புலிகள் ஆயுதங்களை களையாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை எமது படையினர் கவனித்துக்கொள்வார்கள் அவர்கள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ள மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர இடமளிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
புலிகளிடம் சிக்கியுள்ள மக்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நாளாந்தம் அரசகட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தருகின்றனர். வடக்கில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் சிறந்த முறையில் இடம்பெறுவது இதன் மூலம் புலனாகிறது.
ஜனவரி முதல் இதுவரை 45 ஆயிரத்து 519 பேர் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 1567 பேர் வந்துள்ளனர். அவர்கள் கூறும் கருத்துக்களைக் கேட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் கஷ்டங்கள் அனைத்தும் அரசாங்கத்தினாலல்ல என்பது நன்கு தெளிவாகின்றது.
மக்கள் பெரும் எண்ணிக்கையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர தொடர்ந்தும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அனைவரையும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் அழைத்து வருவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஆயுதங்களை கீழே வைக்குமாறு புலிகளை அரசு கேட்டுக்கொண்டது. அதேபோன்று உலக நாடுகளும் கேட்டுக்கொண்டன. எனினும் புலிகள் அதற்கு செவிமடுக்கவில்லை. இருப்பினும்; ஆயதங்களைக் களைந்தால் தீர்வுத்திட்டம் முன்வைப்பதில் கவனம் செலுத்தும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.