March

March

இரணைமடுக்குளத்தை பிரதானப்படுத்தி வடக்கில் பாரிய நீர் விநியோகத் திட்டம் – அமைச்சர் அமரவீர

mahinda-amaraweera.jpgஇரணை மடுக்குளத்தை பிரதானப்படுத்தி வடக்கில் பாரிய நீர் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்படுமென நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.  அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்துத் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணம் படையினரால் விடுவிக்கப்பட்டு மூன்று மாத காலப் பகுதிக்குள் நீர் வழங்கல் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது போலவே வடக்கிலும் மேற்கொள்ள அமைச்சு திட்டமிட்டுள்ளது. வடக்கில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதும் 12,500 மில். ரூபா செலவில் புதிய நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

யுத்த சூழ்நிலைகள் காரணமாக வடக்கிற்கு ஒதுக்கப்படும் நிதிகள் உரிய முறையில் பயன்படுத்த முடியாமல் இருந்தது. சமாதான காலப்பகுதியில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க முனைந்த வேளையில் புலிகள் அதனை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாங்களே செய்ய வேண்டுமெனவும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி தமக்கு ஊடாகவே செல்ல வேண்டுமென கோரினர். இதனால் குறைந்தளவு நிதியையே கடந்த காலங்களில் ஒதுக்க நேர்ந்தது.

தற்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வட மாகாணம் வந்துள்ளது. படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதும் முதற்கட்ட பணிகள் முன்னெடுக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நாம்செய்து வருகின்றோம். இன்னும் மூன்று மாத காலப் பகுதிக்குள் வேலைகள் முன்னெடுக்கப்படும்.

வடக்கில் இரணைமடுக்குளம் பிரதான நீர்த்தேக்கமாக இருந்து வந்துள்ளது. அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப் பகுதியில் அக்குளத்தை தமது தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தினர்.

தமிழ்மக்களுக்காக போராடுவதாகக் கூறிக் கொண்டு அம்மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தனர். தமிழ் மக்கள் மீது உண்மையாக அக்கறையிருந்திருந்தால் இரணைமடுக்குளத்தை சேதப்படுத்தியிருக்க மாட்டார்கள். தற்போது இரணைமடுக்குளம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் வட பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு எமது அமைச்சு தயாராக இருக்கிறது.

இவ்வாண்டு உலக நீர் தினத்தின் தொனிப் பொருளாக சகலருக்கும் சமமான உரிமை வழங்குவதாகும். நீரின்றி மனிதர்கள் மட்டுமல்ல ஜீவராசிகளும் உயிர்வாழ முடியாது. இந்த நீர்வளத்தை எல்லாக் காலங்களிலும் அனைத்து தரப்பினரும் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். புதிய நீர் விநியோகத் திட்டத்தின் ஊடாக குடிநீர் வழங்குவது என்பது துரியமாக அபிவிருத்தி கண்டுவரும் இந்த யுகத்தில் நீரைப் பாதுகாப்பதற்கும் நீர்ப்போசனைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் புதிய செயல் திட்டங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

மழை நீரைப் பயன்படுத்துவது பற்றி சிந்திக்கப்படுகிறது. மழை நீரை சேமித்து பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. நீருக்கான கட்டணத்தை குறைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். எதிர்வரும் காலங்களில் கொழும்பு மாநகரப் பகுதிகளிலும் மழை நீரைச் சேமிப்பதற்கான வழிவகைகள் குறித்து அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

சுத்தமான குடிநீரை 78 வீதமான மக்கள் பயன்படுத்துகின்றனர். 23 வீதமானோர் பாவனைக்கு உதவாத நீரைப் பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் இதன் காரணமாகவே தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. அவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கொழும்பு மாநகர பகுதியில் சில இடங்களில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. களனி வலது கரை நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை நீர் வழங்கல் அமைச்சு மேற்கொண்டு வருகிறது. இதற்கென 6500 மில். ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் அமைச்சு சலருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு முதலீட்டாகும். அசுத்த நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.

சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும். அசுத்த நீரின் பயனால் சிறுவர் நோய்வாய்ப்படும் போது வைத்தியசாலைகளுக்காக செலவிடும் நிதி மிச்சப்படுத்தப்படும். நீர் விநியோகத்திற்கென இவ்வாண்டு 29,000 மில். ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நாடு முழுவதிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சு முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சுக்கு வழங்கிய காலக்கெடு முடிவடைகிறது 2 ஆயிரம் அதிபர்கள் ராஜிநாமா செய்ய ஆயத்தம்

நீண்டகாலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்திவரும் அதிபர்கள் கல்வியமைச்சுக்கு ஒரு மாதகால அவகாசம் வழங்கிய போதிலும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படாததால் சுமார் 2 ஆயிரம் அதிபர்கள் தமது பதவிகளை எதிர்வரும் புதன்கிழமை இராஜிநாமா செய்யவுள்ளனர்.

இது தொடர்பில் கல்விசார் ஊழியர் சங்கத்தின் தேசிய இணைப்பாளர் கே. சதாநந்தலிங்கம் தெரிவிக்கையில்; கடந்த 16 வருடகாலமாக அதிபர்களின் பதவியுயர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 25 ஆம் திகதி எமது சங்கம் நடத்திய அதிபர்களின் மகாநாட்டில் அவர்களால் ஏகோபித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதாவது எமது பிரச்சிணைகளை தீர்க்குமாறு கல்வியமைச்சுக்கு ஒரு மாதகால காலக்கெடு வழங்கப்பட்டது. இல்லாவிட்டால் தமது பதவிகளை ராஜிநாமா செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் வலியுறுத்தும் நோக்கில் மாகாநாடு இடம்பெற்ற கொழும்பு தேசிய நூலகத்திலிருந்து விகாரமாதேவி பூங்கா வரை பேரணி நடத்தப்பட்டு சத்தியாக்கிரகமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அதிபர்களின் ஒரு மாதகால அவகாசம் முடிவுறும் தறுவாயிலும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையினையும் கல்வியமைச்சு எடுக்காதநிலையில் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை அதிபர் சேவையில் அதிபர் தரம் வாய்ந்த அதிபர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்யவுள்ளனர்.

முதலில் பெலவத்தை சந்தியில் காலை ஒன்று கூடும் இரண்டாயிரம் அதிபர்கள், கால்நடையாக கல்வியமைச்சுக்கு சென்று கல்வியமைச்சரிடம் தாம் பெற்ற அதிபர் சேவைக்கான நியமனக்கடிதங்களை வழங்கவுள்ளதுடன் தம்மை முன்னர் உள்ளதுபோல் ஆசிரியர் சேவையில் அமர்த்துமாறு கோரவுள்ளனர்.

“வட,கிழக்கில் 45 ஆயிரம் யுத்த விதவைகள்’ வடக்கு, கிழக்கில் 85 ஆயிரம் விதவைகள்

parliament.jpg“வட, கிழக்கில் 45 ஆயிரம் யுத்த விதவைகள்’ வடக்கு, கிழக்கில் 85 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இவர்களில் 45 ஆயிரம் பேர் யுத்தத்தால் விதவைகளானவர்களென தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கடந்த ஜனவரியிலிருந்து இன்றுவரை கிழக்கு மாகாணத்தில் 46 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற படையினரின் விதவைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓய்வூதிய சட்டமூல திருத்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

