21

21

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு  பூனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை இன்று (20) மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சீர்குலைக்காமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான காலம் வந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குறித்த நிகழ்வின் போது, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் இலங்கையிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நமது நாட்டில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும். தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான அறிவைக்கொண்ட மக்களே நமது நாட்டிற்கு அவசியமாகும்.

அதனால் தான் இந்தப் பல்கலைக்கழகம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. இன்று பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள் ஒரு சர்வாதிகாரத்தைப் போல மாணவர்களைக் கையாளுகின்றன. இத்தகைய சூழலில் கற்பிக்கும் விரிவுரையாளர்களைப் பாராட்டுகிறேன்.

பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களை பட்டங்களை விற்கும் கடைகள் என்ற கேவலமான பேச்சுக்கு நாம் செவிசாய்க்கக் கூடாது. பிள்ளைகள் சுதந்திரமாக கல்வி கற்கும் வகையில் இந்நாட்டில் உள்ள பல்கலைக்கழக முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும்.

நாளை  சமூக வலைதளங்களில் இதனைச் சொல்லி என்னைக் குறை கூறலாம். இப்பல்கலைக்கழகம் அபிவிருத்தியடைந்தால் ஏனைய பல்கலைக்கழக கட்டமைப்புகளும் அபிவிருத்தியடையும் என்று எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உட்பட நான்கு கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் , பலஸ்தீன  பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதும், அங்கு குடியேற்றம் செய்வதும் சட்டவிரோதமானது – சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

இஸ்ரேல் , பலஸ்தீன  பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதும், அங்கு குடியேற்றம் செய்வதும் சட்டவிரோதமானது என்பதால் அதனை விரைவில் திரும்பப் பெற வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை, சர்வதேச நீதிமன்றம் நேற்று (19.07.2024) பிறப்பித்துள்ளது. இதற்கமைய, சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஆலோசனைக் கருத்தின் காரணமாக, சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேலுக்கான ஆதரவு பலவீனப்படுத்தப்படலாம்.

அதேவேளை, சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் நவாஃப் சலாம், பலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்து 15 நீதிபதிகள் கொண்ட குழு வழங்கிய கட்டுப்பாடற்ற ஆலோசனைக் கருத்தை நேற்று வாசித்துள்ளார்.

இதற்கமைய, மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலிய குடியேற்றங்களை கட்டியெழுப்புதல் மற்றும் விரிவுபடுத்துதல், அப்பகுதியின் இயற்கை வளங்களைப் பயன்படுத்துதல், நிலங்களை இணைத்தல், நிரந்தரக் கட்டுப்பாட்டை விதித்தல் மற்றும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகள் உட்பட பல கொள்கைகள் சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக நீதிபதிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், சர்வதேச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவை மறுக்கும் விதத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, “யூத மக்கள் தங்கள் சொந்த நிலத்தினை ஆக்கிரமிப்பவர்கள் அல்ல, எமது நித்திய தலைநகரான ஜெருசலேமிலிலோ, யூதேயாவிலோ மற்றும் சமாரியாவில் உள்ள எங்கள் முன்னோர்களின் நிலத்திலும் நாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை” என்று நெதன்யாகு கூறியுள்ளார்.

மேலும், பல இஸ்ரேலிய அரசுப் பேரவையின் அமைச்சர்கள் மற்றும் குடியேறிய தலைவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக கண்டித்துள்ளனர். அதுமாத்திரமன்றி, சிலர் இதற்கு பதிலடியாக மேற்கு கரையை உடனடியாக முறையாக இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

 

இந்நிலையில், மே மாதம், தெற்கு காசாவின் ரஃபா மீதான தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், நீதிமன்றத்தை மீறி காசா, ரஃபா உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையால் ஒவ்வொரு ஆண்டும் 40000 பேர் வரை உயிரிழப்பு!

இந்த நாட்டில் போதைப்பொருள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாக ஆபத்தான மருந்துகளின் தேசிய கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் புகையிலை பாவனையினால் சுமார் 20,000 பேரும், மது பாவனையினால் 18,000 பேரும்,மற்ற போதைப்பொருள் பாவனையினால் சுமார் 2,000 பேரும் உயிரிழப்பதாக தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு என அதன் தலைவர் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாக தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு – சுமந்திரன் வெளியிடுள்ள தகவல் !

