March

March

அமெரிக்காவிலும் tick-tock செயலிக்கு தடை ?

இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சீனாவை சேர்ந்த பிரபல டிக்-டாக் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை செய்யப்பட்டது. மேலும் அந்நாட்டு அரசின் மின்னணு சாதனங்களிலும் டிக்-டாக் செயலியை நிரந்தரமாக தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. அரசு மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை அகற்ற 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மின்னணு சாதனங்களில் இருந்தும் இந்த செயலியை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் டிக்-டாக் செயலியை முழுமையாக தடை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மசோதாவுக்கு அமெரிக்கா பாராளுமன்ற குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் டிக்-டாக் செயலியை தடை செய்வதற்கான முழு அதிகாரம் அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – Tiktok அறிவிப்பு!

18 வயதுக்குட்பட்ட TikTok உறுப்பினர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்குட்பட்ட உறுப்பினர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மட்டுமே TikTok கை பயன்படுத்த முடியும்

அடுத்த சில வாரங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று TikTok தெரிவித்துள்ளது.

லாவோஸில் இடம்பெற்ற இலங்கையர்களுக்கு எதிரான மனிதக் கடத்தல் தொடர்பில் முறைப்பாடு!

தென்கிழக்காசிய நாடான – லாவோஸில் இடம்பெற்றாக கூறப்படும் இலங்கையர்களுக்கு எதிரான மனிதக் கடத்தல் சம்பவங்கள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு நேற்று (1) வரை 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

தாய்லாந்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக பொய்யான உத்தரவாதத்தின் பேரில் இலங்கை இளைஞர்கள் பலர் லாவோஸில் சிக்கியுள்ளமை தொடர்பில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ஏற்கனவே பணியகத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ருவன் பத்திரன மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உள்ளூராட்சி வேட்பாளர் அனுர சேனாரத்ன ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த முறைப்பாடுகள் அனைத்தும் தென் மாகாணத்தில் உள்ள இளைஞர்களால் செய்யப்பட்டுள்ளன.

ஒரு சிலரைத் தவிர, எஞ்சிய இலங்கையர்கள் இன்னும் லாவோஸில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்கள் இதற்கு முன்னர் நான்கு இளம் பெண்களையும் ஒரு இளைஞனையும் முதலில் தாய்லாந்துக்கும் பின்னர் லாவோஸுக்கும் அழைத்துச் சென்றுள்ளனர். இதற்காக அவர்கள், சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து தலா 5,000 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளனர். எனினும் இந்த இளைஞர்களின் தற்போதைய நிலை தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை.

தனது தந்தைக்கு ரகசியமாக சிறுநீரக தானம் செய்து உயிரை காப்பாற்றிய 25 வயது மகள் !

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண், தனது தந்தைக்கு ரகசியமாக சிறுநீரக தானம் செய்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உண்மையை அறிந்த தந்தை உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணம், கிர்க்வுட் நகரை சேர்ந்தவர் ஜான் (60). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. அதன்பிறகு அவர் தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். குடும்பத்தினர் சிறுநீரக தானம் வழங்குவதை ஜான் விரும்பவில்லை.

பல மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு யாரோ ஒரு பெண் அவருக்கு சிறுநீரக தானம் செய்ய முன்வந்திருப்பதாக ஜானிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை அவர் ஏற்றுக் கொண்டார். கடந்த 16-ம் திகதி அவருக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

உடல்நலம் தேறிய பிறகு தனக்கு சிறுநீரகம் தானம் வழங்கிய பெண்ணை சந்திக்க அவர் விரும்பினார். இதன்படி சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் மருத்துவமனையில் ஜானை சந்தித்தார். சிறுநீரக தானம் வழங்கிய பெண்ணை பார்த்ததும் அவர் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தினார். அந்தப் பெண் அவரது ஒரே மகள் டெலாய்னி (25).

“கடவுளே, எனது மகளா எனக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கினாள்’’ என்று அவர் கண்ணீர் மல்க கூறினார். மகளை ஆரத் தழுவி உச்சி முகர்ந்து வாழ்த்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

இதுகுறித்து டெலாய்னி கூறியதாவது: எனது தந்தை அவதிப்படுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் சிறுநீரக தானம் செய்ய முன்வந்தபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கே தெரியாமல் மருத்துவர்களை அணுகி சிறுநீரக தானத்துக்கு தயாரானேன். ஒரே வீட்டில் தந்தையுடன் வசித்தாலும், நான்தான் அவருக்கு சிறுநீரக தானம் வழங்குகிறேன் என்பதை கூறவில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உண்மையை அறிந்ததும் அவரால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு டெலாய்னி கூறினார்.

ஜான் கூறும்போது, “எனது மகள் எனக்கு மறுபிறவி அளித்திருக்கிறாள். உயிருள்ளவரை அவளுக்காக வாழுவேன்’’ என்று தெரிவித்தார்.

இலங்கையின் கடன் சுமையை குறைக்க இலங்கை தயார் – சீனா

இலங்கை நிலைமையை ஆராய்ந்து அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைய வழிவகை செய்வதற்கும் சீனா தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்கை வகிப்பதற்காக தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் உறுதியளித்துள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் கடுமையான கடன் சுமையை தணிக்க தமது நாடு முக்கியத்தும் வழங்கும் என்றும் அந்த நாடுகளின் வளிர்ச்சிக்கு தீவிர பங்களிப்பை சீனா வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜி-20 கட்டமைப்பின் கீழ், கடன் நிவாரண முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்று ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

கிரேக்கத்தில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 26 பேர் பலி !

கிரேக்கத்தில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் சுமார் 100 பேர்கள் வரையில் காயமடைந்துள்ளதாகவும், பலர் உயிருக்கு போராடுவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், தடம் புரண்ட பெட்டிகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பயந்துபோன பயணிகள் அதில் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஏதென்ஸுக்கு வடக்கே சுமார் 235 மைல் தொலைவில் உள்ள டெம்பே என்ற பகுதியிலேயே  நள்ளிரவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் சரக்கு தொடருந்து மற்றும் பயணிகள் தொடருந்து என்பன மோதியதில் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறார்கள் உட்பட மொத்தம் 85 பயணிகள் காயங்களுடன் தப்பியுள்ளதாக இதுவரை வெளியான தகவலில் தெரிய வந்துள்ளது.

குறித்த விபத்தில் சுமார் 25 பேர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறுகின்றனர். பயணிகள் தொடருந்தில் 350 பயணிகளுக்கும் மேல் சம்பவத்தின் போது பயணித்துள்ளனர்.

தொடருந்துகள் இரண்டும் பலமாக மோதியுள்ளது என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், மோதலின் தீவிரம் காரணமாக முதல் இரண்டு பெட்டிகள் சிதைந்து போயுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டு தீவிர நடவடிக்கையில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இராணுவத்தினரையும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 30 நோயாளர் காவு வண்டிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள. மோசமான இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.