1980 களில் இருந்ததைப் போன்ற அடக்குமுறை மனப்பான்மையுடன் இனியும் நாட்டை ஆள முடியாது என்பதை சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உணர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர், இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது முழுமையான தோல்வியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “1980 களுடன் ஒப்பிடும்போது உலகமும் சமூகமும் இப்போது முற்றிலும் மாறிவிட்டன.
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சாதாரண மக்கள் பொறுப்பல்ல. பொருளாதார தோல்விக்கான பழியை ஆட்சியாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.பொருளாதார குற்றங்களுக்கு காரணமான ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் தங்களை ஒருங்கிணைத்து போராடவும், அவர்களை வெளியேற்றவும் உரிமை உள்ளது. மக்களின் போராட்டத்தை தடுக்க அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.
எந்தவொரு போராட்டத்தையும் நசுக்குவதற்கு ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜனாதிபதியின் அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோத நகர்வுகளை முறியடிக்க நாங்கள் மக்களுடன் நிற்போம்.
நியாயமற்ற மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஏற்பாடு செய்த போராட்டங்களை நசுக்குவதன் மூலம் எதிர்காலத்தில் மக்கள் எழுச்சியைத் தடுக்க அரசாங்கம் களம் அமைத்து வருகிறது.
பொருளாதாரம் புத்துயிர் பெறுவதைக் காட்டுவதற்கான அரசாங்கத்தின் தோல்வியுற்ற முயற்சியை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர். அரசாங்கத்தின் அழிவுகரமான நகர்வுகளுக்கு எதிராக அவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.
சமீபத்திய மத்திய வங்கியின் அறிக்கை நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமையை வெளிப்படுத்துகிறது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் தொழில்கள் வீழ்ச்சியடைந்துள்ளன, இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்பதை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளும் நெருக்கடியில் உள்ளன. இந்த நிலைமையை இனியும் பொறுத்துக் கொள்ள மக்கள் தயாராக இல்லை.
அரசாங்கத்திற்கு எதிராக பேசி நாட்டின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அரசாங்கம் வேட்டையாடத் தொடங்கியுள்ளது. ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாகவும் அவரை துன்புறுத்திய காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.