03

03

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது தாக்குதல் – நான்கு இளைஞர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில்  காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் திருகோணமலையை  சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பேருந்து நிலையத்தில் நேற்று இரவு இளைஞர்கள் குழு ஒன்று அமைதியின்மையை ஏற்படுத்துவதாக யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து, பேருந்து நிலையத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

இதன்போது, இளைஞர்கள் குழு காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நான்கு இளைஞர்களும் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொது இடத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள நான்கு இளைஞர்களையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 3000 தற்கொலைகள்!

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 3,000 க்கும் மேற்பட்ட உயிர்கள் தவறான முடிவுகளால் இழக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை (1)ஆம் திகதி முதல் (7) ஆம் திகதி வரை தேசிய காயம் தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், தவறான முடிவுகள் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு, மேம்பட்ட மனநல ஆதரவு சேவைகள், சமூக விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் பயனுள்ள தவறான முடிவு தடுப்பு உத்திகள் ஆகியவற்றின் அவசர தேவையை சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் மத சடங்கில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள் இறப்பு – 02 இலட்சம் இழப்பீட்டு தொகை அறிவித்த அரசாங்கம்!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற மத சடங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத நிலையில் அந்த சடங்கில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள்,குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று(02) இடம்பெற்ற இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சியிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றது.

நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர். நெரிசலில் சிக்கி 23 பெண்கள், 3 குழந்தைகள், ஒரு ஆண் என 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

“பிரித்தானியாவிலும் ஜனநாயகம் இல்லை – விருப்பம் இன்மையை தெரியப்படுத்துவதே ஜனநாயகம்” – ரவி சுந்தரலிங்கம்

பிரித்தானிய பொது தேர்தல் தொடர்பாக ரவி சுந்தரலிங்கம் அவர்களுடனான தேசம் திரை நேர்காணல்..!

இலங்கையில் மதுவரி மூலம் 105 பில்லியன் ரூபா வருமானம் !

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை மதுவரி வருமானத்தின் மூலம் 105 பில்லியன் ரூபாவை ஈட்ட முடிந்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் தெரிவித்துள்ளது.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபா அதிகரிப்பு என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி குறிப்பிட்டுள்ளார்.

“2024 ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை,​ மதுவரித் திணைக்களம் திட்டமிட்டபடி 105 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இந்த நேரத்தில், நாங்கள் 88 பில்லியன் ரூபாவைக் ஈட்டியிருந்தோம். இதன்படி 17 பில்லியன் ரூபா வளர்ச்சியை எட்டியுள்ளோம்.

இந்த 6 மாதங்களுக்குள் 20 பில்லியன் வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக, எமது பிரதான உற்பத்தியகங்களில் பல சிக்கல்கள் ஏற்பட்டன.

இதனால், சுமார் 3 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது.

இல்லையெனில், திட்டமிட்டபடி 107 பில்லியன் இலக்கை நோக்கி அடைந்திருப்போம்.

அதன்படி, கடந்த ஆண்டை விட சுமார் 20% வளர்ச்சியை எட்டியுள்ளோம். இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்” என்றார்.

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே சம்பந்தன் இறந்துவிட்டார் !

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்படவேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவினை பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மறைந்த தமிழ் தேசிய பெருந்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் ஆத்ம சாந்தி வேண்டி, இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார கிளை தலைவர் செயலாளர், பொருளாளர், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபராக திரு எஸ். முரளிதரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் !

கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபராக திரு எஸ். முரளிதரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இருந்து குறித்த நியமனக்கடிதத்தை முரளிதரன் இன்று பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களின் முறையற்ற போராட்ட செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் – எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்!

ஆசிரியர் தொழிலில் பிரவேசிக்கும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியை பேண முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பில் தேவையான மேலதிக நடவடிக்கைகளை ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துமாறு சகலரையும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, இந்த முறையற்ற செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான இணைய முறைமை தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாக தெரிவித்த ஜனாதிபதி, பதவி உயர்வு அல்லது ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் எவருக்கும் அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் வலியுறுத்தினார்.

இதேவேளை இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் III பொது ஊழியர் வெற்றிடங்களுக்கு 60 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன் 1706 பட்டதாரிகள் மற்றும் 453 ஆங்கில டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.