ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை நிலைகள் தொடர்பாக தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இந்த தொலைபேசி உரையாடலின் போது இலங்கையில் மனிதாபிமான நிலைவரங்கள் தொடர்பான ஐ.நா.வின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையின் அண்மைய அறிக்கை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வடக்கின் மனிதாபிமான நிலைமைகள் இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட அரசாங்கத்தின் ஏனைய உதவிகள், இடம்பெயர்ந்தவர்களுக்கான கிராமங்களின் நிலைமைகள், அரசு மேற்கொள்ளும் அரசியல் ரீதியான முன்னெடுப்புகள் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் பேசப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விடுதலைப் புலிகள் பொதுமக்களை விடுவிக்க எதிர்ப்பு காட்டி வருவதால் அம் மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருவதாகவும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு தப்பிவரும் மக்கள் எதிர் நோக்கும் அச்சுறுத்தல் மற்றும் அபாயம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதேநேரம், விடுதலைப்புலிகள் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் பதுங்கு குழிகளை அமைத்திருப்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அதை புகைப்படங்களுடன் சமர்ப்பிக்க முடியுமென்றும் ஜனாதிபதி ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு தெரிவித்திருக்கிறார்.
எவ்வாறிருப்பினும், விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், இது சாதகமான சமிக்ஞை என்பதுடன், சுருங்கி வரும் புலிகளின் பகுதியிலிருந்து பொதுமக்கள் விடுபட்டு வருவதானது சிறைவைப்பிலிருந்து மக்களுக்கு ஓய்வு கொடுப்பதற்கு உதவியாக இருக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
இதேநேரம், இடம்பெயர்ந்தவர்களுக்கான உணவு விநியோகம் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் வெளியிட்ட கரிசனைக்கு பதிலளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு மற்றும் தடங்கல்களுக்கு மத்தியிலும் போதியளவான உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்திருக்கிறது.
அத்துடன், உணவு விநியோகம் தொடர்பான புள்ளி விபரங்கள் ஐ.நா. செயலாளருக்கு கிடைக்கும் வகையில் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ பான் கீ மூனிடம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி செயலக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதேநேரம், விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து இதன்போது குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் அடங்கலாக பொதுமக்கள் இருக்கும் பகுதிகள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடாதென்ற உத்தரவை படையினர் கடுமையாக கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன், பாதுகாப்பு படையினரால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு அல்லது பாதுகாப்பு வலய பகுதிகளில் எந்த தாக்குதலும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.