“யுத்தத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் தினமும் அதிகரித்து வருகின்றது. வடக்கு, கிழக்கில் மட்டும் 85 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இதில் கிழக்கில் 49 ஆயிரம் பேரும் வடக்கில் 36 ஆயிரம் பேரும் உள்ளனர். இந்த 85 ஆயிரம் விதவைகளில் 45 ஆயிரம் பேர் யுத்தத்தால் விதவைகளானவர்கள். இவர்களில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் 24 ஆயிரம் பேர் உள்ளனர். இலங்கையில் அதிகமான விதவைகளைக் கொண்ட மாகாணமாக கிழக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதைவிட கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் 173 பேர் காணாமல்போயுள்ளனர். 2009 ஜனவரிக்கு பின்னர் மட்டும் இன்றுவரை 46 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வகட்சிக்குழு இதுவரை 107 தடவைகள் கூடியுள்ளது. இதில் ஒவ்வொரு தடவையும் பங்குபற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் பங்கேற்கவில்லையென ஜனாதிபதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆனந்தசங்கரியைத் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று நினைத்துவிட்டார் போலுள்ளது. சர்வகட்சிக் குழுக் கூட்டத்திற்கு இன்றுவரை எமக்கு எந்த வித அழைப்பும் உத்தியோகபூர்வமாக விடுக்கப்படவில்லை.

மதத்தலங்களில் வைத்து புலிகளால் 400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசு கூறுகின்றது. மதத்தலங்களில் வைத்து படையினரால் 1246 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசு என்ன கூறுகின்றது.

1990 ஜூன் வீரமுனை பத்ர காளியம்மன் ஆலயத்தில் வைத்து நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோன்று 1993 நவம்பர் யாழ். குருநகர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1994 ஆகஸ்ட் நவாலி தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, 1997 ஜூன் வவுனியா வவுனிக்குளத்தில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 2005 மார்ச் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 2005 டிசம்பர் மட்டக்களப்பில் தேவாலயத்திற்குள் வைத்து எமது பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு இன்னும் எத்தனை தாக்குதல்களை அரசு நடத்தியுள்ளது. எனவே யுத்தம் நிறுத்தப்படுவதன் மூலமே விதவைகள் உருவாவதையும் அநியாய உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்.

மலையக ரயில் பாதைகளும் பாலங்களும்

bridge.jpgமலையக சேவையில் இப்போது ஈடுபடுத்தப்படும் ரயில்களிலும் பார்க்க வலுவும் பாரமும் கூடிய ரயில்களை ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போதுள்ள ரயில் பாதைகளும் பாலங்களும் இதற்கு ஈடுகொடுக்கக் கூடியனவா என்பது பற்றிப் பொறியியலாளர்கள் பரிசீலித்து வருகின்றனர். கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கல்லூரிக்கு அருகிலுள்ள பாலம் பரிசீலனைக்கு உட்படுவதைப் படத்தில் காணலாம்.

ஐ.நா. பாதுகா‌ப்பு அவை‌யி‌ல் இல‌ங்கை ‌பிர‌ச்சினையை விவாதிக்க அமெ‌ரி‌க்கா ஆதரவு

un-logo.jpgஐ.நா.  பாதுகா‌ப்பு அவை‌யி‌ல் இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சினை விவகாரத்தை வரும் 26ம் தேதி  மீ‌ண்டு‌ம் ‌விவா‌தி‌ப்பதை அமெ‌ரி‌க்கா ஆத‌ரி‌ப்பதாக அ‌ந்நா‌ட்டி‌‌ன் ‌நிர‌ந்தர உறு‌ப்‌பின‌ர் சூச‌ன் ரை‌ஸ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.  இல‌ங்கை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ம‌னித அவல‌ம் கு‌றி‌த்து‌ம், இன‌ப்‌ பிர‌ச்சனை‌யி‌ன் த‌ற்போதைய ‌நிலை கு‌றி‌த்து‌ம் அமெ‌ரி‌க்கா ‌மிகு‌ந்த அ‌க்கறையு‌ம் கவலையு‌ம் கொ‌ண்டு‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர் எ‌ன்று ஐ.நா. அலுவலகத்தில் செயல்படும் பத்திரிக்கை  ஒன்று (Inner City Press) தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ந்த பத்திரிக்கைக்கு கட‌ந்த 19ஆ‌ம் தே‌தி, ‌பி‌ரி‌‌ட்ட‌ன் தூத‌ர் ஜா‌ன் சாவெ‌ர்‌ஸ் அ‌ளி‌த்து‌‌ள்ள பே‌ட்டி‌யி‌ல், இல‌ங்கை இன‌ப்‌ ‌பிர‌ச்சனையை ஐ.நா. பாதுகா‌ப்பு அவை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌விவா‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ஐரோ‌ப்‌பிய ஒ‌ன்‌றிய‌த்தை‌ச் சே‌ர்‌ந்த உறு‌ப்‌பின‌ர்க‌ள் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்ததாக‌த் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்த‌க் கோ‌ரி‌க்கையை ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் தற்காலிக உறுப்பினர்களாக உள்ள ஆஸ்ட்ரியா, மெக்ஸிகோ, கோஸ்டாரீகா ஆகிய நாடுகளு‌ம் வ‌லியுறு‌த்‌தின.

