இலங் கையில் வடபகுதிப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்பு வலயத்தில் கடமையாற்றிய டாக்டர் சத்தியமூர்த்தி உட்பட நான்கு பேர் நேற்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆஜர் செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் அமலில் இருக்கும் அவசரகால சட்டத்தின் அடிப்படையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் டாக்டர் சத்திய மூர்த்தி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் தடுப்புக் காவலுக்கு அனுப்பப்பட்டார். டாக்டர் சத்திய மூர்த்தியும், அவரது சக சுகாதார அதிகாரிகளும் போர் குறித்த தவறான தகவல்களை வெளிநாட்டு ஊடகங்களுக்கு வழங்கினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சத்தியமூர்த்தியுடன், விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டர், விடுதலைப் புலிகளின் டாக்டரான கந்தசாமி துரை கேதீஸ், அவர்களது தாதியான ஆறுமுகம் ஜெயலக்ஷ்மி ஆகியோரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
ஜோர்ஜ் மாஸ்டர் நேற்று 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.