கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் ஆங்கிலப் பாடத்தில் அதிவிசேட சித்திபெறும் மாணவர்களில் ஐம்பது சதவீதத்திற்கு அதிகமானோர் ஆங்கில மொழியில் பேசமுடியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.
இதன் காரணமாக அவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் போட்டிபோட்டு வேலைவாய்ப்புப் பெறும் சந்தர்ப்பத்தை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகின்றனர் என்று திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. விஜயானந்தமூர்த்தி கவலை தெரிவித்தார்.
மாணவரிடையே ஆங்கிலமொழியில் பேசும் திறனை வளர்க்கும் செயற்றிட்டத்தின் கீழ் ஆங்கில மொழியைப் போதிக்கும் சிரேஷ்ட ஆசிரியர்களுக்கான பத்து நாள் விசேட பயிற்சிக்கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசும்போதே வலயக் கல்விப் பணிப்பாளர் இக்கருத்தை வெளியிட்டார்.