இரானுடனான உறவில் ஒரு புதிய துவக்கத்தை அமெரிக்கா விரும்புகிறது என்று அதிபர் ஒபாமா கூறியிருந்தமைக்கு பதில் தரும் விதமாக கருத்து வெளியிட்டுள்ள இரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இரான் தொடர்பில் அமெரிக்கா தனது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நிஜமாகவே மாற்றிக்கொண்டால், இரானும் மாறும் என்று தெரிவித்துள்ளார்.
வெறும் வாய் வார்த்தைகள் என்று குறிப்பிட்டு அவை மட்டும் போதாது என்றார் அவர். இரான் மீதான பொருளாதாரத் தடைகளை, இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் நிபந்தனைகளற்ற ஆதரவு என்று குறிப்பிட்டு அவ்விவகாரம் போன்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் நிஜமான மாற்றங்கள் எதனையும் தான் இதுவரைக் கண்டிருக்கவில்லை என்றும் கமேனி கூறியுள்ளார்.
அமெரிக்க இரான் உறவில் முப்பது ஆண்டு காலமாக நீடித்துவரும் பகைமை மற்றும் நம்பிக்கையின்மையை முடிவுக்கு கொண்டுவர தான் விரும்புவதாக அதிபர் ஒபாமா வீடியோ உரையில் பேசியிருந்தற்கு அடுத்த நாள் அயதுல்லாவின் கருத்துகள் வெளியாகியுள்ளன.