06

06

யாழ் மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராகவும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும் தென்மராட்சி மக்கள் போராட்டம்!

“தனியார் மருத்துவமனைகளை வளர்ப்பதற்காக அரச மருத்துவமனைகளை முடக்கும் நடவடிக்கையில் சில யாழ் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர், இவர்கள் சாவகச்சேரிச் சிறுமியின் உடலைக் கூட மூன்று லட்சம் பெற்றுக்கொண்டே ஒப்படைத்துள்ளனர், பெரும்பாலும் தனியார் துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அரச மருத்துவமனைகளில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதில்லை” எனப் பேராதனையில் மருத்துவராகக் கடமையாற்றி தற்போது தான் பிறந்த மண்ணுக்கு சேவையை வழங்க வந்துள்ள டொக்டர் ராமநாதன் அர்ச்சுனா தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இப்பதிவுகள் அவருடைய முகநூல் பதிவிலும் காணொலியாக உள்ளது. இவர் யூன் 14 அன்று பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று வந்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையைக் கட்டியெழுப்பும் அவாவோடு வந்திருந்த டொக்டர் அர்ச்சுனா அங்கு 15 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஊழல்களையும் மோசடிகளையும் தட்டிக் கேட்டதற்காக மருத்துவ மாபியா ரவுடிகளால் தாக்கப்பட்டார். தங்களுடைய வருமானத்தில் மண் வீழ்ந்துவிட்டது என்றும் தாங்கள் அம்பலமாகப் போகின்றோம் என்றும் கொதித்து எழுந்த மருத்துவ மாபியாக் கும்பலைச் சேர்ந்த டொக்டர் மயூரன், டொக்டர் இந்திரகுமார், மருத்துவக் கல்வியில் பயிலும் தர்சன் மற்றும் டொக்டர் கமலா யோகுவின் கணவர் ஆகியோர் இணைந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினையில் முக்கிய பங்குவகிக்கும் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் மருந்தக மோசடிகள் தொடர்பிலும் குற்றம்சாட்டப்பட்டவர் என்பது மிக முக்கியமானது. இவர் டொக்டர் அர்ச்சுனாவின் அதிரடி நேர்மையை ஏற்கனவே அறிந்திருந்ததால் அர்ச்சுனா யாழ்ப்பாணத்திற்கு வந்து கடமையாற்றுவதை விரும்பியிருக்கவில்லை. அதனால் டொக்டர் அர்சுனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருவதை தடுப்பதற்கு பல கைங்கரியங்களை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் அவை பலிக்கவில்லை. மத்திய சுகாதார அமைச்சு டொக்டர் அர்ச்சுனாவை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பதில் பொறுப்பதிகாரியாக நியமித்தது. டொக்டர் அர்சுனா நேர்மையாக மின்னல் வேகத்தில் 15 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை 15 நாட்களில் சீரமைக்க முற்பட்டார்.

டொக்டர்கள் என்ற பெயரில் திரிந்த யாழ் மருத்துவ மாபியாக் கும்பல் கதி கலங்கியது. மக்களுடைய, தொழிலாளர்களுடைய நலன்களுக்காகப் போராட வேண்டிய தொழிற்சங்கம் மக்களுக்கு எதிராகவும் மக்கள் நலனைப் பேண வேண்டும் என்று கோரும் மருத்துவர் டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிராகவும் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினர். இது பற்றி முகநூலில் கருத்து வெளியிட்ட ரவீந்திரன் ரட்ணசிங்கம் “பணி செய்தால் தானே பணிப் புறக்கணிப்பு செய்ய வேண்டும்” என்று எழுதியுள்ளார். இந்த மருத்துவ மாபியாக் கும்பலின் விளக்கங்கள் நகைச்சுவையாகவும் நளினமாகவும் மக்களால் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகின்றது. டொக்டர் அர்ச்சுனாவிற்கான ஆதரவு மக்கள் மத்தியிலும் பல்வேறு தளங்களிலும் பெருகிவருகின்றது.

இந்நிலை தொடர்பாக நிலைமையை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா, அவருடைய ஆலோசகர் எஸ் தவராஜா ஆகியோர் நேற்று யூலை 7 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் சென்று டொக்டர் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்தனர். இதற்கு முன்னதாக டொக்டர் அர்ச்சுனாவை தாங்கள் இடமாற்றி உள்ளதாக மருந்தக மோசடிகளில் சம்பந்தப்பட்ட வட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் அறுமுகம் கேதீஸ்வரன் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் தான் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டபடியால் அவர்களின் முடிவின்படியே செயற்படமுடியும் என டொக்டர் அர்ச்சுனா தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று புலம்பும் தேசிய சோம்பேறிகளுக்கு அங்குள்ள மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் வந்தால், எப்படியாவது அவர்களை தமிழ் பிரதேசங்களைவிட்டு கலைப்பதற்கான அதிகாரம் மட்டும் எப்படியோ வந்துவிடும். தங்களுக்குள்ள அவ்வளவு அதிகாரங்களையும் பயன்படுத்தி சாதிய ஒடுக்குமுறைகளைச் செய்வது, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது, அர்ப்பணிப்புள்ளவர்களை தங்களுக்கு வேண்டாதவர்களை தமிழ் பிரதேசங்களைவிட்டு கலைப்பது போன்றவற்றுக்கு பொலிஸாரோடு கைகோர்த்து தங்கள் அதிகாரங்களை நிலைநாட்டுவார்கள். வட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், சுகாதார அமைச்சை மீறி வழங்கிய இடமாற்றக் கடிதம் அவ்வாறானதே.

டொக்டர் அர்ச்சுனா மருத்துவத்துறையில் உள்ள மோசடிகளை மட்டும் அம்பலப்படுத்தி உள்ளார். இதே மாதிரியான மோசடிகள் ஏனைய துறைகளிலும் பரந்துள்ளது. இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் நடைபெறுகின்றது. மேலும் அரசியல் வாதிகள் அளவுக்கு அல்லது அவர்களைக் காட்டிலும் அதிகாரிகளும் மிக மோசமான மோசடிகளிலும் சுரண்டல்களிலும் அதிகார துஸ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு வருகின்றன். அவர்கள் ஊதியம் பெறுவதற்கான உழைப்பை வழங்கத் தயாராகவில்லை. கிளிநொச்சி இரணைமடு குளத்தை விஸ்தரித்து அதன் நீர்க்கொள்வனவை அதிகரிக்க உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர் வேலைத் திட்டத்துக்கான நிதியை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பெற்றுக்கொடுத்திருந்தார். ஆனால் அதில் பணியாற்றிய வடமாகாணத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கையால் அத்திட்டம் கைநழுவிச் சென்றதுடன் அவ்வளவு தொகையும் உலக வங்கியால் மீளப் பெறப்பட்டது.

மருத்துவ மாபியாக்களின் பிரச்சினை யுத்தம் முடிவுக்கு வந்த கையோடு ஆரம்பமாகிவிட்டது. மருத்துவத்துறையின் பல்வேறு முறைகேடுகள் பெரும்பாலும் ஒழித்து மறைக்கப்பட்ட போதும் அவ்வப்போது அவை வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றது.

அரச மருத்துவமனைகளைச் சீரழிப்பதன் மூலம் அரச ஆஸ்பத்திரிக்குப் போனால் இழுத்தடிப்பார்கள், ஒழுங்காகச் சிகிச்சை அளிக்கமாட்டார்கள், அங்கு தரும் மருந்துகளும் குணமாக்காது, அங்கு தேவையான உபகரணங்களும் இல்லை என்று எல்லோரும் குற்றம்சாட்டும் நிலையை அரச மருத்துவமனைகளில் பணியாற்றிக்கொண்டு தனியார் மருத்துவமனைகளை இயக்கும் உரிமையாளர்களான மருத்துவர்களும் அங்கு மருத்துவர்களாக பணியாற்றும் மருத்துவர்களும் ஏற்படுத்தி உள்ளனர். யாழில் பார்மசிகளில் மருத்துவமனைகளின் பிரச்சினைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக விளங்கிய எழுத்தாளர் டானியலின் மகன் சாம் ஏற்கனவே வெளிக்கொண்டு வந்துள்ளார்.

2009 யுத்தம் முடிவுக்குப் பின் டென்மார்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் குளொபல் மெடிக்கல் எய்ட் என்ற நிறுவனம் மூன்று மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியவசிய மருந்துப் பொருட்களை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நோயைக் குணமாக்கும் நோக்கோடு அரச அனுமதி பெற்று, அரச சுற்று நிருபத்தோடு வடக்கு கிழக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. ஆனால் வடக்கில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய இந்த மருத்துகளை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவும் இல்லை. வழங்கவும் இல்லை. இதற்கு இலங்கையின் மருத்துவமனையொன்றில் பணியாற்றும் மருத்துவ அதிகாரி தந்த விளக்கம் அதிர்ச்சியானது. “இலவச மருந்துப்பொருட்களை யுத்தத்தின் விலியிலிருந்த மக்களுக்கு வழங்கினால் அவர்கள் மனதார வாழ்த்துவார்கள், ஆனால் அதனை வழங்கிய மருத்துவருக்கு எவ்வித பலனும் இல்லை. ஆனால் மெடிக்கல் ரெப் கொண்டுவரும் புதுப்புது மருந்துகளை மருத்துவர் நோயாளிக்குப் பரிந்துரை செய்தால் அவருக்கு கொமிஸன் கிடைக்கும், விடுமுறையை வெளிநாட்டில் களிப்பதற்கு விமானச்சீட்டு ஹொட்டல் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அதனால் குளொபல் மெடிக்கல் எய்ட் வழங்கிய மருந்துப் பொருட்கள் பாவனைக் காலம் முடியும்வரை இருப்பில் வைக்கப்பட்டு இறுதியில் காலாவதியாகி குப்பைக்குள் போடப்பட்டது. பாவம் மக்கள்” எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இலங்கையில் பல்மருத்துவராகக் கடமையாற்றி தற்போது பிரத்தானியாவில் கடமையாற்றும் மருத்துவகலாநிதி தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் டொக்கடர் அர்சுனாவின் பதிவுகளைத் தொடர்ந்தும் பார்த்து வருவதாகவும் அவை நூறு சதவீதம் உண்யென்றும் அவருக்கு எதிராகக் கிளம்பியுள்ளவர்கள் உண்மையிலேயே மருத்துவ மாபியாக்களாகத்தான் இருக்க முடியும் எனவும் தெரிவித்தார். பிரித்தானியாவில் பல்மருத்துவர்கள் லட்சங்களில் சம்பாதிக்கும் போதும் 15 பவுண் 20 பவுண் மருத்துவராக உள்ள இவரிடம் நீங்கள் ஏன் இந்தக் கருத்தை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறீர்கள் என்ற போது பிழையெனத் தெரிந்திருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டும் தகுதி எனக்கில்லை. ஏனென்றால் இலவசக் கல்வியில் கற்ற நான் இப்போது பிரித்தானியாவில் வாழ்கின்றேன் அதனைச் சுட்டிக்காட்டும் தகுதி எனக்கில்லை. ஆனால் அந்தத் தகுதியும் நேர்மையும் டொக்டர் அர்ச்சுனாவிற்கு உள்ளது. அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை எனத் தெரிவித்தார். இவ்வாறான பதிவுகளை எமது வட்ஸ்அப் மருத்துவக் குழவில் பகிர்ந்தாலேயே அதனை நீக்கச்சொல்லி துசணத்தில் ஏசவார்கள் என்று தேசம்நெற்றுக்குத் தெரிவித்த அவர், மருத்துவத்துறை இலங்கையிலும் தான் பிரித்தானியாவிலும் தான் உலகம் பூராவும் தான் மருத்துவ மாபியாக்களின் கைகளுக்கு மாறிக்கொண்டுள்ளது. இதனை யாழில் தனியார் மருத்துவமனைக்கு தந்தையை அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றவரின் அனுபவத்தைக் கேளுங்கள்:

டொக்டர் அர்ச்சுனாவுக்கு இடமாற்றம் வழங்கி, வட மாகாணசபை சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேததீஸ்வரனால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டவர் டொக்டர் ரஜீவ். இவர் பொறுப்பதிகாரியாவதற்கான தகமையைப் பெறவில்லையென டொக்டர் அர்ச்சுனா குற்றம்சாட்டியிருந்தார். டொக்டர் அர்ச்சுனாவை மிரட்டி, அவரை அடித்து, தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்தி கரணம் போட்டும் அவர் பணியவில்லை. இந்த இயலாமையின் பிரதிபலிப்பாக இறுதியில் டொக்டர் ரஜீவையும் பொறுப்பதிகாரியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருக்க விரும்புகிறீர்களா என்று டொக்டர் அர்சுனாவிடம் மாகாண சுகாதார அத்தியேட்சகர் கேட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள டொக்டர் அர்ச்சுனா இப்போது எல்லாமே மக்களிடம் ஒப்படைத்து விட்டேன் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்பு என்று தெரிவித்துள்ளார். தற்போது தென்மராட்சி மக்கள், வர்த்தக சங்கம், பொது அமைப்புகள் நலன்விரும்பிகள் அனைவரும் இணைந்து யாழில் உள்ள டொக்டர்கள் என்ற பெயரில் உலாவும் மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக கண்டனக் கடையடைப்புப் போராட்டத்தில் யூலை எட்டு அன்று ஈடுபடவுள்ளனர். மருத்துவ சேவை என்பது இலாபமீட்ட மட்டும் அல்ல. இந்த மருத்துவ மாபியாக்களின் மத்தியில் டொக்டர் அர்ச்சுனா மக்களின் பக்கம் நின்றதால் இன்று அவர் மக்களின் மீட்பராகி உள்ளார். தங்களை யார் நேசிக்கின்றார்களோ மக்கள் அவர்களை நிச்சயம் நேசிப்பார்கள்.

தன்னுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்களுக்கு சேவை வழங்கிய இராணுவ அதிகாரி மாற்றலாகிப் போன போது ஊர்மக்கள் கோலகலமாக கண்ணீரோடு பிரியாவிடையை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது. அதே போல் வடக்கின் கடல் எல்லையில் ஈழத்தமிழ் மீனவர்களுக்காக போராடி களப் பலியான கடற்படை வீரனுக்காக 3,000 மீனவர்கள் ஒரு வாரத்திற்கு முன் தன்னிச்சையாக அவருடைய மரணச் சடங்கிக்கு தென்பகுதி சென்றனர். தற்போது டொக்டர் அர்ச்சுனா ஈழத்தில் மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார். அவருக்காகவும் வடக்கின் மாபியா கும்பலுக்கு எதிராகவும் மக்கள் போராடத்தயாராகிவிட்டார்கள்.

சாதி, மதம், இனம் என்று மக்களைக் கூறுபோட்டு குறும்தேசியவாதத்தையூட்டி பிரித்து வைத்தாலும் தங்களை நேசிப்பவர்களை மக்கள் ஒருபோதும் சாதி, மதம், இனம் பார்த்து கைவிடமாட்டார்கள். உண்மைகள் உறங்குவதில்லை. மக்களை சிறிது காலம் சில காலம் ஏமாற்றலாம். எல்லாக் காலத்திலும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

இரண்டு பிள்ளைகளின் 29 வயதான தாய் கத்தி குத்துக்கு இலக்காகி பலி – கணவன் கைது !

யாழ்ப்பாணம்  கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது கொழும்புத்துறை ஏவீ வீதி மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றிலேயே இடம்பெற்றது.

இதன்போது, திவிகரன் நிஷானி என்ற 29 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் முன்னாள் போராளி மர்மமான முறையில் மரணம்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (5) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கம்பிகளின் மொழி பிறேம்“ என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் என்ற 42 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் ”குறித்த நபர் நேற்று இரவு (05) அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார்.

