முன்னாள் எம்பி திலீபனின் லீலைகளும் கைதும் – ”இல்லை இல்லை சுத்தமான சுவாமிப்பிள்ளை” என்கிறார் திலீபன்! 

முன்னாள் எம்பி திலீபனின் லீலைகளும் கைதும் – ”இல்லை இல்லை சுத்தமான சுவாமிப்பிள்ளை” என்கிறார் திலீபன்!

முன்னாள் ஈபிடிபி வன்னி மாவட்ட எம்பி குலசிங்கம் திலீபன் காசோலை மோசடி முறைப்பாடொன்றை அடுத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். பின்னர் வவுனியா மாவட்ட நீதிவானால் 15 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ரணில் அரசாங்கத்தில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராகவும் செயற்பட்டிருக்கிறார்.

திலீபனின் பிரத்தியேக செயலாளாரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி சார்பாக போட்டியிட்ட வேட்பாளரான கிறிஸ்டோபர் டினேஸ் என்பவரை டிசம்பர் 19 இல் வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினர் காசோலை மோசடி முறைப்பாட்டில் கைது செய்திருந்தனர். காணி கொடுக்கல் வாங்கல் ஒன்றில் 15 இலட்சம் பெறுமதியான காசோலையை மோசடி செய்த குற்றச்சாட்டில் டினேஸ் கைது செய்யப்பட்டார். டினேஸ் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் திலீபனும் கைது செய்ப்பட்டிருந்தார்.

பிணையில் வெளியே வந்துள்ள திலீபன் ஊடகங்களிடம் தான் குற்றவாளி இல்லை என்கிறார். இந்த காசோலை பரிமாற்றம் தன்னுடைய அலுவலகத்தில் நடந்ததால் தான் அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறுகிறார். மேலும் இந்த கைதின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

திலீபன் நவம்பர் 22 நடந்த பாராளுமன்ற தேர்தலில் வீணைச் சின்னத்தில் ஈபிடிபி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். தோல்வியின் பின்னர் ஈபிடிபி கட்சியிலிருந்தும் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. திலீபன் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவர் அபிவிருத்திக் குழு தலைவராக இருந்த போது அவருடைய சகாக்களால் பல காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது என்ற பெரிய குற்றச்சாட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்கள் விடயத்திலும் பலகீனமான திலீபன் பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர் என விமர்சிக்கப்படுகிறார்.

திலீபன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் உலாவுகின்றன. திலீபனுடைய பிரத்தியேக செயலாளர் மீதும் திலீபனுடைய சகாக்கள் மீதும் பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திலீபன் மீதான குற்றப் பின்னணி கருதி அவர் மீது ஈபிடிபி கட்சி மேலிடம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்த போது திலீபன் தானாகவே கட்சியிலிருந்து விலகிவிட்டார்.

முன்னாள் எம்பி திலீபன் மண் கடத்தல், மரம் வெட்டுதல், காணி அபகரிப்பு மற்றும் மோசடி என பல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படுகின்றார். இவற்றின் உண்மைத் தன்மையை சோதித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வாங்கிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்கிறார்கள் மக்கள். திலீபன் கள்ள மரம்வெட்டுதல் தொடர்பில் தேசம்நெற் கட்டுரையையும் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *