01

01

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் 2024 – வன்முறை போராட்டங்கள் அதிகரிப்பு!

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து எதிர்த்தரப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், தலைநகர் பரீசின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதோடு, பொதுச் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 

குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்.என். கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்.என்.கட்சியின் மரைன் லெ பென் (Marine Le Pen)

தெரிவித்துள்ள அதேநேரம், பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான் அனைத்து பிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்.என். கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இதற்கு எதிராக தீவிர இடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பெரிசில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருவதால், அங்கு பதற்றமானதொரு சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்த வன்முறைகளில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டுள்ள சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பரீசின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிர வலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்த அவுஸ்திரேலியா !

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அதன்படி, 710 அவுஸ்திரேலிய டொலராக இருந்த விசா கட்டணம் தற்போது 1,600 டொலராக அதிகரித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தலைமையிலான அரசாங்கம், மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விசா கட்டண உயர்வு, சர்வதேச கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்வை குறைக்கவும், சிறப்பாகவும் மாற்ற அவுஸ்திரேலியாவிற்கு உதவும் என, அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் கிளேர் ஓநீல் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த முடிவு சர்வதேச மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பியுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பொருளாதாரம் இரண்டுக்கும் உகந்ததல்ல என, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகக் குழுவின் தலைவர் லூக் ஷீஹி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளை விட அவுஸ்திரேலியாவின் மாணவர் விசா கட்டணம் உயர்ந்துள்ளது.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் வெளியான தரவுகளின் படி, கடந்தாண்டு செப்டம்பர் வரை அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 வீதத்தால் உயர்ந்து 5 இலட்சத்து 48 ஆயிரத்து 800 பேரை எட்டியுள்ளதாகத் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெற்றியளித்த கொக்கோ பயிர் செய்கை !

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர் செய்கை வெற்றியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்த வரையில் கொக்கோ பயிர் செய்கையானது இடை , ஈர வலயங்களில் அதிகளவாக பயிரிடப்பட்டு வருகின்றது. இருப்பினும் உலர் வலயத்திலும் இப்பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கொக்கொ செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதில் ஒரு முயற்சியாக டாக் சொக்லேட் செய்யும் பரிட்சார்த்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும், இதன்மூலம் கொக்கோவில் இருந்து பல்வேறு வகையான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொக்கோவில் அதிகளவு இலிப்பிட்டு, புரதம், மாப்பொருள், நார்பொருள் மற்றும் அத்தியவசியமான அமினோ அமிலங்கள் என்பன காணப்படுவதால் கொக்கோ பயிர் செய்கையை வடமாகாணத்தில் விஸ்தரிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்திற்குள் மட்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 239 இந்திய மீனவர்கள் 32 படகுகளுடன் கைது !

Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் 25 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மீனவர்களின் 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 239 இந்திய மீனவர்கள் 32 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நேற்றிரவு(30) இராமேஸ்வரத்தில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற கடற்படை வீரரொருவர் உயிரிழந்தமை தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் தமது அதிருப்தியை வௌியிட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷெனுக செனவிரத்ன இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரை சந்தித்தபோது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இந்த வி்டயம் தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறிவித்ததாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சம்பந்தனின் பாராளுமன்ற வெற்றிடத்தை நிரப்பும் நபர் யார்..? – வெளியான அறிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் காலமானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக சண்முகம் குகதாசன் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

2020 பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சண்முகம் குகதாசன் 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார் !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார்.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த அவருக்கு வயது 91 ஆகும்.

இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்திருந்தார்.

இராஜவரோதயம் சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு யூலையில் மூவாயிரத்திற்கும் அதைகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார்.

பின்னர் 1989 தேர்தலில் போட்டியிட்ட போதும் வெற்றிபெறாத நிலையில், மீண்டும் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி இறக்கும்வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.