25

25

“நான் பதவியை விட நாட்டை நேசிக்கிறேன்.” – ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியது குறித்து முதன்மையாக பைடன் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

போட்டியிலிருந்து விலகிய பின்னர் நாட்டு மக்களுக்கு முதல்முறையாக   உரையாற்றியபோது பைடன்,

“இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான நேரம் இது, அவர்களுக்கு வழிவிடுவதே சிறந்தது என்று நான் முடிவு செய்தேன்.

நமது தேசத்தை ஒன்றிணைக்க அதுவே சரியான வழியாகும் என்பதற்காக விலகினேன். தற்போது நாட்டின் ஜனநாயகத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ஜனநாயகத்தை காப்பதற்காகவே அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ளேன். பதவியை நான் மதித்தாலும், அதைவிட நாட்டை நேசிக்கிறேன்.

ஜனாதிபதியாக அமெரிக்க மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய கெளரவமாக கருதுகிறேன், ஆனால், ஜனநாயகத்தை பாதுகாப்பது பதவியைவிட முக்கியமானது. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும்.நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடம் உள்ளது.

கமலா ஹாரிஸ்(kamala harris) மிகவும் அனுபவம் கொண்டவர், திறமையானவர். துணை ஜனாதிபதியாக அவரது செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. தற்போது அமெரிக்காவை வழிநடத்த அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தாண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்த பல ஆண்டுகள் அமெரிக்கா மற்றும் உலகின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய தேர்தல். நேர்மை, கண்ணியம், நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியற்றை அமெரிக்க மக்கள் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் தோல்விக்கு அஞ்சுகிறார் – ஜே.வி.பி குற்றச்சாட்டு!

“அரசாங்கம் தேர்தலைப் பிற்போட முயற்சி செய்கின்றது” என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பொதுமக்கள் ஜனாதிபதித் தேர்தலையே எதிர்ப்பார்த்துள்ளனர். ஆனால் அரசாங்கம் தேர்தலை பிற்போடும் முயற்சியிலேயே உள்ளது.

அரசாங்கம் மீது மக்களுக்கு காணப்படும் நம்பிக்கையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

 

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் கிடைத்துள்ளது. எனவே ஆணைக்குழு இனியும் பின்வாங்காமல் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நாளைய தினம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. தேர்தல் தோல்விக்கு அஞ்சியே ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தேர்தலை பிற்போடுவதற்கான சதித்திட்ட முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார்” இவ்வாறு விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

”நான் மூளையை உபயோகித்துச் செயற்படுகின்றேன். நன்றி விக்கினேஸ்வரன்” – எம்.ஏ.சுமந்திரன்

”நான் மூளையை உபயோகித்துச் செயற்படுகின்றேன்” என்று விக்னேஸ்வரன்  கூறியமைக்கு நன்றியைத் தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

சுமந்திரனுக்கு தமிழ்த் தேசிய உணர்வு இல்லை எனவும், அவர் மூளையை மாத்திரம் பாவித்து செயற்படுகின்றார் என விக்னேஸ்வரன்  அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த சுமந்திரனிடம், விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “விக்னேஸ்வரன் கூறுகின்ற விடயங்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. ஆனால், என்னுடைய மூளையை உபயோகித்து நான் சிந்திக்கின்றேன் என்று அவர் கூறியமைக்கு என்னுடைய நன்றியை அவருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஒரு ஆசிரியனாக தன்னுடைய மாணவர்கள் மூளையைத்தான் பாவித்து சிந்தித்துக் கூறுகின்றனர் என்று அவர் கண்டுபிடித்திருக்கின்ற கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமானது.

ஆனால், அவர் எதனைப் பாவித்துச் சிந்திக்கின்றார் என்று எனக்குத் தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 – வேட்பாளராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, திலித் ஜயவீர, சரத் பொன்சேகா ஆகியோர்கள் தாங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உள்ளிட்ட தகவல்களை அறிவித்து நாளைய தினம் அதிவிசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

 

இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி தேர்தல் திகதி, வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவுள்ள காலப்பகுதி உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு இந்த விசேட வர்த்தமானி நாளையதினம் (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.