July

July

வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பம் !

வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

அண்மையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

ஒவ்வொரு நிலையத்திலும் 50 வீதத்திற்கும் அதிகமான பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் தொழில் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு பணிப்பாளர் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் 4000 பேரை தொழிலில் அமர்த்த வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 206 தொழிற்பயிற்சி நிலையங்களில் 107 பயிற்சி நிலையங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

பயிற்சிப் பாடநெறிகள் மாலை வேளையிலும் வார இறுதி நாட்களிலும் நடைபெறுவதால், தொழிலுக்கு செல்வோர் கூட இதில் பங்கேற்க முடியும். இது தொடர்பான மேலதிக தகவல்களை 0117 277 888 மற்றும் 0117 270 270 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அவசர விபத்துகள் பிரிவில் அனுமதி !

கைது செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சட்டவிரோத கூட்டமொன்றின் அங்கத்தவராக செயற்பட்டமை, அரச ஊழியருக்கு குற்றவியல் அழுத்தம் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நேற்று (28) அவர் கைது செய்யப்பட்டார்.

 

தரிந்து உடுவரகெதர கைது செய்யப்படுகின்ற சந்தர்ப்பத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

 

தேசிய கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் ஊழியர் சேமலாப நிதியத்தை கொள்ளையிடுதல் அரச ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்காமை ஓய்வூதியத்தில் கை வைத்தல் மற்றும் அநீதியான தொழில் சட்ட மறுசீரமைப்பிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

எனினும், அங்கு வருகை தந்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவை வாசித்து ஆர்ப்பாட்டத்திற்கு வரையறைகள் உள்ளதாக சுட்டிக்காட்டினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பொரளை சந்திக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தையிட்டி விகாரை தொடர்பில் விரைவில் சாதகமான பதில் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் இன்று (29) நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது குறித்தும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதன் தொடர்ச்சியாக இன்று விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அப்பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது குறித்து சாதகமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

 

அதனை தொடர்ந்து மாவட்ட கட்டளைத் தளபதி, பிரதேச செயலாளர் மற்றும் நில அளவையாளர் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. என்றும் தெரிவித்தார்.

 

அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பரிகாரம் காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.” -உதய கம்மன்பில

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போதுள்ள தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என என்றும் குறிப்பிட்டார்.

 

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

 

ஆனால் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என உதய கம்மன்பில தெரிவித்தார்.

 

வடக்கு, கிழக்கில் காணி தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதற்கான விசேட பொறிமுறை ஒன்று வகுக்கலாமே தவிர காணி அதிகாரங்களை வழங்க கூடாது என்றும் கூறினார்.

 

இதேவேளை மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத்தில் தூக்குதண்டனை !

இலங்கையைசேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத் தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது.

 

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் 2015 இல் மசூதியொன்றின் மீதுஇடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரி உட்பட ஐந்துபேருக்கு தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது.

 

குவைத்தின் மத்திய சிறைச்சாலையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

மசூதி தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவர் போதைப்பொருள் வர்த்தகர் இலங்கையை சேர்ந்த தண்டனை வழங்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஒருவர் எகிப்தை சேர்ந்தவர் மற்றையவர் இலங்கையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“மாகாண சபை தேர்தல் தேவையில்லை என ஜனாதிபதியிடம் சி.வி.விக்கினேஸ்வரன் கூறினார்.” – சுமந்திரன் குற்றச்சாட்டு!

மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்

“நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக உரையாடுவதற்கு என்று கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வல் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள் அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.

 

இந்த கூட்டத்தில் அதிகாரப்பகிர்வு என்று சொன்னது பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆம் திருத்தத்தை அமுல்ப்படுத்துவது பற்றி அவர் பேசியிருந்தார்.

 

இதன்போது நான் ”தற்போது கொண்டு வந்திருக்கின்ற தனிநபர் சட்டமூலத்திற்கு அமைவாக மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என சுட்டிக்காட்டினேன். எனினும் தேர்தல் இப்போது தேவையில்லை அதிகார பகிர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் பேசுவோம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

 

மேலும் நீங்கள் இந்த இரண்டிலே ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் ஒன்று தேர்தல் அல்லது அதிகாரங்கள் பகிர்வது இரண்டையும் ஒரே நேரத்தில் கேற்க முடியாது என திட்டவட்டமாகக் கூறினார்.

 

இது ஒரு முரண்பட்ட கருத்து அல்ல இரண்டும் ஒரே திசையில் தான் இருக்கிறது அப்படி இருக்கின்ற போது நீங்கள் ஏன் ஒன்று மட்டும் தான் கேட்க வேண்டும் என சொல்கிறீர்கள் என்று நான் அவரோடு வாக்குவாதப்பட்ட போது முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொன்னார் தேர்தல் தேவையில்லை அதிகார பகிர்வு பற்றி பேசுவது தான் முக்கியம் என்றும் கூறினார்.

 

அந்தக் கருத்தோடு நாங்கள் உடன்படவில்லை ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பாக மூன்று கட்சித் தலைவர்களும் அங்கே இருக்கின்ற போது அவர்களின் அனுமதியோடு நான் விக்னேஸ்வரன் ஐயா சொன்னதை மறுத்துரைத்தேன்.பல வருடங்களாக கால தாமதமாகி இருக்கிறது மாகாண சபைத் தேர்தல், ஆகவே அது உடன் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடாத்துவதால் அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக கதைக்க கூடாது என்று எங்கேயும் இல்லை, ஆகவே ஜனாதிபதி தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

நாங்கள் இரண்டையும் கேட்கின்றோம் எனக் கூறியபோது ”அப்படியானால் நாங்கள் கூட்டத்தை முடித்துக் கொள்வோம்” எனக் கூறிவிட்டு ஜனாதிபதி சென்றுவிட்டார். ஆகவே கூட்டம் நேற்று அரைகுறையுடன் நிறைவடைந்திருக்கிறது”இவ்வாறு தெரிவித்தார்.

“அபிவிருத்திக்கான அதிகாரபகிர்வுக்கு தயார். பொலிஸ் அதிகாரங்களை வழங்க தயாரில்லை.” – மைத்திரி தரப்பு !

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதில் எமக்கு உடன்பாடில்லை. மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அது தென்னிலங்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தினால், மக்கள் மத்தியில் மீண்டும் மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

 

அத்தோடு, அபிவிருத்திக்கான அதிகாரபகிர்வுக்கு முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளதாகவும், அரசாங்கம் இது தொடர்பில் தனது ஸ்திரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

 

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்டதாகும். எனினும், இந்தியாவுடன் தற்போது காணப்படும் இராஜதந்திர தொடர்புகள் காரணமாக எம்மால் அதனை உதாசீனப்படுத்த முடியாது.

 

எனவே, அபிவிருத்திக்கான அதிகாரபகிர்வுக்கு முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளோம். பொலிஸ், காணி அதிகாரங்களுடன் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அது தென்னிலங்கை மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும். எனவே இது மக்கள் மத்தியில் மீண்டும் இன மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும்.

 

பொலிஸ் அதிகாரம் தொடர்பில் அரசாங்கமும் எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. நாமும் அது குறித்து பேசவில்லை. இது தொடர்பில் முதலில் அரசாங்கத்தின் முன்மொழிவே அவசியமாகும்.

 

சர்வகட்சி மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனால் மாகாணசபைகளில் ஆயுதங்கள் அற்ற பிரஜா பொலிஸ் சேவையை வழங்குமாறு யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.

 

எனவே, இதனைப் போன்ற யோசனைகளை அரசாங்கமே முன்வைக்க வேண்டும். அரசாங்கத்தினால் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டால், அதற்கு எந்தளவுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முடியும் என்று நாம் கட்சி ரீதியாக கலந்தாலோசித்து தீர்மானம் எடுப்போம்.

 

எவ்வாறிருப்பினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் ரீதியாக பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதால் ஏற்படக் கூடிய விளைவுகளை வரலாற்று சம்பவங்கள் ஊடாக நன்கு அறிந்திருக்கின்றோம்.

 

எனவே, மாகாண முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். எனவே, அரசாங்கம் இது குறித்த முன்மொழிவுகளை முன்வைக்கும் போது, முறையான திட்டமிடல்களை வழங்க வேண்டும். மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது.

 

எனவே, அரசாங்கம் இது தொடர்பில் தனது ஸ்திரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை நாம் சர்வகட்சி மாநாட்டில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம். அரசாங்கம் யோசனையொன்றை முன்வைத்தால் , கட்சி ரீதியில் கலந்துரையாடி தீர்மானிப்போம் என்றார்.

வீட்டிற்குள் இறங்கிய வாள்வெட்டு குழு – வவுனியாவில் குடும்பஸ்தர் செய்த துணிகர செயல் !

வவுனியா – நொச்சுமோட்டையில் நேற்று (27) இரவு இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதியை வாளால் வெட்டி திருட முற்பட்ட நிலையில் வீட்டு உரிமையாளர் வாளை பறித்து திருடர்கள் மீது பதில் தாக்குதல் நடத்திய நிலையில் திருடர்கள் காயமடைந்த நிலையில் தப்பி ஓடியுள்ளனர்.

 

நேற்று (27) இரவு வீட்டில் மாரிமுத்து செல்வநாயகம் (58) அவரது மனைவி செ. செல்வராணி இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முகமூடி அணிந்த நிலையால் திருடர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் வீட்டினுள் புகுந்து இருவர் மீதும் வாளால் வெட்டியுள்ளனர்.

 

இந்நிலையில் மா. செல்வநாயகம் திருடர்கள் கொண்டு வந்த வாளை பறித்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

 

இதனால் திருடர்களில் ஒருவன் காயமடைந்த நிலையில் வீட்டில் இருந்த தொலைபேசியை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

“சர்வதேசத்தின் கண்காணிப்பில் மனிதப் புதைகுழிகளை அகழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.” – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் வலியுறுத்தல் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குக்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய வகையில் கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடன் பேரணி ஒன்று முல்லைத்தீவில் ஆரம்பமாகி மாவட்ட செயலகத்தின் ஊடாக பயணித்தனர். இந்த போராட்டத்தில் வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

 

இதற்கு அமைவாக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கடையடைப்பு அனுஷ்டிக்கப்படுகின்றது.

 

இந்நிலையில் , வடக்கு – கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய ஹர்த்தால் மற்றும் பேரணி ஆகியன நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

 

சர்வதேசத்தின் கண்காணிப்பில் மனிதப் புதைகுழிகளை அகழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

காலாகாலமாக மனிதப் புதைகுழிகளே தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த பெரும் பரிசாக உள்ளது. செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை இந்த விவகாரம் நீண்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு முதல் கொக்குதொடுவாய் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

 

அத்துடன், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். குறித்த காலப்பகுதியில் போர் உச்சமாக நடைபெற்றுகொண்டிருந்தது. எனவே போர்க்காலப் பகுதியில் தான் இந்த புதைகுழிகள் தோன்றியிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கையின் போது தொலைபேசி தேவையே இல்லை – ஐ.நாடுகள் சபை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

மாணவர்களின் கற்றல் நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசி மாணவர்களின் கற்றல் நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிபயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஸ்மார்ட் தொலைபேசிகளின் திரையை நீண்ட நேரம் பார்ப்பதன் மூலம் குழந்தைகளின் உணர்ச்சி ஸ்திரத்தன்மை முறிவு ஏற்படுவதாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு கூறியுள்ளது.

இந்த காரணிகளின் அடிப்படையில் ஸ்மார்ட் தொலைபேசிகளை பாடசாலைகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகளைப் பார்ப்பது குழந்தைகளின் மனநலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக யுனெஸ்கோ சுட்டிக்காட்டுகிறது.

அதன்படி, பாடசாலைகளில்; கையடக்க தொலைபேசிகளின் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.

மேலும் புதிய விடயங்கள் எப்போதும் சிறந்தவை அல்ல என்றும், கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்காமல் கல்வியில் ‘டிஜிட்டல் தொழில்நுட்பத்தை’ பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.

கோவிட்-19 காலப்பகுதியில் ஆன்லைன் தொழில்நுட்பம் மூலம் கற்பிப்பது பயனுள்ளதாக இருந்தாலும், வகுப்பறையில் கற்பிக்கும் முறையால் உருவாகும் குழந்தைக்கும் ஆசிரியருக்கும் இடையிலான நெருங்கிய உறவு ஒரு மாணவருக்கு மிகவும் முக்கியமானது என்று யுனெஸ்கோ கூறுகிறது.

எவ்வாறாயினும், இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு, கல்வி முறைமைகளில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.