பிலிபித் தொகுதியின் பாஜக வேட்பாளர் வருண் காந்தி முஸ்லீம்கள் குறித்து விஷமத்தனமாக பேசி சிக்கலில் மாட்டியுள்ள நிலையில் மேலும் சிக்கலாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லீம்களைக் கொல்வேன் என்று பேசியது தொடர்பாக அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான பதட்டத்தை ஏற்படுத்துதல், வன்முறையை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தப் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
முதல் வழக்கைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டவுடனேயே வருண் காந்தி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தனது பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நாளை முற்பகல் 11 மணிக்குள் வருண் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே வருண் காந்தியின் பேச்சு இடம் பெற்றுள்ள வீடியோ டேப்புகளை தடவியல் சோதனைக்கு அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் கலந்து கொண்ட, பேசிய அனைத்து கூட்டங்களின் வீடியோ பதிவுகளையும் கண்டுபிடித்து சமர்ப்பிக்கவும் உ.பி. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: இதற்கிடையே, உ.பி. மாநிலம் பிசால்பூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஒரு புதுப் புகார் வருண் காந்தி மீது கிளம்பியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அக்தர், பிசால்பூருக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலத்தைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.