29

29

காலி, களுத்துறை மாவட்ட தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம்

lightning-000.jpgபரவலாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக காலி, களுத்துறை மாவட்டங்களின் சில தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மழை மேலும் தொடருமாயின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களும் நீரில் மூழ்கக் கூடிய வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது. நாடெங்கிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரமழை வீழ்ச்சி பதிவில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சி மன்னாரில் 70.5 மி.மீட்டர்களாகப் பதிவாகியுள்ளது என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றுக் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையுமான காலப்பகுதியில் காலி மாவட்டத்திலேயே அதிக மழை வீழ்ச்சியாக 50.7 மி.மீ. மழை பெய்துள்ளது எனவும் அவர் கூறினார்.

அடை மழை காரணமாக காலி மாவட்டத்தின் பலப்பிட்டி, எல்பிட்டி, கரந்தெனியா போன்ற பிரதேசங்களின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் உள்வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் காலி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் அசித ரணசிங்க கூறினார். எல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் திடீர் மண்சரிவு காரணமாக இரு வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளரான ஜயசிங்க ஆராய்ச்சி மேலும் கூறுகையில், தற்போதைய மழைக் காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்க முடியும். இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் இடி, மின்னலுடன் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்ய முடியும். இச்சமயம் கடும் காற்றும் வீசலாம். அதனால் இடி, மின்னல் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இதேவேளை இடைப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி அடுத்த வாரத்திற்குள் ஆரம்பமாகலாமென எதிர்பார்க்கின்றோம் என்றார்.

சட்டவிரோத ஆட்கடத்தலைத் தடுக்கும் இலங்கையின் நடவடிக்கைக்கு கனடா ஆதரவு

‘ஓஸன் லேடி’, ‘சன் சீ’ ஆகிய கப்பல்கள் மூலம் சட்ட விரோதமாக கனடாவுக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு உதவும் நோக்கில் கனேடிய அரசு நியமித்துள்ள விசேட பிரதிநிதி விரைவில் கொழும்புக்கு வரவுள்ளார். சட்ட விரோத ஆட்கடத்தலை தடுப்பதற்கு இலங்கையும், கனடாவும் இணைந்து செயற்படுவதென இரு நாடுகளினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (25) நியூயோர்க்கில் சந்தித்து பேசியபோதே இவர்கள் இணக்கம் கண்டிருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அங்கு கனடா, ஸ்பெயின் மற்றும் கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லோரன்ஸ் கனோன், ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மிகெல் ஏஞ்சல் மொராட்டினஸ் கியூயோடே மற்றும் கொரிய குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சின் கன் யூ ஆகியோரை கடந்த சனிக்கிழமை (25) நியூயோர்க்கில் வைத்து அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.

கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர் மீந்துள்ள விடுதலை புலிகளின் செயற்பாடுகள் கனடா உள்ளிட்ட வேறு நாடுகளில் இடம் பெறுவதாக அமைச்சர் பீரிஸ் கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சரிடம் விபரித்தார்.

அதேவேளை கனடாவில் விடுதலைப் புலிகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கனடா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி கனேடிய அமைச்சர் இலங்கை அமைச்சர் பீரிஸிடம் விளக்கினார். விடுதலைப் புலிகள் இயக்கம் கனடாவில் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதையும் கனேடிய அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.

ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மிகேன் ஏஞ்சல் மெரராடி கியூயோடேயுடனான பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பாராட்டினார். உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கையும் ஸ்பெயினும் பங்களிப்பு வழங்குவது பற்றியும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடனான சந்திப்பின் போது கொரிய குடியரசு பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவு தொடர்பாக அமைச்சர் பீரிஸ் கொரிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இலங்கையின் மனித வளத்தை கொரியாவுக்கு பெற்றுக் கொள்வதை எதிர்காலத்தில் அதிகரித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதையிட்டும் அமைச்சர் பீரிஸ் பராட்டினார்.

405 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 20 வேலைத் திட்டங்களை கொரிய அரசாங்கம் தற்போது இலங்கையில் செயற்படுத்தி வருகிறது. அத்துடன் கொரிய வேலை வாய்ப்புகளில் இலங்கைக்காக வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில் 44 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தந்தை தாக்கி 7 வயது மகள் பலி கம்பளையில் கோரச் சம்பவம்

கம்பளை வட்டதெனிய கோனதிகவத்தை ஓம்பரதீகவத்தைப் பகுதியில் நேற்றுக் காலை ஏழு வயதுடைய சிறுமி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையை குறித்த சிறுமியின் தந்தையே புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதமொன்றினால் தாக்கி இந்தக் கொலை புரியப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தில் மற்றுமொரு சிறுமியும் சிறுவனும் உள்ளனர். எனினும், இவர்களின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் தந்தை தினமும் சிறுமி மீது தாக்குதல் மேற்கொள்வாரென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கடுகன்னாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டிலுள்ள 20 பிரதான வைத்தியசாலைகளில் வியாழன் தாதிமார் சுகவீன விடுமுறை போராட்டம்

பதினொரு கோரிக்கைகளை முன்வைத்து நாட்டிலுள்ள 20 பிரதான வைத்தியசாலைகளில் கடமைபுரியும் தாதியர்கள் நாளை வியாழக்கிழமை ஒரு நாள் சுகவீன லீவுப் போராட்டத்தை நடத்த விருக்கின்றனர். தமது பதினொரு கோரிக்கைகள் தொடர்பில் மூன்று வருடங்களாக அரசாங்கம் ஏமாற்றிவந்ததன் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அகில இலங்கை தாதிமார் சங்கத் தலைவர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்தார்.

