“நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு வருகின்றார்கள்.” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் உறுமைய காணி உறுதி வழங்கும் வேலை திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாணத்திற்கான நடமாடும் சேவை வியாழக்கிழமை (04) மட்டக்களப்பில் முன்னெடுக்க எடுக்கப்பட்டிருந்தது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுக்கு சொந்தமான காணியில் குடியிருந்து இதுவரையில் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாவது நடமாடும் சேவை இதன்போது மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் இணைந்து இந்த நடமாடும் சேவை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் ஆரம்ப நிகழ்வு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் என்.விமல்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மேலும், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் உட்பட பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மிடம் உள்ளது.இந்த நாடு மிகப்பெரிய ஆபத்தான நிலையில் இருந்த வேலையில் நாம் அவர்களை கைவிட்டு ஓடிவிட முடியாது ஒரு குறுகிய காலத்துக்குள்ளே எமது நாடு பொருளாதார ரீதியில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றது. மக்கள் தலைவர்கள் என்பவர் வெளிச்சத்தை ஏற்பவராக இருக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் வர இருக்கின்றது. தினம் தினம் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள் நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு இதில் பலர் இந்த நாடு பற்றி எரிந்தபோது,நாட்டு மக்கள் தவிர்த்தபோது வீட்டு மூலைக்குள் ஒழிந்திருந்தவர்களும் இந்த நாடு இன்னும் நூறு வருடத்திற்கு மேல் எழமுடியாது என்று அறிக்கை விட்டவர்களுமே இவர்கள்தான்.
நாம் இந்த நாட்டை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும் அப்போது நாட்டை பொறுப்பெடுத்த தலைவர் நாட்டை விட்டு ஓடவில்லை களத்தில் நின்று தான் மக்களுக்காக இறுதிவரை போராடினார். என அவர் இதன்போது தெரிவித்தார்.