13

13

அதிவிசேட சித்தி பெற்றவர்களில் 50 வீதமானோர் ஆங்கிலத்தில் பேச முடியாதவர்களாகவே உள்ளனர்

கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் ஆங்கிலப் பாடத்தில் அதிவிசேட சித்திபெறும் மாணவர்களில் ஐம்பது சதவீதத்திற்கு அதிகமானோர் ஆங்கில மொழியில் பேசமுடியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.

இதன் காரணமாக அவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் போட்டிபோட்டு வேலைவாய்ப்புப் பெறும் சந்தர்ப்பத்தை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகின்றனர் என்று திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. விஜயானந்தமூர்த்தி கவலை தெரிவித்தார்.

மாணவரிடையே ஆங்கிலமொழியில் பேசும் திறனை வளர்க்கும் செயற்றிட்டத்தின் கீழ் ஆங்கில மொழியைப் போதிக்கும் சிரேஷ்ட ஆசிரியர்களுக்கான பத்து நாள் விசேட பயிற்சிக்கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசும்போதே வலயக் கல்விப் பணிப்பாளர் இக்கருத்தை வெளியிட்டார்.

தேர்தலை எதிர்கொள்ள 120 நாள் பிரசாரத் திட்டத்தை ஐ.தே.க. முன்னெடுக்கும்

election_ballot_.jpgஅர சாங்கம் எந்நேரத்தில் எத்தேர்தலை நடத்துமெனத் தெரியாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு 120 நாள் பிரசார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

சுமுகமான சூழ்நிலையில்லாத நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைத் தேர்தல் சுதந்திரமாக இடம்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம் எழுதவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

ஐக்கிய தேசியக் கட்சி நடைபெறவுள்ள ஊவா மாகாணசபை மற்றும் வடக்கு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விசேடமாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அபேட்சகர் தெரிவு இடம்பெறுகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சுமுகமான சூழ்நிலையில்லையென எமக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன. எனவே, நாம் போட்டியிடுவதற்கும் எமது பிரசார வேலைகளை முன்னெடுப்பதற்கும் இடமளிக்குமாறு நாம் கேட்கின்றோம்.

இன்று வடக்கு பகுதிக்குச் செல்ல முடியாத நிலையேற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமானது. இதனை செய்வதற்கான பொறுப்பு தேர்தல் ஆணையாளருக்குரியதாகும்.

எனவே,  வடக்கில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதவுள்ளோம். இதேவேளை அரசாங்கம் எந்நேரத்தில் எத்தேர்தலை நடத்துமெனத் தெரியாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி எத்தேர்தலையும் சந்திக்கத் தயாராகவுள்ளது.

இந்நிலையில், பொதுத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதனை எதிர்கொள்வதற்கான தீர்மானங்களை எமது செயற்குழுவினர் எடுத்துள்ளனர். இதன் ஓர் அங்கமாக கிராமிய மட்டம் முதல் அனைத்து மட்டங்களிலும் பிரசார வேலைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

நாட்டில் 10 ஆயிரம் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும் ஒரு பிரதிநிதி என்ற விகிதத்திலும் தெரிவு செய்து இந்தப் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளோம். இந்த வேலைத் திட்டத்தை 120 நாட்களில் முடிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம். இத்திட்டத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

இலங்கையில் யுத்தப் பிரதேசத்தில் பணிபுரிந்திருந்த மருத்துவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்

இலங் கையில் வடபகுதிப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்பு வலயத்தில் கடமையாற்றிய டாக்டர் சத்தியமூர்த்தி உட்பட நான்கு பேர் நேற்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆஜர் செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் அமலில் இருக்கும் அவசரகால சட்டத்தின் அடிப்படையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் டாக்டர் சத்திய மூர்த்தி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் தடுப்புக் காவலுக்கு அனுப்பப்பட்டார். டாக்டர் சத்திய மூர்த்தியும், அவரது சக சுகாதார அதிகாரிகளும் போர் குறித்த தவறான தகவல்களை வெளிநாட்டு ஊடகங்களுக்கு வழங்கினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சத்தியமூர்த்தியுடன், விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டர், விடுதலைப் புலிகளின் டாக்டரான கந்தசாமி துரை கேதீஸ், அவர்களது தாதியான ஆறுமுகம் ஜெயலக்ஷ்மி ஆகியோரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

ஜோர்ஜ் மாஸ்டர் நேற்று 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம் ரயில் நிலையமும் விரைவில் புனரமைக்கப்படும்

yaal-devi.jpgயாழ்ப் பாணம் ரயில் நிலையம் புனரமைக்கப்படவுள்ளது. இப்பகுதியில் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுவதால் அவற்றை முற்றாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, யாழ்.ரயில் நிலையத்துக்கு அருகில் சேதமான விடுதிகள், அலுவலகங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபன தாங்கிகள் என்பனவும் புனரமைக்கப்படவுள்ளன.

இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் இந்தியா தலையிடாது – மேனனின் கருத்துக்கு ஜ.தே.கூ வரவேற்பு

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா தலையிடாது எனும் சிவசங்கர் மேனன் அவர்களின் கருத்தை ஜனநாயக தேசியக் கூட்டணி பெரிதும் வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.

இது சம்பந்தமாக அவர் தெரிவித்துள்ளதாவது, இலங்கை தனியான இறைமை கொண்டுள்ள ஒரு நாடு என்ற வகையில் இலங்கை மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளின் தலையீடின்றி தீர்வுத்திட்டமொன்றை நோக்கிச் செல்வதே சிறந்ததாகும். இந்த யதார்த்தத்தை இந்தியா புரிந்து கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

உண்மையில் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தலையிட முடியும் என்பதை ஏற்றுக்கொண்டால் இந்திய முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தலையிடுவதும் நியாயம் என ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையை இந்நாட்டு மக்களே தீர்த்து சகலரும் நிம்மதியாக வாழும் சூழலை இலங்கையர்கள் உருவாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் யதார்த்தத்தை புரிந்து கொண்ட கருத்தாக இருக்க முடியும்.

இன நல்லுறவுடன் வன்னி முகாம்களில் உள்ள மாணவர்களுக்கான கல்வித் திட்டம் : த ஜெயபாலன்

mr-wais.jpgவன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தேசம்நெற் முன்னெடுத்த முயற்சிக்கு இலங்கை மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் சங்கம் உதவ முன் வந்துள்ளது. இருபத்து எட்டு லட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் முகாம்களில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் 5 பயிற்சி நூல்கள் மற்றும் வழிகாட்டி நூல்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக 2009 ஏப்ரல் 01ஆம் திகதி இடம்பெயர்ந்த தரம் 05இல் கல்விபயிலும் 1057 மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் இணைந்து மாதிரிவினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது.

2009.06.01ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் உள்ள இடம் பெயர்ந்த தரம் 5 மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆக உயர்ந்துள்ளது.

எனவே, வவுனியா நலன்புரி நிலையங்களில் செயற்படும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக வேண்டி அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின்படி மேலதிகமான 3815 மாணவர்களுக்கும் மேற்படி உதவியினை வழங்க தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் முடிவெடுத்தது. அத்துடன், இந்த வேலைத்திட்டத்தில் சில அமைப்புகளையும் இணைத்துக் கொள்ள முடிவெடுத்தது.

ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் 2, 777,040 ரூபாவாகும். இச்செலவில் முன்றிலொரு பங்கினை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இரண்டாம் கட்டமாக 3815 மாணவர்களுக்கு வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை நாணயப்படி 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று சிந்தனைவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளர் ஜனாப் ஏ.எம். வைஸ் அவர்கள் சிந்தனைவட்ட பணிப்பாளர் கலாபூசணம் புன்னியாமீன் அவர்களிடம் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியாக காசோலையை கையளித்தார்.

மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளரும் சட்டத்தரணியும், தேசிய சேமிப்பு வங்கியின் மாவட்ட சட்ட அதிகாரியும், சத்திய பிரமாண ஆணையாளரும், சமாதான நீதவானும், மத்திய இலங்கை தகவல் பேரவையின் தலைவரும், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பினதும், ஸ்ரீலங்கா மீடியா போரத்தினதும் கண்டி மாவட்ட இணைப்பாளருமான சட்டத்தரணி ஏ.எம். வைஸ் அவர்கள் “தேசம்நெற்”க்கு வழங்கிய விசேட நேர்காணல் எதிர்வரும் தினங்களில் இடம்பெறும்.