30

30

‘M, N’ தொடரிலக்கம். புதிய கடவுச்சீட்டை பெற புதிய விண்ணப்பங்கள் அறிமுகம்

pas.jpg‘M, மற்றும் ‘N’ என்ற தொடரிலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன் படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச் சீட்டை பெற விண்ணப்பிக்கும் வகையில் புதிய நடை முறையொன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.இதற்கென குடிவரவு, குடியகல்வு திணைக்களம் புதிய விண்ணப்பப் படிவமொன்றை அறிமுகம் செய்கிறது.

அக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய விண்ணப்பப் படிவம் நடை முறைக்கு வருகிறது என குடிவரவு குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

M மற்றும் N தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டை உடையவர்கள் இரண்டு புகைப்படங்கள், கடவுச்சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தையுடைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் மட்டும் போதுமானது. சமாதான நீதவானின் சான்று படுத்தவோ, அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திரமோ இணைத்தல் அவசியமில்லை.

முதற் தடவையாக கடவுச் சீட்டொன்றை பெறவிரும்பும் ஒருவர் முன்பு போன்று கடவுச்சீட்டுக்கான முன்னைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் அதற்குரிய சகல ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அத்துடன் சமாதான நீதவானின் சான்றுபடுத்தலும் அவசியமானது.

M மற்றும் N தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டுகளை பெற்றவர்களின் தரவுகள் ஏற்கனவே திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் மீண்டும் அதே ஆவணங்களை கேட்பதும் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவதும் நேரத்தையும் காலத்தையும் வீணாக்கும் வேலை என்பதாலேயே இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமுலுக்கு கொண்டு வரப்படுவதாக பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

தமிழின் ஆங்கில மயம்

தமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா? அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா? ஆங்கில வார்த்தைகள் கிரமமாக தமிழ்ப் பத்திரிகைகளில் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான உணர்வுகள் இப்போது அதிகரித்து வருகின்றன.

“மற்றர்” “சஸ்பென்ட்”, “கட்”, “ரெடி”, “நைட்”, “பவர்”, இச்சொற்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் (இந்தியாவில்) அதிகளவுக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வமற்ற உரையாடல்களில் காணப்படும் தமிழ்மொழியின் ஆங்கில மயமாக்கலானது உத்தியோகபூர்வ தொடர்பாடலாக உருவாகி வந்திருக்கிறது. மாநில அரசாங்கமானது பல நூறு கோடி ரூபாவை உலக செம்மொழி தமிழ் மாநாட்டுக்காக செலவழித்துள்ளது. செம்மொழித் தமிழ் குறித்து அந்த மாநாட்டில் கலந்துகொண்ட சகல பேச்சாளர்களுமே தொண்டை வரளும் அளவுக்குப் பேசினார்கள். தமிழின் மேன்மைத்தன்மையை அவர்கள் எடுத்துரைத்தனர். ஆனால், எழுத்திலோ வேறுபட்ட தன்மை காணப்படுகிறது. தமிழானது ஆங்கிலச் சொற்களுடன் இணைந்து எழுதப்படுவது தொடர்கிறது.

அத்துடன், மொழியானது ஆக்ரோஷமான விதத்தில் ஏனைய வழிகளிலும் தள்ளப்பட்டுக்கொண்டு வருகிறது. இந்த மாநாட்டுக்கு முன்னர் சென்னைக் கூட்டுத்தாபனம் அறிவுறுத்தலொன்றை விடுத்திருந்தது. சகல வர்த்தக நிறுவனங்களும் பெயர்ப்பலகையை தமிழில் எழுத வேண்டுமென்ற அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தந்திரோபாயம் தமிழ்மொழியைப் பொறுத்தவரை வெற்றிபெற்றதாக காணவில்லை. தமிழ்த் திரைப்படங்களில் ஆங்கில மொழியின் செல்வாக்குக் காணப்படுவதாக சில நிருபர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாடல்கள், உரையாடல்களில் ஆங்கில மொழி தாராளமாகப் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஆனால், வாசகர்களுடன் இதன் மூலம் சுலபமாக தொடர்புகொள்ள முடியுமென சிலர் நியாயப்படுத்துகின்றனர். தமிழ்ப் பத்திரிகையொன்றின் நிருபரொருவர் அதிரடி,சஸ்பென்ட்,ஆலோசனை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார். நாங்கள் கொள்கை வகுப்பாளர்கள் அல்லர். தூய்மையான மொழியை பயன்படுத்துவது பத்திரிகை ஆசிரியர்களின் பொறுப்பு என்று அவர் கூறுகிறார். தினம் என்பதற்குப் பதிலாக டெய்லி என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு மற்றொரு நிருபர் முன்னுரிமை கொடுக்கிறார்.அது அவரின் பத்திரிகையை குறிப்பதாக அமைகிறது. கிராமவாசிகள் கூட சஸ்பென்ட் என்ற வார்த்தையை இலகுவாக புரிந்துகொள்வார்கள் என்று அவர் கூறுகிறார். தற்காலிக பணி நீக்கம் என்ற இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது கஷ்டம் என அவர் குறிப்பிடுகிறார். ஆனால், சகலருமே பத்திரிகை ஆசிரியர்களே இந்த விடயத்தை சீரமைக்க முடியுமென்ற ஏகோபித்த அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர். கால ஓட்டத்தில் தமிழ்ச் சொற்களை புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அறிமுகம் செய்ய முடியும் என அதாவது அடிக்கடி அச்சொற்களைப் பயன்படுத்துவதால் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் மாற்றியமைக்க முடியுமென அந்த அபிப்பிராயம் காணப்படுகிறது.

