12

12

வட இலங்கை முகாம்களில் மக்கள் நீண்ட நாட்கள் தங்க நேரிடலாம் என்று ஐ. நா அதிகாரி கவலை

இலங் கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில் இடம் பெயர்ந்த பொதுமக்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இடைத்தங்கல் முகாம்களில் நீண்ட நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடும் என்று தாங்கள் கவலைப்படுவதாக, இலங்கையின் பணிபுரியும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் இருக்கக்கூடிய இடம்பெயர்ந்த பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அரசு குறிப்பிட்டிருக்கும் ஆறு மாத காலத்துக்குளேயோ அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள்ளோ தமது சொந்த இடங்களுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு இருப்பதாக இலங்கை இராணுவம் எதிர்பார்க்கவில்லை என்று இலங்கையில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியான மார்க் கட்ஸ் தெரிவிக்கிறார்.

இந்த இடம்பெயர்ந்த நிலையிலிருக்கும் மக்கள் ஆறு மாதங்களுக்குள்ளோ அல்லது இந்த ஆண்டின் முடிவுக்குள்ளோ இந்த மக்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்வார்கள் என்று அரசு தங்களுக்கு உறுதியளித்துள்ள போதிலும், தமக்கு இது தொடர்பில் மாறுபட்ட சமிக்னைகளே கிடைக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.

தற்போது அங்கிருக்கும் கூடாரங்களை நிரந்தர கட்டிடங்களாக மாற்றியமைக்கும்படி அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் தம்மிடம் தெரிவிக்கிறார்கள் என்றும், மூத்த இராணுவ அதிகாரிகளும்கூட, அடுத்த ஆறு மாதங்களில் பெருமளவிலான மக்கள் தமது இடங்களுக்கு திரும்புவார்கள் என்று தமக்கு தோன்றவில்லை என்று கூறுவதாகவும் ஐக்கிய நாடுகளின் அதிகாரியான மார்க் கட்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

இரானின் அதிபர் தேர்தல் விறுவிறுப்படைகின்றது

rab-sanjani.jpgஇரானில் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில், அங்கு நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான இறுதிக் கூட்டங்களில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னாள் அதிபர்களில் ஒருவரும், சக்தி மிக்க மதகுருவுமான, அக்பர் ஹஷெமி ரப்சஞ்ஞானி, முன்னெப்போதும் இல்லாத வகையில் தலையிட்டு, அதிபர் மஃமுட் அஹ்மதிநெஜாத் அவர்கள் பொய் சொல்வதாக குற்றஞ்சாட்டி, அவரைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை, அதியுயர் மதத்தலைவர் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அஃமதிநெஜாத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் சமூக அமைதியீனத்துக்கு வழி செய்யும் என்று ரவ்சஞ்ஞானி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது பங்குக்கு, அதிபர் அஃமதிநெஜாத் அவர்கள், தனது போட்டி மறுசீரமைப்புவாத வேட்பாளரான, மிர் குசைன் மொசாவி, வாக்குகளை பெறுவதற்காக இரானிய பொருளாதாரம் பிரச்சினையில் இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இடம்பெயர்ந்தோர் சுகாதார நலன்: உலக வங்கி 12 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தோரின் சுகாதார வசதிகளை மேம்படுத்த உலக வங்கி 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாகவும், இது தொடர்பான கூட்டம் நேற்று திருமலையிலுள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றதாகவும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன் தெரி வித்தார்.

கிட்டத்தட்ட 220 மில்லியன் ரூபா நிதியை வழமையாக வழங்கி வரும் சுகாதார அபிவிருத்தித் திட்டத்திற்கு மேலதிகமாக வழங்க முன்வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இன்றைய நிதி வழங்கல் சம்பந்தமான விசேட கூட்டத்தில் வடக்கு, கிழ க்கு பிரதம செயலாளர்கள், கிழக்கு சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதி திட்டமிடல் செயலாளர்கள், மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள், நிதி ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர், ஆலோசகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வடகொரியாவுக்கு எதிராக ஐ நா தீர்மானம்?

misyl.jpgவட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்கு பதில் தரும் முகமாக அந்த நாட்டிற்கு எதிரான தடைகளை விரிவாக்கும் வரைவு தீர்மானத்துக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து நாடுகளும் ஒத்துக் கொண்டுள்ளதாக ஐ நாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ நா பாதுகாப்பு சபையில், சுழற்சி முறையில் பதவி வகிக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்துள்ள வரைவு தீர்மானம் ஐ நா பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அவையில் விவாதிக்கப்படும் என்று ராஜ தந்திரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

சல்வாருடன் பிரவேசித்த தங்கேஸ்வரி எம்.பி. சபையிலிருந்து வெளியேற்றம்

‘சல்வார்’ உடையணிந்து சபைக்குள் பிரவேசித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிர்காமநாதன் படைக்கள சேவிதரால் வெளியேற்றப்பட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று முதலீட்டுச் சபை திருத்தச் சட்டமூலம் மற்றும் வாழ்க்கை தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவகம் சட்ட மூலம் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவ்வேளையில் வெளிர் மஞ்சள் நிற சல்வார் உடையணிந்தபடி தங்கேஸ்வரி எம். பி. சபைக்குள் வந்தார்.

