கடந்த இரு தினங்களில் மேலும் 15 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் மீன்பிடித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் லால் தெரிவித்தார். இவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 51 இலங்கை மீனவர்களை விடுதலை செய்வது குறித்து ஆராய சென்னை பிரதி உயர் ஸ்தானிகராலய குழுவொன்று நேற்று அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் கூறினார். இது தொடர்பாக வினவியபோது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இதுவரை 121 இலங்கை மீனவர்கள் சென்னை விசாகப்பட்டிணம் மற்றும் அந்த மான், நிகோபார் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாகவும் கூறினார்.
தெவிநுவர பகுதியில் இருந்து இரு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ஐவர் நேற்று முன்தினம் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர ஏற்கனவே கைது செய்யப்பட்ட 31 மீனவர்கள் விசாகப் பட்டிணத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளதோடு சென்னையில் 24 பேர் தடுத்து வைக் கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளதோடு மேற்படி இலங்கை மீனவர்கள் விரைவில் இலங்கை திரும்ப உள்ளனர்.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சென்னை பிரதி உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகள் அத்தீவு உயரதிகாரிகளுடன் பேசி இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பர் எனவும் அவர் குறிப்பிட்டார்.