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாகத் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட போதும் அதன் பிரகாரம் மாவை. சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் ஆகியோர் உட்பட நால்வரின் தரப்பு சமர்ப்பனங்கள் இடம்பெறவில்லை. அதற்கான காரணங்களும் தெரியாதுள்ளது என்று அக்கட்சியின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு கட்சி மட்டத்தில் நடவடிக்ககைள் எடுக்கப்பட்டிருந்தபோதும், கடந்த 19ஆம் திகதியில் மீண்டும் 11 நாட்களுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கட்சியின் நிருவாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டுவருவதென எமது மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தொடர்ந்து, கடந்த 14ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற அரசியல் உயர்பீடக் கூட்டத்தின் போது பதில் சமர்ப்பணங்களை எதிராளிகள் சமர்ப்பிப்பதென தீர்மானிக்கப்பட்டு சமர்ப்பணங்கள் தொடர்பான வரைவுகளும் ஏனைய எதிராளிகளின் சட்டத்தரணிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இவ்வாறான நிலையில் கடந்த 19ஆம் திகதி மாவை.சேனாதிராஜா, யோகேஸ்வரன், சிறிதரன், குகதாசன் ஆகிய நால்வர் சார்பான பதில் சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலைமையால் தற்போது வழக்கு 11 தினங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நால்வரும் இணக்கப்பாடு எட்டியதன் பின்னர் எதற்காக தங்களது சமர்ப்பணங்களை செய்வதற்கு தவறியுள்ளார்கள் என்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றார்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் – முக்கிய சுகாதார சேவை அதிகாரிகளுக்கு HRCSL அழைப்பு!

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பிலுள்ள  தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு முக்கிய சுகாதார சேவை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் கடந்த 05.07.2024 அன்று அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் பொதுமக்கள் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்களவிஜயம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த களவிஜயத்தில் அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள்சார் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 08.07.2024 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதேவேளை அந்த கலந்துரையாடலிற்கான அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பிலுள்ள தலைமைக் காரியாலத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளளது.

எதிர்வரும் 30.07.2024 பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடலுக்கு வருமாறு பின்வருவோருக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, செயலாளர் – சுகாதார அமைச்சு (Ministry of Health), கொழும்பு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் – சுகாதார அமைச்சு, கொழும்பு, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் – வடக்கு மாகாணம், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் – வடக்கு மாகாணம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் – யாழ்ப்பாணம், மருத்துவ அத்தியட்சகர் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

“சுமந்திரனுக்கு தமிழ்தேசிய பற்று இல்லை. அவர் அனைத்தையும் மூளையால்தான் பார்க்கிறார்” – சி.வி விக்னேஸ்வரன் 

சுமந்திரனுக்கு தமிழ் தேசிய உணர்ச்சி இல்லையென்றும் அவர் எல்லாவற்றையும் மூளையால்தான் பார்ப்பாரே தவிர உணர்ச்சியால் அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் தேசிய கட்சி என்ற முறையிலும், தமிழ் தேசிய உணர்வுகளை கொண்டவர் என்ற முறையிலும், எங்களுக்கும் சிறீதரனுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

எனவே தமிழரசுக்கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரனே வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் தமிழ் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.

தமிழ்த் தேசிய கட்சிகள் என்ற முறையிலும் தமிழ்த் தேசிய உணா்வுகளை கொண்டவர்கள் என்ற முறையிலும் எங்களுக்கும் சிறிதரனுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.

அந்த விதத்தில் தமிழரசுக் கட்சியினுடைய தலைவராக சிறிதரன் வருவதைத் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனையே வரவேற்கின்றோம்.

ஆனால் இதுரை காலமும் தமிழ்த் தேசியத்திற்கு குரல் கொடுத்து வருகின்ற ஒருவர் என்ற முறையிலேயே அவரை நாங்கள் அழைத்திருக்கின்றோம். அதேபோன்று தான் பேராசிரியர் கணேசலிங்கத்தையும் அழைத்திருக்கிறோம்.

 

ஆகவே தமிழ்த் தேசியத்தின் அடிப்படையிலே நாங்கள் முன்செல்ல வேண்டும் என்பதால் அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை” என சி.வி.விக்கினேஸ்வரன் மேலும் தொிவித்தாா்.

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் – புதிய சட்டமூலம் கோரி கையெழுத்து!

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து பெறும் வேலைத் திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் வழக்கமாக நிறைவேற்றப்படுவது இல்லை என்றும் எனவே

அவ்வாறான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில்; இயற்றப்பட வேண்டும் என தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுவதாகவும் அதனால் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு நாட்டில் புதிய சட்டம் ஒன்று அவசியம் என்றும்

இதனை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் நாட்டிலுள்ள 17 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்றும் தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.