அப்போது சபையிலிருந்த உதவி படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ, ‘பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணாக உடையணிந்து வந்துள்ளீர்களே, இந்த உடையுடன் சபையில் அமர முடியாது’ என்று தெரியப்படுத்தினார். இதனையடுத்து தங்கேஸ்வரி எம். பி. சபையிலிருந்து வெளியேறிச் சென்றார்.

ஈழத்தமிழர் மறு வாழ்வுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் – திமுக கோரிக்கை

karunanithi.jpg ஈழத் தமிழர் மறு வாழ்வுக்கு மத்திய அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை இரு தலைவர்களையும் நேரில் சந்தித்த திமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

கருணாநிதி நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப்பிறகு டெல்லி சென்ற போது பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து இலங்கையில் ராணுவ தாக்குதலால் வீடிழந்தும் உடைமைகளை இழந்தும் தவிக்கும் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் மறுவாழ்வுக்காகவும் மத்திய அரசு குறைந்தது 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காஷ்மீரில் துணைப்படையினருக்கு பதிலாக பொலிஸாரை மாற்றீடு செய்யுமாறு அமைச்சர் சிதம்பரம் உத்தரவு

காஷ்மீரில் இரு இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்டதற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களை அடுத்து, அங்கு பாதுகாப்பு மறு பரிசீலனை ஒன்றைச் செய்வதற்காக இந்திய உட்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இராணுவ, பொலிஸ் மற்றும் துணைப்படை உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்களை அடுத்து, காஷ்மீரில் உள்ள துணைப்படையினர் படிப்படியாக பொலிஸாரினால், மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்று சிதம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த இந்த கொலைகளுக்கு துணைப்படையினரே பொறுப்பு என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். படையினர் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்கள். ஆனால், அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தடயவியல் சோதனைகள் கூறுகின்றன.

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம் World Day Against Child Labour – புன்னியாமீன்

world-day-against-child-labour.jpgசிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம் World Day Against Child Labour  ஆண்டுதோறும் ஜுன் மாதம் 12ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. அதாவது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இது விடயமாக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், காப்பீடுகள், சிறுவர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்துவதும் இத்தகைய விழிப்புணர்வுகளின் ஊடாக சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும் இத்தினத்தின் அடிப்படை நோக்கமாகும்.

பொதுப்படையாக நோக்குமிடத்து எத்தனை சட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் எத்தகைய விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது நேரடியாகவோ,  மறைமுகமாகவோ நாளுக்குநாள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வறுமை, பஞ்சம் போன்ற நிலைமைகள் இத்தகைய காரணியை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன. 2008ஆம் ஆண்டு உலகத் தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில்; உலகில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர் பணியாளர்களாகச் சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் 165மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பணியாளர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1956 ஆம் ஆண்டின் சிறுவர் பணியாளர்களின் சட்டப்படி 14 வயதுக்குட்பட்டவர்கள் பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றமை பாரிய குற்றமாகும். இந்த வயதெல்லை நாட்டுக்கு நாடு வேறுபடலாம். உலக சனத்தொகையில் கணிசமான தொகையினர் சிறுவராவர். இலங்கை சனத்தொகைப் புள்ளிவிபரங்களின்படி 1995இல் 27.7 சதவீதம் சிறுவராவர். சிறுவர் என்பது இலங்கை சிறுவர் சாசனப்படி 18 வயதுக்கக் கீழ்ப்பட்டவராவர். 1939இன் சிறுவர், இளைஞர் கட்டளைச்சட்டம் சிறுவர் 14 வயதுக்குக் கீழ்ப்பட்டவர் என்றும்,  இளைஞர் 14 – 16 என்றும் வரையறுத்துள்ளது. 1989இன் வயது வந்தவர் திருத்த சட்டத்தின்படி சிறுவர் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவராவர். எவ்வாறாயினும் தேசியச் சட்டங்கள் பராயமடையும் வயதை முன் தள்ளி வைத்தாலன்றி மற்றபடி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் யாவரும் சிறுவர் ஆவார்கள். 

எந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் பெறுமதிமிக்க சொத்தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல் பாட்டாளர்கள். சிறுவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நமது பெரியவர்கள் சிலர் அறிவதில்லை. இத்தகைய காரணத்தினாலேயே சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் பணி எமது சமூகங்களில் தொடர்கின்றன. சிறுவர் துஸ்பிரயோகத்தில் சிறுவர் உழைப்பு ஒரு பகுதி என்றால் சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும் சிறார்கள் என்பனவும்  மூன்றாம் உலக நாடுகளின் சிறுவர் உழைப்புடன் இணைந்த வகையில் தனித்துவமான பிரச்சினைகளாக மாறியுள்ளன எனலாம். இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சினைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல. இன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற்றும் நிலையில் உலக நாடுகள் உள்ளன. இதற்காகவே அனைத்து நாடுகள் மட்டத்திலும் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய ஆய்வு பொதுமைப்படுத்தப்பட்டதாக உள்ளன.

