இரணைமடுக்குளத்தை பிரதானப்படுத்தி வடக்கில் பாரிய நீர் விநியோகத் திட்டம் – அமைச்சர் அமரவீர

mahinda-amaraweera.jpgஇரணை மடுக்குளத்தை பிரதானப்படுத்தி வடக்கில் பாரிய நீர் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்படுமென நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.  அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்துத் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணம் படையினரால் விடுவிக்கப்பட்டு மூன்று மாத காலப் பகுதிக்குள் நீர் வழங்கல் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது போலவே வடக்கிலும் மேற்கொள்ள அமைச்சு திட்டமிட்டுள்ளது. வடக்கில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதும் 12,500 மில். ரூபா செலவில் புதிய நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

யுத்த சூழ்நிலைகள் காரணமாக வடக்கிற்கு ஒதுக்கப்படும் நிதிகள் உரிய முறையில் பயன்படுத்த முடியாமல் இருந்தது. சமாதான காலப்பகுதியில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க முனைந்த வேளையில் புலிகள் அதனை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாங்களே செய்ய வேண்டுமெனவும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி தமக்கு ஊடாகவே செல்ல வேண்டுமென கோரினர். இதனால் குறைந்தளவு நிதியையே கடந்த காலங்களில் ஒதுக்க நேர்ந்தது.

தற்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வட மாகாணம் வந்துள்ளது. படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதும் முதற்கட்ட பணிகள் முன்னெடுக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நாம்செய்து வருகின்றோம். இன்னும் மூன்று மாத காலப் பகுதிக்குள் வேலைகள் முன்னெடுக்கப்படும்.

வடக்கில் இரணைமடுக்குளம் பிரதான நீர்த்தேக்கமாக இருந்து வந்துள்ளது. அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப் பகுதியில் அக்குளத்தை தமது தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தினர்.

தமிழ்மக்களுக்காக போராடுவதாகக் கூறிக் கொண்டு அம்மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தனர். தமிழ் மக்கள் மீது உண்மையாக அக்கறையிருந்திருந்தால் இரணைமடுக்குளத்தை சேதப்படுத்தியிருக்க மாட்டார்கள். தற்போது இரணைமடுக்குளம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் வட பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு எமது அமைச்சு தயாராக இருக்கிறது.

இவ்வாண்டு உலக நீர் தினத்தின் தொனிப் பொருளாக சகலருக்கும் சமமான உரிமை வழங்குவதாகும். நீரின்றி மனிதர்கள் மட்டுமல்ல ஜீவராசிகளும் உயிர்வாழ முடியாது. இந்த நீர்வளத்தை எல்லாக் காலங்களிலும் அனைத்து தரப்பினரும் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். புதிய நீர் விநியோகத் திட்டத்தின் ஊடாக குடிநீர் வழங்குவது என்பது துரியமாக அபிவிருத்தி கண்டுவரும் இந்த யுகத்தில் நீரைப் பாதுகாப்பதற்கும் நீர்ப்போசனைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் புதிய செயல் திட்டங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

மழை நீரைப் பயன்படுத்துவது பற்றி சிந்திக்கப்படுகிறது. மழை நீரை சேமித்து பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. நீருக்கான கட்டணத்தை குறைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். எதிர்வரும் காலங்களில் கொழும்பு மாநகரப் பகுதிகளிலும் மழை நீரைச் சேமிப்பதற்கான வழிவகைகள் குறித்து அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

சுத்தமான குடிநீரை 78 வீதமான மக்கள் பயன்படுத்துகின்றனர். 23 வீதமானோர் பாவனைக்கு உதவாத நீரைப் பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் இதன் காரணமாகவே தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. அவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கொழும்பு மாநகர பகுதியில் சில இடங்களில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. களனி வலது கரை நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை நீர் வழங்கல் அமைச்சு மேற்கொண்டு வருகிறது. இதற்கென 6500 மில். ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் அமைச்சு சலருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு முதலீட்டாகும். அசுத்த நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.

சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும். அசுத்த நீரின் பயனால் சிறுவர் நோய்வாய்ப்படும் போது வைத்தியசாலைகளுக்காக செலவிடும் நிதி மிச்சப்படுத்தப்படும். நீர் விநியோகத்திற்கென இவ்வாண்டு 29,000 மில். ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நாடு முழுவதிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சு முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *