22

22

அச்சுறுத்தும் நிபா வைரஸ் – அறிவிக்கப்பட்டது அவசரகால நிலை!

இந்திய மாநிலமான கேரளாவில் சுகாதார அவசர கால நிலையை அம்மாநில சுகாதார அதிகாரிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் 60 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜோர்ஜ் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வைரஸ் தொற்றில் இருந்து விடுபட, நோயாளிகளைப் பார்க்க மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், முகக்கவசம் அணியுமாறும் சுகாதாரத் துறை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

 

நாட்டின் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து !

நாட்டின் எதிர்காலத்தை அரசியல்வாதிகளின் தேவைகளுக்கேற்ப பயன்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், கம்பஹாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

“ஜனாதிபதியாக பொறுப்பேற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

எனக்கு வழங்கப்பட்ட அடிப்படை கோரிக்கைகளை நான் பூர்த்தி செய்துள்ளேன். நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை.

பொருளாதாரம் ஒன்றில்லாத, அரசாங்கமொன்று இல்லாத ஒரு நாட்டையே நான் சவாலுக்கு மத்தியில் பொறுப்பேற்றேன். நெருக்கடிக்கு மத்தியிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

 

நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு பலரிடம் கோரியிருந்தேன். அப்போது, அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

அதன்பின்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நாம் கூட்டணியொன்றை ஆரம்பித்தோம்.

எரிபொருள், எரிவாயு, மருந்துகள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவியது. மின்வெட்டு காணப்பட்டது. அவ்வாறான ஒரு நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம்.

 

எனவே, நாம் மேலும் முன்னொக்கி செல்ல வேண்டும். நம் நாட்டில் அபிவிருத்தியை நோக்கி பயணிக்க வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

 

இன்று எமக்கு கடன்வழங்கும் நாடுகள் இலங்கை தொடர்பாக நம்பிக்கை கொண்டுள்ளன. நாட்டில் முதலீட்டு திட்டங்களுக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

நாட்டு மக்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் எதிர்காலத்தை அரசியல் வாதிகளின் தேவைகளுக்குயேற்ப பயன்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. நாடு தொடர்பில் சிந்தித்தே செயற்பட வேண்டும்.

 

சஜித் பிரேமதாசவும், அநுரகுமார திசாநாயக்கவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

நாட்டின் கொள்கைகளுக்கு அமையவே அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் – விசாரணை செய்ய 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழு !

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பாக அண்மையில் ஏற்பட்டிருந்த சர்ச்சையான நிலைமையினைத் தொடர்ந்து, வைத்தியசாலை நிர்வாகத்தினை கண்காணிக்கும் நோக்கில் 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.

 

குறித்த கலந்துரையாடலில் வைத்தியர் அர்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது. அத்துடன் வைத்தியர் அர்சுனாவை மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும் வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உட்பட 16 குற்றச்சாட்டுகள், எழுத்துமூலமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் குறித்த விவகாரத்தில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு கூறிய அமைச்சர், ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி தீர்க்கமான ஒரு பதிலை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் 15 அங்கத்தவர் உள்ளடங்கிய அபிவிருத்தி குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டு மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் நடாத்த வேண்டும் எனக் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பத்திரன,

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரரை அடுத்து கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவரும் பிணையில் விடுதலை!

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொட கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு டிஃபென்டர் காரில் கடத்திச் சென்று சிறையில் அடைத்து தாக்கியமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

அந்த தண்டனைகளுக்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கைக்கு அமைய இந்தத் தீா்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம் இனவாத கருத்துக்களை முன்வைத்த குற்றச்சாட்டில் கைதாகி கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசாரதேரர் விடுதலையானதும் கவனிக்கத்தக்கது.