மிகிந்தலை புனித பிரதேசத்தில் வைத்து ஒரு நபரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரு பௌத்த பிக்குமாரையும் தலா 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அநுராதபுரம் தலைமை நீதிவான் ருஸிரா வெலிவத்தை அனுமதித்தார். இரு சந்தேக நபர்களையும் மீண்டும் மே ஆறாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மிகிந்தலைக்கு அண்மையாகவுள்ள அம்பஸ்தல செய்த்தியா என்ற இடத்தைச் சேர்ந்த தான வீரரத்ன என்ற நபரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மிகிந்தலை ராஜமகா விகாராதிபதி வலக வெங்குணவேவ தம்மாரத்ன மற்றும் மிகிந்தலை சீலரத்ன தேரர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து இவர்கள் இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இரு பௌத்த பிக்குகளுக்காகவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய, சிரேஷ்ட சட்டத்தரணியான சந்தான வீரக்கோன், டாக்டர் ராஜா ஜோன் புள்ளேயின் வீட்டைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முறைப்பாட்டாளரான சந்தான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மிகிந்தலை சீலரத்ன தேரரின் சாட்சியத்திலும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.