வெளிநாட்டு இலங்கையருக்கு கைமாறு: இவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம்!
தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பங்களித்த புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் ஏற்பாட்டை தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்து வழங்க உள்ளது. மேற்குலகெங்கும் வாழும் நாடுகளில் இத்தேர்தலையொட்டிய பிரச்சாரங்கள் அமோகமாக நடைபெற்றது. என்பிபி இன் கூட்டங்கள் மண்டபம் நிறைந்த மக்களோடு சர்வதேச தலைநகரங்களிலெல்லாம் நடைபெற்றது. என்பிபி இன் வெற்றியின் ஆரம்பம் இங்கிருந்துதான் ஆரம்பித்தது. அதற்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில் அவர்களது வாக்குரிமையைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படுவது பலராலும் வரவேற்கப்படுகின்றது.
இலங்கைக்கு வெளியே தொழில், கல்வி, குடும்பம் மற்றும் இன முரண்பாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கை பிரஜைகளுக்கு அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஆளும் புதிய என்பிபி அரசாங்கம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாக வெளிவிவகாரங்களுக்கான பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
அதன்படி வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகள் உள்ளூராட்சி தேர்தல்கள் உட்பட அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்க முடியும். ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க இது தொடர்பில் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படி நேரடியாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என அருண் ஹேமச்சந்திரா தெரிவிக்கின்றார்.
கடந்த ஒரு தசாப்தமாக இந்தவிடயம் தொடர்பில் புலம்பெயர் இலங்கை பிரஜைகள் அமைப்புக்கள் கோரி வந்தன. ஒருபக்கம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் உறவுக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நிதியுதவி மற்றும் அந்நியசெலவாணியையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மறுபுறம் வெளிநாடுகளில் தேர்தல்களில் வாக்களிக்கும் போது முறைகேடுகள் இடம்பெற அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இவ்வாறான ஏற்பாட்டை இந்தியா ஏற்கனவே செய்து இலங்கைக்கு முன்மாதிரியாகவுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களும் தேர்தலில் வாக்களிக்கும் விதமாக தேர்தல் விதிமுறைகளில் இந்தியா திருத்தம் மேற்கொண்டுள்ளது. அப்படியாயின் வெளிநாடு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் விதமாக தேர்தல் விதிமுறைகளை திருத்துவதில் பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கின்ற என்பிபி அரசாங்கத்திற்கு எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை. எவ்வாறெனினும் இலங்கை குடியுரிமை வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இலங்கையர் மட்டுமே வாக்களிக்க முடியும்.









