28

28

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர மின் பிறப்பாக்கி !

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கான நிரந்தர மின் பிறப்பாக்கி நேற்று (27) சனிக்கிழமை வைத்தியசாலையை வந்தடைந்ததாக வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவை மீண்டும் செயற்படவுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இன்று (28.7.2024) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வெளிநோயாளர் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவை மீண்டும் வைத்தியசாலையின் முன் பகுதிக்கு மாற்றப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு , சத்திர சிகிச்சை கூடம் ஆகியவற்றை இயக்க ஆளணி மற்றும் மின்சாரம் தடைப்படும் வேளையில் மாற்றீடான மின்பிறப்பாக்கி ஆகிய அவசியமானதாக காணப்பட்டன.

தற்போது 400 கிலோ வாட்ஸ் வலுவுடைய நிரந்தர மின் பிறப்பாக்கி கிடைக்கப் பெற்றுள்ளது.

அதேவேளை ஒரு சில ஆளணி பற்றாக்குறையும் அடுத்த வாரம் அளவில் நிரப்பப்படவுள்ளது. எனவே அடுத்த வார நடுப்பகுதியில் புதிய அலகுகளை இயக்க உத்தேசித்துள்ளோம்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவை செயற்படுத்துவதற்கான மின்பிறப்பாக்கி இல்லாததன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைக் கூடத்தை இயக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், 400 கிலோ வாட்ஸ் வலுவுடைய நிரந்தர மின் பிறப்பாக்கி வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எதிர்வரும் வாரத்தில் இருந்து குறித்த மின்பிறப்பாக்கி பயன்பாட்டிற்கு வரும் என்றும் அதுவரை தற்போதைய தற்காலிக மின் பிறப்பாக்கி பயன்பாட்டில் இருக்கும் எனவும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரஜீவ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு கஞ்சா கொண்டு சென்ற 13 வயது மாணவன் – முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு மாணவன் ஒருவன் கஞ்சாவுடன் சென்ற சம்பவம் கடந்த வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

 

இது தொடர்பில் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 8இல் கல்வி கற்கும் இந்த மாணவன் தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்லும்போது சிறு கஞ்சா பொதி ஒன்றினை கொண்டு சென்றுள்ளான். இதனை அவதானித்த சக மாணவன் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளான்.

 

இது தொடர்பாக அந்த மாணவனை விசாரித்த பாடசாலை அதிபர், மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

 

அத்தோடு, மாணவனுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது? வீட்டில் கஞ்சா பாவனை இடம்பெறுகிறதா? என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் எகிறும் குற்றச்செயல்கள் – 300 நாட்களில் 500 கொலைகள் !

2023 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 500 கொலைகள் பதிவாகியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அறிக்கையின்படி, கடந்த ஆண்டு குறித்த காலப்பகுதியில் 488 கொலைகள் நடந்துடன், அவற்றில் 52 துப்பாக்கிச் சூடுகள் அடங்கியுள்ளன.

 

தங்காலை, நுகேகொடை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளில் அதிகளவான கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், தங்காலை பிரதேசத்தில் 32 கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் 2018 மற்றும் 2022 க்கு இடையில் பலத்த காயங்கள் மற்றும் மனித கொலைகள் சம்பவங்கள் 7017 பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 2030 குற்றங்களும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாட்டில் இடம்பெறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கணக்காய்வு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில் கடந்த 6 ஆண்டுகளை கணக்கில் கொண்டால், கடந்த ஆண்டு அதிகளவான வீடுகளை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.

 

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் அந்த குற்றங்களில் 50 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இதேவேளை, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் 27 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடும் கணக்காய்வு அறிக்கை, பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை 182ல் இருந்து 226 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஏனைய ஆண்டுகளை விட கடந்த ஆண்டில் பெண்களை காயங்களுக்கு உள்ளாக்கல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், கடந்த வருடம் அந்த குற்றங்களை தீர்ப்பதில் 99 சதவீத முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக கணக்காய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை பந்தாடி ஆசிய சம்பியனானது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!

2024 ஆம் ஆண்டு மகளிருக்கான ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி முதல் முறையாக சுவீகரித்து சாதனை படைத்துள்ளது.

 

ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற 9 ஆவது மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதின.

 

இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Smriti Mandhana அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Kavisha Dilhari 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 

இதனையடுத்து, 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

 

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Harshitha Samarawickrama ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் Chamari Athapaththu 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

 

இந்தநிலையில் இந்திய மகளிர் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி முதல் முறையாக ஆசியக் கிண்ணத்தைத் தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.