ஆனா‌ல், இதனை பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினரான சீனா எதிர்‌த்து‌ள்ளது. இலங்கையில் நடைபெறுவது அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனை. அதனால் சர்வதேச அமைதிக்கோ பாதுகாப்பிற்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை, எனவே அதனை பாதுகாப்புப் பேரவையி்ல் விவாதிக்கக் கூடாது என்று சீனா கூறியுள்ளது.

அதேவேளை இலங்கை விவகாரத்தை ஐ.நா. அவையில் மீண்டும் விவாதிக்க சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளதை மறு பரிசீலைனை செய்து ஒத்துழைப்பு வழங்குமாறு விடுதலைப்புலிகள் சார்பில் அரசியல்துறை  பொறுப்பாளர் பா.நடேசன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேர்வின் சில்வாவின் இடையூறு குறித்து பாராளுமன்றத்தில் சபாநாயகர் கடும் விசனம்

parliament.jpgசபை நடவடிக்கைகளின் போது தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இடையூறுகள் குறித்து விசனம் வெளியிட்ட சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார, இவ்வாறான செயற்பாடுகளால் தான் வீண்பழியை சுமக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிக்கைக்கான நேரம் தொட்டே அமைச்சர் மேர்வின் சில்வா அவ்வப்போது குறுக்கிட்டு பேசிக் கொண்டிருந்தார்.  அத்துடன், சபாநாயகர் தொடர்பாக ஊடகமொன்றில் வெளியான செய்தி தொடர்பில் சுட்டிக்காட்டி சபாநாயகர் பேசிக் கொண்டிருந்தவேளை, அமைச்சர் மேர்வின் சில்வா குறுக்கிட்டு (ஒலி வாங்கிமுடுக்கிவிடப்பட்டிருக்கவில்லை) ஏதோ கூறவே, நான் விடுக்கும் அறிக்கைகளை உங்களால் ஆட்சேபனைக்குட்படுத்த முடியாது என்று அமைச்சரை நோக்கி சபாநாயகர் கடுமையான தொனியில் தெரிவித்தார்.

இதன் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான ரவி கருணாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்க அமைச்சரொருவரும் மத்திய வங்கியின் ஆளுநரும் சென்றிருப்பது ஏனெனக் கேட்டு ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கேள்வியெழுப்பினர்.

இதன்போதும் குறுக்கிட்ட அமைச்சர் மேர்வின் சில்வா ரவி கருணாநாயக்காவை நோக்கி ஏதேதோ கூறிக் கொண்டிருந்தார். இதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்த ரவி கருணாநாயக்க எம்.பி., இது அங்கொடையல்ல, பாராளுமன்றம் என்பதை சபாநாயகர் அவருக்கு (மேர்வின் சில்வாவுக்கு) கூற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

