ஜேர்மன் கிறிஸ்மஸ் மார்க்கற்றில் தாக்குதல் – இருவர் பலி – 60 பேர் வரை காயம் !
கிழக்கு ஜேர்மனியில் சக்சன் அன்ஹல்ட் என்ற மாநிலத்தில் மார்க்ட்போர்க் (Magdeburg) என்ற இடத்தில் நேற்று மாலை கிறிஸ்மஸ் மார்க்கற்றில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பி.எம்.டபிள்யூ BMW கார் ஒன்று மோதித்தள்ளியதில் இதுவரை குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 60 க்கும் அதிகமானோர் காயப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்தாக்குதலை மேற்கொண்ட 50 வயதுடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சவுதிரேபியாவைச் சேர்ந்தவர். 2006 ஆம் ஆண்டில் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்துள்ளார். இவர் ஜேர்மனியில் வைத்தியராக கடமையாற்றி வந்தவர் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதல்தாரி செலுத்தி வந்த கார் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை தாக்குதல்தாரி தீவிர இஸ்லாமிய அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணியதாக எந்தவிதமான புலனாய்வு தகவல்களும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.
இதே மாதிரியானவொரு தாக்குதல் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி 8 வருடங்களுக்கு முன்னர் பேர்லினில் கிறிஸ்மஸ் மார்க்கற்றில் இடம்பெற்றிருந்தது. அத்தாக்குதலின் போது தாக்குதல்தாரி பார ஊர்தி ஒன்றை கொண்டு, மக்கள் கூட்டத்தின் மீதாக செலுத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருந்தனர்.
கிழக்கு ஜேர்மனியை பொறுத்தவரை ஏ.எப்.டி (AFD) தீவிர வலதுசாரி போக்குடைய, ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கொள்கைகளை உடைய கட்சியின் செல்வாக்கு அதிகமுள்ள பகுதியாகும். 2025 பெப்ரவரியில் ஜேர்மனியின் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தீவிர வலதுசாரிகட்சியான AFD இத்தாக்குதலை தன்னுடைய தேர்தல் வெற்றிக் சாதகமாக பயன்படுத்தும் சாத்தியம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.