வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை உடனுக்குடன் பெற்றுக் கொடுக்கவென 64 மருத்துவ அதிகாரிகளையும், 107 தாதியரையும் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு கடமையில் ஈடுபடுத்தியுள்ளது.
இதேநேரம் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிவாரணக் கிராமத்திற்கும் ஒரு அம்புலன்ஸ் வண்டி வீதம் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார். உலக காசநோய் தினத்தையொட்டி இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்படித் தகவல்களைத் தெரிவித்தார்.
சுகாதாரக் கல்வி பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் சரத் அமுனுகம தலைமையில் பணியகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில் டாக்டர் மஹீபால மேலும் கூறுகையில்: புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த மக்கள் வவுனியாவில் அமை க்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இக்கிராமங்களில் சுமார் 34 ஆயிரம் பேர் தங்கியுள்ளார்கள்.
இக்கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையை உடனுக்குடன் பெற்றுக்கொடுக்க வென 64 மருத்துவ அதிகாரிகளையும் 107 தாதியரையும் 19 மருத்துவ மாதுகளையும் 5 மயக்கமருந்து கொடுக்கும் டாக்டர்களையும் 12 பொது சுகாதாரப் பரிசோதகர்களையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.
இவர்கள் வவுனியா பொது வைத்தியசாலை, செட்டிக்குளம் தள வைத்தியசாலை மற்றும் பூவரசங்குளம் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள் ளனர். என்றாலும் இந்த டாக்டர்களில் ஒரு தொகுதியினர் தினமும் இந்த நிவாரணக் கிராமங்களுக்குச் சென்று மருத்துவ கிளினிக்குகளையும் நடாத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை இம் மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்கென செட்டிக்குளம் ஆஸ்பத்திரியின் மருத்துவ ஆய்வு கூட வசதிகள் மேம் படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு அங்கு நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆய்வு கூட வசதியும் ஏற்படுத்த ப்பட்டுள்ளன.
இம்மக்களுக்கு அடுத்த மாதம் முதல் காசநோய் தடுப்புக்கான சிறந்த மருத்துவ சேவையைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் அமைச்சு அதிகாரிகளும், உலக சுகாதார ஸ்தாபன பிரதிநிதிகளும், காசநோய்த் தடுப்புக்கான தேசியத் திட்ட அதிகாரிகளும் விரைவில் வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்றார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் மருத்துவ நிபுணர்களான டாக்டர் ஏ. கே. எஸ். பி. டி. அல்விஸ். டாக்டர் அமித பெரேரா, கபில சூரியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.