ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத பிறநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரித்தானியாவிற்குள் உட்பிரவேசிப்பதற்கு முன்னர் குடியேற்றக் கட்டணமாக 50 ஸ்ரேலிங் பவுண்களை செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது. இப்புதிய சட்டம் குடியேற்ற முறைமையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக அடுத்த மாதத்தில் அறிமுகமாகவுள்ளது. இதன் மூலம் பெறப்படும் பணம் குடியேற்றவாசிகளின் பொதுச் சேவைக்கான மேலதிக செலவை ஈடு செய்யும் பொருட்டு உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு பெறப்படும் குடியேற்றக் கட்டணத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு 70 மில்லியன் டொலர்களை பெற முடியுமென அந்நாட்டு அரசாங்கம் கருதுகிறது. பெருமளவிலான குடியேற்றவாசிகளால் தமது வளங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் அதிகார சபைகளிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இப்புதிய குடியேற்றக் கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் சமூகம் மற்றும் உள்ளூர் அரசாங்கத்தின் உயரதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; எமது சமூகத்தில் குடியேற்றவாசிகள் முக்கிய பங்கை வகிக்கின்றனர்.இவர்கள் எமது சமூகத்திற்கு செய்யும் பங்களிப்பு தொடர்பில் விவாதங்கள் தேவைப்படுகின்றன. தற்போது குடியேற்றக் கட்டணத்தின் மூலம் அறவிடப்படும் பணம் குடியேற்றவாசிகள் செறிந்து வாழும் பிரதேசங்களிற்கே வழங்கப்படும் என்றார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளின் மாணவர்கள் தமது முதல் வருடக் கல்விக்கும் 9 மாதங்களுக்குரிய வாழ்க்கைச் செலவிற்கும் போதுமான பணம் உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கோரப்படுகின்றனர். இச்சட்டத்தின் படி இத்தொகை பணமாக இருக்க வேண்டும். பங்குகளாகவோ ஓய்வூதியத் தொகையாகவோ இருக்கும் பட்சத்தில் தூதுவராலயம் இதனை ஏற்றுக் கொள்ளாது. அத்துடன், அவர்களது பணம் வங்கிக் கணக்கிலிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இப்பணத்தின் தொகை அவர்கள் தொடரவுள்ள கற்கை நெறியின் காலம் மற்றும் அவர்கள் லண்டனிலா அல்லது புறநகர்களிலா தங்கியிருக்கப் போகின்றனர் என்பதற்கேற்ப மாறுபடும்.