தாதி தொழில் 12 வருட சேவைக்குப்பின்னர் முதலாம் தரத்துக்கு பதவி உயர்வை வழங்குதல், 6/2006 ஆவது சுற்று நிருபத்தின் மூலம் தாதிச்சேவை சம்பள முரண்பாட்டை நீக்குதல், தாதியர் சபையொன்றை அமைத்தல், தாதியர் சேவை யாப்பைத் திருத்துதல், விபத்துக்கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தல், தாதியர் பயிற்சிப்பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை அகற்றல் உட்பட 11 கோரிக்கைகளை மூன்று வருடங்களுக்கு முன்னர் முன்வைத்தபோதும் இன்றுவரையில் அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அகில இலங்கை தாதியர் சங்கத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி நாடுமுழுவதும் தாதியர்கள் கறுப்புப்பட்டி அணிந்து தொழிற்சங்க நடவடிக்கையிலீடுபட்டபோதுஅரசாங்கம் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தது.ஆனால் அந்த உறுதிமொழியை அரசு காற்றில் பறக்கவிட்டபின்னர் மீண்டும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வுத்திட்டம் சமர்ப்பிப்பதாக அறிவித்தது. 27 ஆம் திகதியாகியும் கூட அரசு மௌனம்சாதித்து வருகின்றது. அரசு கொடுத்த காலக்கெடுவான 30 ஆம் திகதியன்று நாம் ஒருநாள் சுகவீன லீவுப்போராட்டத்தில் இறங்க முடிவு செய்திருக்கின்றோம்.

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு 56 ஆயிரம் தாதியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் இருப்பது 21 ஆயிரம் தாதியர்களே. இவர்களில் 70 சதவீதமான தாதியர்கள் வியாழக்கிழமை சுகவீன லீவுப்போராட்டத்தை நடத்துவர். இதன் காரணமாக மக்களுக்கு எற்படும் அசௌகரியங்களையிட்டு நாம் கவலையடைகின்றோம். எமது உரிமைகளை வென்றெடுக்க அரசுக்குக் கொடுத்த கால அவகாசம் போதுமென்றே நாம் நினைக்கின்றோம். மக்கள் பாதிக்கப்படுவார்களானால் அதற்கான பொறுப்பை அரசே ஏற்கவேண்டும். 30 ஆம் திகதி போராட்டத்துக்கு அரசு உரிய முறையில் செவிசாய்க்கத்தவறினால் அரசுக்கு குறுகிய கால காலக்கெடுவை விதித்து நாடுதழுவிய தொடர் போராட்டத்தை முன்னெடுக்கத் தயங்கப்போவதில்லை.

எமது போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்ய அரச சார்பு தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுப்புக்குத் தயாரானால் அந்தச் சவாலைமுறியடிக்கவும் நாம் திட்டம் வகுத்திருக்கின்றோம். கடந்த காலத்தில் அரசசார்பு தாதியர் சங்கமும் அரச மருத்துவத்துறைத் தொழிற்சங்கமும் பல காட்டிக்கொடுப்புகளைச் செய்தனர்.
இதன் மூலம் அவர்கள் நாட்டு மக்களுக்கு துரோகமிழைத்துள்ளனர் எனவும் மெதிவத்த தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிஉறுப்பினர்களுக்கென தொழில் வாய்ப்பு சந்தையொன்று நாளை புதன்கிழமையும் நாளை மறுதினமும் வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. புனர்வாழ்வளிப்பையும் தொழிற் பயிற்சியையும் நிறைவு செய்தவர்களுக்கே இந்த தொழில் வாய்ப்புச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். ஆடைத்தொழிற்துறை மற்றும் நிர்மாணத்துறை போன்ற பல்வேறு துறைகளையும் சேர்ந்த 25 தனியார் துறை நிறுவனங்கள் இந்த தொழில் வாய்ப்பு சந்தையில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தத்தின் இறுதி காலகட்டத்தில் படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 11,800 விடுதலைப்புலி உறுப்பினர்களை அரசாங்கம் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென தெரிவு செய்து உட்படுத்தியது. விசேட புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 4 ஆயிரம் முன்னாள் போராளிகளை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. வாழ்வாதாரத்துக்கான வருமானத்தை பெற தயார்ப்படுத்திக் கொள்ள இவர்களுக்கு 12 புனர்வாழ்வு நிலையங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த தொழில்வாய்ப்பு சந்தைக்கு சமாந்தரமாக நடைபெறும் வைபவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் 418 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்படவிருப்பதாக பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரம் முன்னாள் போராளிகளை அடுத்த மாதம் விடுதலை செய்ய அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.