இதன்போது தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என சத்தம் போட்டுள்ளார்.

பின்னர் குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த முன்னாள் போராளி ஒரு கால் மற்றும் ஒரு கையையும் இழந்தவர் என்பதுடன் பல்துறை சார் ஆளுமை மிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மசூத் பெசெஸ்கியன் !

ஈரானுக்கான புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்ததாக ஈரானிய செய்திகள் தெரிவித்திருந்தன.

பதிவான வாக்குகளில் 42.5 சதவீத வாக்குகளை பெற்று சீர்திருத்தக் காட்சியைச் சேர்ந்த 69 வயதான ஈரான் முன்னாள் சுகாதார அமைச்சர் [2001-2005] மசூத் பெசெஸ்கியன் முன்னிலையில் இருந்தார். 38.6 சதவீத வாக்குகளை பெற்று தீவிர வலதுசாரி தலைவரான சயீது ஜலீலி இரண்டாம் இடத்தில் இருந்தார்

ஆனால் ஈரான் சட்டப்படி வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் குறைந்தது 50 சதவீத வாக்குக்கள் பெற்றிருக்க வேண்டும். எனவே முதல் இரண்டு இடத்தைப் பிடித்த இருவரையும் முன்னிறுத்தி நேற்று [ 5] இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

இந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் பதிவான கிட்டத்தட்ட 30 மில்லியன் வாக்குகளில் [49.8 சதவீதம்], பெசெஷ்கியன் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை[ சுமார் 56 சதவீதம்] வாக்குக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

சயீது ஜலிலி 13 மில்லியன் வாக்குகளுடன் பின் தள்ளப்பட்டுள்ளார். எனவே ஈரான் அரசின் புதிய அதிபராக மசூத் பெசெஸ்கியன் பதவி ஏற்க உள்ளார். மசூத் பெசெஸ்கியன் தொழில்முறையாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்துள்ளார். இவர் ஈரானில் தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டும் வரும் பெண்கள் பர்தா அணியும் விதிகள் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு கழகம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி – ஹால் டி கோல் ஹோட்டலில் இன்று (06) நடைபெற்ற கல்வி நவீனமயமாக்கலின் புதிய அத்தியாயமாக தென் மாகாணத்தின் 200 பாடசாலைகளுக்கு 2,000 நவீன வகுப்பறைகள் மற்றும் 2,000 டெப் கணனிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்திர் ரமேஷ் பத்திரன இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய தென் மாகாண சபைக்கு கிடைத்த 3,000 இலட்சம் ரூபாய் (30 கோடி) நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளில் 150 பாடசாலைகள் காலி மாவட்டத்திலும் ஏனைய 50 பாடசாலைகள் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அமைந்துள்ளன.

ஒரு வகுப்பறைக்கு 10 டெப் கணினிகள் என்ற வகையில் 200 வகுப்பறைகளுக்கு 2,000 டெப் கணினிகள் வழங்கப்பட்டன.

இதன் அடையாள அம்சமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய உயர்ஸ்தானிகர் சந்தூஷ் ஜாவிற்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

“தற்போது உலகம் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறி வருகிறது. அதற்கேற்ப, இந்நாட்டின் கல்வி முறையும் நவீன தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் அமைச்சினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அன்று நாம் பல கல்விக் கொள்கைகளை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினோம். அந்தக் கல்விக் கொள்கைகள் அன்றைய காலத்திற்கு ஏற்றதாக இருந்தாலும், இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால், கல்வித் துறையில் புதிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

தற்போது பாடசாலைகளில், செயற்கை நுண்ணறிவுக் கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கல்வியை தொடங்கி சில வருடங்கள் ஆகிறது. இந்த ஆண்டு நாம் ஆரம்பித்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி தேவைப்படும். அதற்குத் தேவையான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிளை அரசாங்கம் ஏற்படுத்தும். மத்திய கல்லூரிகள் மற்றும் தேசிய பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும்.

நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறுவதில் அண்டை நாடான இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கைக்கு ஐ.ஐ.டி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடன் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.

மலேசியாவில் நான் எலான் மஸ்குடன் கலந்துரையாடினேன். அவரது நிறுவனத்தின் இணையத் தொழில்நுட்பம் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் தொலைதூர கிராமங்களில் உள்ள பிள்ளைகளுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று தென் மாகாணம் கல்வித்துறையில் அதீத திறமைகளை வெளிப்படுத்தும் மாகாணமாக மாறியுள்ளது. தென் மாகாணத்தின் முதலாவது டச்சு பாடசாலையான பத்தேகம கல்லூரி இன்று தேசிய பாடசாலையாக மாறியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்திற்கு ஏற்ற சந்ததியை உருவாக்கி ஒரு நாடாக உலகையே வெல்லும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் வைத்தியர்கள் – அம்பலப்படுத்திய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல் நடத்திய வைத்தியர்கள்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட வைத்தியர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்யையதினம் (04-07-2024) இடம்பெற்றுள்ளது.
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் அங்கு இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாடு இன்றி காணப்பட்ட சுகாதார சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் செயற்பட்டார். சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலும் வீடியோ பதிவுகளை தனது முகநூலில் பதிவேற்றியிருந்தார்.


இதேவேளை, குறித்த வைத்தியசாலையின் வளங்கள் மக்களுக்கு பயன்படுத்தப்படாத நிலையில் திட்டமிட்ட முறையில் இருட்டடிப்புச் செய்யப்படுவதாகவும் மகப்பேற்று விடுதியை கூட இயங்க விடாமல் வைத்திய குழு ஒன்று தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது பதிவில், மகப்பேறு விடுதி திடீர் விபத்து பிரிவு ஆகியவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரைகளை விடுத்ததன் எதிரொலியாக முன்னாள் வட மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தூண்டுதலின் பேரில் தனக்கு எதிராக வைத்திய அதிகாரிகள் சங்கத்தை களம் இறக்கி தன்னை குறித்த வைத்தியசாலையில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் சிலர் சேர்ந்து குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகளை மழுங்கடிக்கும் முயற்சியில் கடந்த காலங்களில் செயற்பட்டதாகவும், தான் இந்த வைத்தியசாலைக்கு வருகை தந்ததும் இவ்வாறான விடயங்களுக்கு இடம்கொடுக்க மாட்டேன் என தெரிந்த நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.

மக்கள் போராட்டம்

இந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றி இருந்ததையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் பணிபுரியும் வைத்தியர்கள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நேற்றைய தினமும் இன்றைய தினமும் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்லுகின்ற நோயாளிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் தென்மராட்சியின் பொது அமைப்புக்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இன்று முற்பகல் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து நிர்வாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிப்பதற்காக வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தனர்.

அவ்வேளை அங்கு வருகைதந்த சாவகச்சேரி பொலீசார் வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தவர்களை அகற்ற முற்பட்டனர்.

இதன்போது அமைதியான முறையில் நாங்கள் மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து சிகிச்சை நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க கோரிக்கை முன்வைக்கவே எந்தவித இடையூறுகளும் செய்யாமல் இருக்கின்றோம் ஆகவே எம்மை கலைந்து செல்லுமாறு கூற முடியாது என்று தெரிவித்த முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோரை அங்கிருந்த சாவகச்சேரி பொலிசார் கைது செய்தனர்.

அது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ்க்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு உடனடியாக விரைந்த மனித உரிமை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் பொதுமக்களோடும் வைத்தியசாலை நிர்வாகத்தோடும் கலந்துரையாடியதோடு உடனடியாகவே சாவகச்சேரி போலீஸ் நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்ட முன்னாள் நகர சபை உறுப்பினரையும் பார்வையிட்டார்.

இதனை அடுத்து சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கி இருந்து சிச்சை பெற்றவர்கள் அனைவரும் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு வீடுகளுக்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.