சபை நடவடிக்கைகளின் போது தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இடையூறுகள் குறித்து விசனம் வெளியிட்ட சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார, இவ்வாறான செயற்பாடுகளால் தான் வீண்பழியை சுமக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார்.
பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிக்கைக்கான நேரம் தொட்டே அமைச்சர் மேர்வின் சில்வா அவ்வப்போது குறுக்கிட்டு பேசிக் கொண்டிருந்தார். அத்துடன், சபாநாயகர் தொடர்பாக ஊடகமொன்றில் வெளியான செய்தி தொடர்பில் சுட்டிக்காட்டி சபாநாயகர் பேசிக் கொண்டிருந்தவேளை, அமைச்சர் மேர்வின் சில்வா குறுக்கிட்டு (ஒலி வாங்கிமுடுக்கிவிடப்பட்டிருக்கவில்லை) ஏதோ கூறவே, நான் விடுக்கும் அறிக்கைகளை உங்களால் ஆட்சேபனைக்குட்படுத்த முடியாது என்று அமைச்சரை நோக்கி சபாநாயகர் கடுமையான தொனியில் தெரிவித்தார்.
இதன் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான ரவி கருணாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்க அமைச்சரொருவரும் மத்திய வங்கியின் ஆளுநரும் சென்றிருப்பது ஏனெனக் கேட்டு ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கேள்வியெழுப்பினர்.
இதன்போதும் குறுக்கிட்ட அமைச்சர் மேர்வின் சில்வா ரவி கருணாநாயக்காவை நோக்கி ஏதேதோ கூறிக் கொண்டிருந்தார். இதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்த ரவி கருணாநாயக்க எம்.பி., இது அங்கொடையல்ல, பாராளுமன்றம் என்பதை சபாநாயகர் அவருக்கு (மேர்வின் சில்வாவுக்கு) கூற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
எனினும் மேர்வின் சில்வா தொடர்ந்தும் குறுக்கீடு செய்து கொண்டிருக்கவே அதை மீண்டும் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்த எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோசப் மைக்கேல் பெரேரா சபையில் தவறான செயற்பாடுகளுக்கும் அவமதிப்புகளுக்கும் இடமளித்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என சபாநாயகரை குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் முகமாக பேசிய சபாநாயகர், முதலில் அறிவுறுத்த முடியும் .அதை அறிந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது உங்களுக்கு தெரியும் என்று ஜோசப் மைக்கல் பெரேராவை நோக்கி கூறியதுடன், அதைத் தொடர்ந்து பிரதம கொறடாவின் குற்றச்சாட்டை பாருங்கள். எனக்கு ஏன் இந்த வீண்பழி? நான் எப்போதும் உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். இடையூறு செய்ய வேண்டாமென கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மேர்வின் சில்வாவை நோக்கியும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே ஒரு கட்டத்தில் கேள்வி நேரத்தின் போது உரிய பதில்களை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சபைக்கு சமுகளிக்குமாறு கேட்டுக் கொள்வதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.