கப்பல் ஓட்டிய தமிழன்
பின் ஒருநாள்
ஓமந்தைச் சாவடியில்
கப்பம் புடுங்கிய தமிழன்
தொப்புள் கொடி உறவின் பெயரால்
பத்துப் பதினைஞ்சு
வீடு வாங்கிய தமிழன்
முன் ஒருநாள்
புரட்சியின் பெயரால்
கோயிலெல்லாம்
நகை எடுத்தவன்
தண்டவாளம் ஈறாக
கிண்டி எடுத்தவன்
கதிகால் தொடங்கி
கக்கூஸ் கதவுவரை
களவும் எடுத்தவன்
கவி படைத்தவன்
அண்ணையின் பெயரில்
அர்ச்சனை செய்தவன்
பிறிதொரு பொழுதில்
களவாய் கடவுச்சீட்டுச் செய்து
கென்யா ஊடாக
ஜரோப்பா சென்று
ஆமி அடிக்கிறான்
புலி பச்ச மட்டை வெட்டி
பளார் என்றடிக்குது
வீடு எரிஞ்சு போச்சு
கிடந்த தோடும் களவு போச்சு
நாடு திரும்பிப் போனால்
என்னை நாயைப் போல் சுடுவார் என்று
பொய்யாய் சொன்னவன்
அதன் பேரில் அடைக்கலமும் கேட்டவன்.
தங்கையை கூப்பிட்டான்
தம்பியை கூப்பிட்டான்
மாமா மாமி மச்சாள் என்று பின்
வரிசையாய் அழைத்தபின்
மாவீரர் விழாச்சென்று
போர்வீரம் கதைத்தவன்
சந்திரிகாவுடன் கலவி வைக்க
அண்ணைக்கும் ஆசை
இந்த கிளட்டு சிங்கத்திற்கும்
ஆசையென்று அரங்கிலை முழங்க
விசிலடித்தவன்
அன்றிரவே விஸ்கியும் அடித்தவன்.
ஜஞ்சாறு வருசம் கழிச்சு
தெருவில் நின்ற காருடன்
கோட்டுச் சூட்டையும் போட்டு
போட்டோ எடுத்தவன்
எடுத்த கையோடு
எக்கச் சக்கமா புரட்டும் சேர்த்து
கடிதமும் போட்டவன்
வடிவான பொம்பிளை ஒன்று
அனுப்பவும் சொன்னவன்.
வன்னிலை வேண்டாம்
கொஞ்சம் நகரமாய் பாருங்கோ
இங்கிலிசு தெரிஞ்சிருந்தா
இன்னும் கொஞ்சம் நல்லது
சாதி கவனம்
சமயத்தையும் விசாரியுங்கோ
வாற செலவு அவளோடை
வந்த பிறகுமிகுதி என்று
வரிசையாய் சொன்னவன்
வந்திறங்கிய கையோடு
கலியாணம் ஒருநாள்
பின் வேறு ரிசப்சன் மறுநாள்
பிறந்த நாள் ஒருநாள்
31ம் சடங்கெண்டு ஒருநாள்
படுத்தது தவிர்த்து
பிள்ளை குடுத்தது தவிர்த்து
மற்றன எல்லா நாளுக்கும்
விழா எடுத்தவன்
கொஞ்சம் விலாசம்
காட்டினவன்
கொலிடே போனவன்
குடிச்சுத் தினம்
கும்மாளம் போட்டவன்
அரைகுறைப் பயிற்சியில்
அரங்கேற்றம் செய்தவன்
அப்பப்ப வன்னி சென்று
அண்ணைக்கருகில் நின்று
போஸ் கொடுத்தவன்
கொடுத்தெடுத்த படம்
காட்டி அண்ணையோட
குளோஸ் என்று சொன்னவன்
வெள்ளைப் புறாக் கட்டினவன்
கட்டி வந்ததில் வீட்டைக் கொஞ்சம்
நீட்டியும் கட்டினவன்
வருகிற வழியிலை
துடைக்கப் பேப்பரும் கேட்டவன்
வள்ளியும் கந்தனும்
சுப்பனும் பேத்தியும்
பங்கரில் இருக்கையில்
லண்டனில் பிள்ளையும் பெத்தவன்
புரச்சியின் பெயரிலை
கொள்ளையும் அடித்தவன்
கொள்கையின் பெயரிலை
இன்னும் நாலைஞ்சு வீடும்
வாங்கினவன்
மன்னாரில் சாகையில்
மதுவிலை கிடந்தவன்
அண்ணை உள்ளுக்கை விட்டடிப்பார் என்று
மனிசியுடன் தினம் தோறும்
மயக்கத்திலும் கிடந்தவன்
மூதூரில் சனம் சாக
வைவுக்கு முத்தம் கொடுத்தவன்
பேசாலை ஈறாக
பெருவாரி சனம் சாக
