நீண்டகாலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்திவரும் அதிபர்கள் கல்வியமைச்சுக்கு ஒரு மாதகால அவகாசம் வழங்கிய போதிலும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படாததால் சுமார் 2 ஆயிரம் அதிபர்கள் தமது பதவிகளை எதிர்வரும் புதன்கிழமை இராஜிநாமா செய்யவுள்ளனர்.
இது தொடர்பில் கல்விசார் ஊழியர் சங்கத்தின் தேசிய இணைப்பாளர் கே. சதாநந்தலிங்கம் தெரிவிக்கையில்; கடந்த 16 வருடகாலமாக அதிபர்களின் பதவியுயர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 25 ஆம் திகதி எமது சங்கம் நடத்திய அதிபர்களின் மகாநாட்டில் அவர்களால் ஏகோபித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதாவது எமது பிரச்சிணைகளை தீர்க்குமாறு கல்வியமைச்சுக்கு ஒரு மாதகால காலக்கெடு வழங்கப்பட்டது. இல்லாவிட்டால் தமது பதவிகளை ராஜிநாமா செய்வதென முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் வலியுறுத்தும் நோக்கில் மாகாநாடு இடம்பெற்ற கொழும்பு தேசிய நூலகத்திலிருந்து விகாரமாதேவி பூங்கா வரை பேரணி நடத்தப்பட்டு சத்தியாக்கிரகமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அதிபர்களின் ஒரு மாதகால அவகாசம் முடிவுறும் தறுவாயிலும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையினையும் கல்வியமைச்சு எடுக்காதநிலையில் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை அதிபர் சேவையில் அதிபர் தரம் வாய்ந்த அதிபர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்யவுள்ளனர்.
முதலில் பெலவத்தை சந்தியில் காலை ஒன்று கூடும் இரண்டாயிரம் அதிபர்கள், கால்நடையாக கல்வியமைச்சுக்கு சென்று கல்வியமைச்சரிடம் தாம் பெற்ற அதிபர் சேவைக்கான நியமனக்கடிதங்களை வழங்கவுள்ளதுடன் தம்மை முன்னர் உள்ளதுபோல் ஆசிரியர் சேவையில் அமர்த்துமாறு கோரவுள்ளனர்.