பிரஜா வுரிமை பெறுவதற்கு மொழித்தேர்ச்சி அவசியமென்ற அறிவிப்பை விரைவில் நடைமுறைப்படுத்தவிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் கனடிய, குடிவரவுத்துறை அமைச்சர் ஜாசன் கென்னேய், குடியேற்றவாசிகள் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சை கற்றிருக்க வேண்டும் அல்லது பிரஜாவுரிமை மறுக்கப்படுவதை எதிர்கொள்ள நேரிடும் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கஸ்சாரியில் இடம்பெற்ற குடிவரவுத்துறை விவகாரம் சம்பந்தப்பட்ட மாநாட்டில் உரையாற்றிய ஜாசன் கென்னேய், புதிய குடியேற்றவாசிகள் இரு மொழிகளில் (ஆங்கிலம், பிரெஞ்சு) ஒன்றை கற்பது அவசியம் என்றும் கனடிய சமூகத்துடன் ஒன்றிணைய அது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த இரு மொழிகளையும் கற்பதற்கு குடியேற்றவாசிகள் முயற்சிகளை மேற்கொள்வதில்லை என்பதற்கு உதாரணமொன்றை கூறிய அமைச்சர் கடந்த ஜனவரி இந்தியாவுக்கு தான் சென்றபோது புதுடில்லியில் குடியேற்றம் தொடர்பான சில நேர்முகப்பரீட்சைகளில் கலந்துகொண்டதாகவும் அச்சமயம் 12 வருடமாக கனடியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள பெண் ஒருவர் ஆங்கில அறிவு சிறிதும் இல்லாமல் இருந்ததையிட்டு ஆச்சரியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தப்பெண் தனது கணவன் கனடாவுக்கு வருவதற்கு “அனுசரணை’ வழங்கியுள்ளார். எனக்கு வியப்பாக இருந்தது கவலையாகவும் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
கனடா பிரஜாவுரிமை பெற உத்தியோகபூர்வ மொழிகளை அறிந்திருப்பது அவசியமென்ற வகையில் குடிவரவுத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வருடாந்தம் 2 1/2 இலட்சம் பேர் கனடாவுக்குப் புதிய குடியேற்ற வாசிகளாக வருகின்றனர். 66 ஆயிரம் பேர் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்துகொள்ள வருகை தருகின்றனர். குடும்பத்துடன் இணைந்து கொள்வோருக்கு மொழிப்புலமை அவசியமானதல்ல என்ற ஏற்பாடே இருந்து வருகிறது.
saji
அனுப்புக