பராரிக் கனவோடு
சொகுசாக வாழ்ந்தவன்
ஆனையிறவு போய்
அழிவார் கதைகேட்டு
வன்னிச் சனத்தின்ரை
ஆடுமாடு போய்
பால மோட்டை போய்
படுகாட்டுக் குளம் போய்
படுத்திருந்த பாய் கூடப் போய் துலைஞ்சு
நாசமறுப்பார் செய்த வேலையாலை
நாதியற்ற வன்னிச் சனம்
இருந்ததெல்லாம் இழந்து
மிருகமாய் அலைஞ்சு
கருங்காலி மரத்தின் கீழே
உறங்காமல் உண்பதற்கோ
ஒரு பருக்கை உணவில்லாமல்
திண்ணையும் போய்
பின்வளவு தென்னையும் போய்
புள்ளையும் போய்
புதுவிளாம் குளமும் போகையிலே
கட்டவுட் கட்டினவன்
அண்ணைக்கு பனையுயரக்
கட்டவுட் கட்டினவன்
சாவை நிறுத்துவோம்
வாருங்கள் ஊர்வலம் என்று
தெருவுக்கு கூட்டி வந்து
அண்ணையைக் காப்பாத்த
பதாகை சுமந்தவன்
ஊர்வலத்திலே உல்லாசம் கண்டவன்
பெல்ஜியம் சென்று
துள்ளிக் குதித்த பின்னே
பானம் அருந்தி
சான்ட்விச்சு சாப்பிட்டு
ஏப்பம் விட்டவன்
இளம் பெட்டையளை பார்த்து
மோப்பமும் விட்டவன்.
கோச்சிலை அப்பிடி இப்பிடி
சேட்டையும் விட்டவன்
இளசுகளுக்கு பிக்கினிக்
காட்டவும் செய்தவன்.
காரை முள்ளுக் குத்த
யங்கம் முள்ளு கீறிபாய்ந்த காயம்
உடல் கடுக்க
சிங்களம் ஏவிய செல்
சிங்கனைக் கொன்று
அவன் தங்கையைக் கொன்று
மங்கையின் உடல் தின்று
உடன் கிடந்த தங்கமாம்
ஆறுமாத சிறுமியை பிழிந்தெடுத்து
கோடியில் நின்ற
மாடாடு மரமெல்லாம்
முறித்தெடுத்து
கருப்பட்ட முறிப்பிலே வீழ்ந்து வெடிக்கையில்
நாயே நீ எங்கிருந்தாய்
கற்சிலை மடுவிலே
நெடுங்கேணித் தெருவிலே
புளியங் குளத்திலே
புதுவிளாங்குளத்திலே
அழிந்து சனம்
அழுது ஓலம் விட்டு
விடுங்கடா எங்களை
வே மக்களே என்று சொல்ல
பொல்லால் அடித்து
காலால் போட்டுதைத்து
மாத்தளனில் என் மகளை
மாடாய் அடித்தவனை
மாவீரன் என்று சொல்லி
மார்தட்டிக் கொண்டாடியவன்
கட்டினவள் கதறியழ
பால் மணம் மாறாத பச்சிழம் பாலகன்
கையில் கொண்டு
கரிப்பட்ட முறிப்பு போக
கனகராயன் குளம் போக
முறுகண்டி போக
முழங்காவில் போக
வற்றாப் பழை போக
தண்ணீர் ஊற்று விழ
தண்ணியிலை இருந்தவன்
தன்குறி விறைக்க
சந்தோசம் கொண்டவன்
புதுக்குடியிருப்பு மூலைக்கை
வன்னிச் சனம் சாகைக்கை
கால் சிதறக் கை முறிந்து
தண்ணிகூட இன்றிச் சனம் மாழேக்கை
ஆண்குறி விறைப்பேறி
அனுபசிச்சுக் கிடந்தவனுக்கு
அண்ணைக்கு அனுப்புவதற்கு
அள்ளிக் கொடுங்கள் என்று
வணங்கா மண்
பேர் போட்டு
வருவான் வாசலுக்கு
கேட்டு வையுங்கள்
மட்டக்களப்புச் சனத்தின் உயிர்
மசிரைவிடக் குறைவா
திருகோணமலைச் சனங்கள்
எருமையினப் பிறப்பா
மன்னாரில் செத்தவர்கள்
செல்லாத காசா
மிகுதி வன்னியிலை செத்ததெல்லாம்
மரமேறும் விலங்கா
இவரெல்லாம் சாகையிலை
இரவெல்லாம் கலவிசெய்தீர்
இப்ப அண்ணைக்கு
இருப்புக்கு இடம்வேண்டும்
வணங்கா மண் புலுடாவா
நாயே
வணங்கா மண் புலுடாவா என்று.