயரதிகாரிகளுடன் பேசி இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பர் எனவும் அவர் குறிப்பிட்டார்.