கடந்த இருவார காலத்தில்; 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு ஆணையாளர் மேலும் கூறியதாவது,
இந்த 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் இரு கட்டங்களாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பல்மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. முல்லைத்தீவில் துறைமுகம் இல்லாத காரணத்தால் கப்பல் கடலில் நங்கூரமிடப்பட்டு சிறு படகுகள் மூலமே தரையிறக்கப்பட்டன. பின்னர் இக்கப்பல் மூலம் முல்லைத்தீவில் புலிகளிடம் சிக்கியுள்ள நோயாளிகள் திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இவ்வாறு கடந்த பெப்ரவரி மாதம் முதல் இம்மாதம் 16 ஆம் திகதிவரையில் 4116 நோயாளிகள் திருகோணமலைக்கு கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
புலிகளால் அச்சுறுத்தல் இருந்தபோதும் ஒரு மாதத்துக்கு மூன்று முறை இக்கப்பல் மூலம் முல்லைத்தீவுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் நடவடிக்கை பல கஷ்டங்களுக்கும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.