எனினும் மேர்வின் சில்வா தொடர்ந்தும் குறுக்கீடு செய்து கொண்டிருக்கவே அதை மீண்டும் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்த எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோசப் மைக்கேல் பெரேரா சபையில் தவறான செயற்பாடுகளுக்கும் அவமதிப்புகளுக்கும் இடமளித்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என சபாநாயகரை குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக பேசிய சபாநாயகர், முதலில் அறிவுறுத்த முடியும் .அதை அறிந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது உங்களுக்கு தெரியும் என்று ஜோசப் மைக்கல் பெரேராவை நோக்கி கூறியதுடன், அதைத் தொடர்ந்து பிரதம கொறடாவின் குற்றச்சாட்டை பாருங்கள். எனக்கு ஏன் இந்த வீண்பழி? நான் எப்போதும் உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். இடையூறு செய்ய வேண்டாமென கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மேர்வின் சில்வாவை நோக்கியும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே ஒரு கட்டத்தில் கேள்வி நேரத்தின் போது உரிய பதில்களை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சபைக்கு சமுகளிக்குமாறு கேட்டுக் கொள்வதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

இயக்குனர் சீமானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

seeman.jpgஇலங் கைத் தமிழர் பிரச்சினைக்காக புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புதுச்சேரி காவல்துறையினர் அவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இயக்குனர் சீமான் நெல்லை பொலிஸ் ஆணையர் மஞ்சுநாதா முன்னிலையில் சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து இயக்குனர் சீமானை கைது செய்த பொலிஸார், புதுச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு நேற்று புதுச்சேரி மாவட்ட உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இயக்குனர் சீமானிடம், நீங்கள் விடுதலை பிணை கேட்டு உள்ளீர்களா என்று கேட்டார். அதற்கு இயக்குனர் சீமான், இது சம்பந்தமான விவாதம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, சீமானை எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்

குடிநீரென நச்சு திராவகத்தை பருகிய தமிழ் யுவதி உயிரிழப்பு

கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் வியாழக்கிழமை குடிநீரென நினைத்து தவறுதலாக நச்சுத்திராவகத்தை அருந்திய இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். நோயாளர்களைப் பார்வையிடுவதற்குச் செல்வோர் தங்கியிருக்கும் பகுதியில் பொறுப்பற்ற விதத்தில் குடிநீர்ப் போத்தலில் இந்த நச்சுத் திராவகம் வைக்கப்பட்டிருந்ததே இந்தத் துயர சம்பவத்திற்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

நோய்வாய்ப்பட்டு பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர் ஒருவரைப் பார்வையிட வேறு சிலருடன் சென்ற இந்த யுவதி நோயாளர்களை பார்வையிடுவோர் தங்கியிருக்கும் பகுதியில் இருந்துள்ளனர்.

அவ்விடத்தில் குடிநீர் போத்தல் ஒன்று (மினரல் வோட்டர் போத்தல்) இருக்கவே தன்னுடன் வந்தவர்களது குடிநீர் போத்தலென நினைத்து அதிலிருந்ததை அந்த யுவதி குடித்துள்ளார். ஆனால், அதிலிருந்ததோ நச்சுத்திராவகம் நிலத்தை மெருகூட்டுவதற்காக (பொலிஷ்) குடிநீர் போத்தலினுள் அந்த திராவகத்தை வேலையாட்கள் அங்கு வைத்திருந்துள்ளனர்.

அதிலிருந்ததை அந்த யுவதி குடித்ததும் அவருக்கு தலைசுற்றலுடன் மயக்கமேற்படவே அவருடன் சென்றவர்கள் அந்த யுவதியை உடனடியாக அந்த ஆஸ்பத்திரியின் வெளிநோயாளர் பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