தியாகராஜர் கலைக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளரான பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் கூறுகையில்;

சரியான தமிழ்ச்சொற்கள் இல்லாவிடில் இது சரியான விடயம். (ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துதல்) ஆனால், கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவது தமிழை கேலிக்கூத்தாக்கும் விடயமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜக்கிஷான் தமிழ்பேசுகிறார். (ஆங்கிலத் திரைப்படங்களின் தமிழ்வடிவம்) தமிழ் நடிகர் சூர்யா தமிழ்ப் படங்களில் ஆங்கிலம் பேசுகிறார் என்று அவர் குறிப்பிட்டதாக எக்ஸ்பிரஸ் புஷ் தெரிவித்திருக்கிறது.

 நன்றி தினக்குரல்

96 ஹஜ் முகவர்களுக்கு திணைக்களம் அங்கீகாரம்

hajj.jpgஇம்முறை ஹஜ் யாத்திரிகர்களை மக்காவுக்கு அழைத்துச் செல்ல 96 ஹஜ் முகவர்களுக்கு முஸ்லிம் மத கலாசாரத் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரஸ்தாப 96 ஹஜ் முகவர் நிறுவனங்கள் அல்லாத வேறு முகவர் நிறுவனங்களுடன் யாத்திரிகர்கள் செய்யும் தொடர்புகளுக்கு முஸ்லிம், மத கலாசாரத் திணைக்களம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என்று திணை க்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி அறிவித்துள்ளார். அரசாங்க ஹஜ் குழுவும் ஹஜ் யாத்திரிகர் களின் நலன்கள் தொடர் பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங் கியுள்ளது.

மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா தலைமையிலான இக் குழுவில் பிரதி அமைச்சர் பைஸல் முஸ்தபா, முன்னாள் உப மேயர் அஸாத் சாலி, ஆகியோர் உறுப்பினர்களாகச் சேவையாற்றுகின்றனர்.

ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து ஹஜ் முகவர்கள் 3,25,000 ரூபா கட்டணத்தை அறவிட வேண்டு மென அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

14 வயதில் தாயானமை குறித்து விசாரணை:

கொழும்பு காசல் வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். குறித்த சிறுமியும் அவரது குழந்தையும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குழந்தைபெறும் வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலொன்றினை அடுத்து சிறுவர் பாதுகாப்பு சபையின் பொலிஸ் அதிகாரிகள் சிலர் சென்று சிறுமி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெறப்பட்டதாகவும், சிறுவயதில் குழந்தை கிடைத்ததனால் குழந்தை, வைத்தியசாலையின் குழந்தைப் பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குழந்தை பெற்றெடுத்த 14 வயதுடைய சிறுமிக்கு தந்தை இல்லையெனவும், அவருடைய தாய் மனநோயாளி எனவும், சிறுமிக்கு உறவினர்கள் எவரும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. சிறுமியைப் பார்வையிட 28 வயதுடைய இளைஞர் வைத்தியசாலைக்கு வந்து போவதாகவும், சிறுமிக்கு 18 வயதானவுடன் அவரை திருமணம் செய்துகொள்வதாக குறித்த இளைஞன் அறிவித்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், 14 வயது சிறுமி குழந்தைப் பெற்றுள்ளதனால் அவரை பாதுகாக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.