5,000 ரூபா அறவிடப்பட்ட பின்னர் அவரை டாக்டர் ஒருவர் பரிசோதித்ததுடன் அது சாதாரண தலைச்சுற்றலெனவும் வேறொன்றுமில்லையென்றும் கூறியுள்ளார்.  எனினும் அந்த யுவதி பெரும் அவஸ்தைப்படவே டாக்டரிடம் மீண்டும் அவரைச் சோதனையிடுமாறு யுவதியுடன் சென்றவர்கள் கூறவே அவருக்கு ஒன்றும் இல்லை பயப்பட வேண்டாமென டாக்டர் மீண்டும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் நோயாளர்களை பார்வையிடுவோர் அமரும் பகுதிக்கு வந்த ஆஸ்பத்திரி ஊழியரொருவர் அந்தப் போத்தலை அங்கு தேடவே நடந்த விபரத்தை அங்கிருந்தவர்கள் கூறியதுடன் அந்த யுவதியை வெளிநோயாளர் பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.  பதற்றமடைந்த அந்த ஊழியர் உடனடியாக வெளிநோயாளர் பிரிவுக்குச்சென்று அந்த டாக்டரிடம் விடயத்தை கூறியதுடன் அது நிலத்தை பொலிஷ் செய்யப்பயன்படும் நச்சுத் திரவமெனக் கூறவே மயக்க நிலையிலிருந்த அந்த யுவதியை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்று சிகிச்சையளித்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி அந்த யுவதி உயிரிழந்துள்ளார். மேல்மாகாண சபை கல்வித்திணைக்களத்தில் பணியாற்றும் யோ.சண்முகப்பிரியா (32 வயது) என்ற திருகோணமலையைச் சேர்ந்தவருக்கே இந்த பரிதாபநிலை ஏற்பட்டது.
 

தனியார் துறையினரும் வாகன அணி மூலம் ஏ9 வீதியூடாகப் பொருள்களை எடுத்துவர ஏற்பாடு

lorries.jpgகொழும்பில் இருந்து ஏ9 வீதியூடாக தனியார் வர்த்தகர்களும் தமக்குத் தேவையான பொருள்களை அனுப்ப வசதியாக வாகன அணியை ஏற்பாடு செய்வது குறித்து ஆராயப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் நாயகம் அலுவலகத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.அத்தியாவசிய சேவைகள் நாயகத்தின் ஏற்பாட்டில் 22லொறிகள் மூலம் நிவாரணப் பொருள்கள் கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.

குடாநாட்டைச் சேர்ந்த தனியார் துறையினரும் ஏ9 வீதியூடாக பொருள்களை வாகன அணி மூலம் எடுத்துச் செல்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களான அரிசி,  சீனி, பருப்பு, கோதுமைமா ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரால்  ஏற்பாடு செய்யப்படும் வாகன அணிகள் மூலமாகவும்
ஏனைய பொருள்களை  தனியார் துறையினர் ஏற்பாடு செய்யும் வாகன அணி மூலமாகவும்   குடாநாட்டுக்கு எடுத்துச் செல்வது குறித்து ஆராயப்பட்டுள்ளது. யாழ். செயலகத்தினரும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திணைக்களமும் இணைந்து தனியார் துறைக்குரிய வாகன அணியை ஏற்பாடுகள்  செய்யவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது. வாகன அணிக்குப் புறம்பாக கப்பல் கள் மூலமும் குடாநாட்டுக்குப் பொருள்களை எடுத்துவரும் பணிகள் தொடர்ந்து நடை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் பெயரில் குண்டு மிரட்டல்

kerala-airport.jpgகேரளாவில் உள்ள விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு நேற்றிரவு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன். இன்னும் 3 மணி நேரத்தில் கேரளாவில் உள்ள ஒரு விமான நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போகிறோம்என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

இது குறித்து கேரள போலீசாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த விமான நிலையங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு பிரிவு போலீசாரும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசாரும் தீவிர சோதனை நடத்தினர். விமான நிலையத்துக்கு வருபவர்கள், பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பயணிகளின் உடமைகளும் சோதனையிடப்பட்டன. புலிகள் பெயரில் குண்டு மிரட்டல் வந்ததால் கேரளாவில் பரபரப்பாக இருக்கிறது.