யூனிசெப் மதிப்பீட்டின்படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்; வாழ்கிறார்கள். சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப்பதில்லை. 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச் சத்தின்றி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.

சிறுவர் உரிமையில் சில  அம்சங்களை கீழ்வருமாறு  சுருக்கி நோக்கலாம். இங்கு வாழும் உரிமை என்பது இயற்கையாக அமைந்துள்ள உரிமையாகும். சாத்தியமான உச்சமட்டத்தில் குழந்தைகள் உயிர் வாழ்வதையும் வளர்ச்சியடைவதையும் ஒவ்வொரு அரசும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல ஒவ்வொரு குழந்தையும் தனது முழு ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பினை அளிப்பதும், கல்வி பெறுதல், ஓய்வாக சாவகாசமாக இருத்தல், கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கான உரிமையை வழங்க வேண்டிய நிலையில் உள்ளது.

உள ரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற சிறுவர், அகதிகள், அனாதைச் சிறுவர், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சிறுவர், சிறுவர் தொழிலாளர், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுவர் போன்றோருக்கு பாதுகாப்பு அவசியமாகும். சிறுவர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுப்பதும் இதன் நோக்கம். கருத்து வெளிப்பாடு, தகவல், சிந்தனை, மனசாட்சி, சமயம் என்பவற்றுக்கான சிறுவர்களுக்குள்ள உரிமை. மேலும் சமூகத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்கும் உரிமை போன்றவற்றையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் அரசு உள்ளது. 1989 நவம்பர் 20 – இல் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமை குறித்த ஐ.நா. சபைப் பிரகடனத்தின்படி பார்த்தால் இந்த உரிமைகளை மீறுவது சிறுவர் துஷ்பிரயோகம் எனக் கொள்ளலாம்.

2007 இல் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியமும் (Inter-Parliamentary Union) யுனிசெப் (UNICEF) அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள “சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல்” (Eliminating Violence against Children) என்ற கைநூலில் சிறுவர்கள் வன்முறைக்குள்ளாகுவது தொடர்பான புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளிஉலகிற்குத் தெரியவருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,

2004 இல் 218 மில்லியன் பிள்ளைகள் பிள்ளைத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 126 மில்லியன் பிள்ளைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
2000 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5.7 மில்லியன் பிள்ளைகள் பலாத்கார அல்லது அடிமை முறையில் வேலைசெய்கின்றனர்; 1.8 மில்லியன் பிள்ளைகள் பாலியற் தொழிலில் அல்லது பாலியற் திரைப்படத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்; 1.2 மில்லியன் பிள்ளைகள் கடத்தப்படுகின்றனர்.

2002 இல் 53,000 பிள்ளைகள் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் 22,000 பிள்ளைகள் (கிட்டத்தட்ட 42%) 15 முதல் 17 வயதினர்; சுமார் 75% ஆனோர் ஆண்கள்
80 முதல் 98 சதவீதப் பிள்ளைகள் அவர்களது வீட்டில் உடல் ரீதியாகத் தண்டிக்கப்படுகின்றனர்.

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகளில் பிள்ளைகள் பிரம்பு, இடுப்புப்பட்டி போன்றவற்றால் அடித்துத் தண்டிக்கப்படுகின்றனர்.
குறைந்தது 30 நாடுகளில் பிள்ளைகளுக்குச் சவுக்கடி அல்லது பிரம்படி சட்ட ரீதியான தண்டனையாக உள்ளது.

 உலகப் பிள்ளைகளில் 2.4 சதவீதமானோர் மட்டுமே உடல் ரீதியான தண்டனைகளிலிருந்து சட்ட ரீதியான பாதுகாப்புப் பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் 133 முதல் 275 மில்லியன் பிள்ளைகள் தம் பெற்றோருக்கிடையேயான வன்முறையை நேரில் காண்கின்றனர்.
வளர்ந்துவரும் நாடுகளில் 20 முதல் 65 சதவீதப் பிள்ளைகள் (ஆய்வுக்கு) முந்தைய 30 நாட்களில் உடல் ரீதியாகவோ சொல் ரீதியாகவோ தாக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாடசாலை மாணவரில் 35 சதவீதமானோர் ஆய்வின் முன்னரான இருமாதத்தினுள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் 15 முதல் 64 சதவீதமாக மாறுபடுகிறது.

2002 இல் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண்பிள்ளைகளும் 73 மில்லியன் ஆண் பிள்ளைகளும் பலாத்காரப் பாலுறவு அல்லது வேறு பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களில் குறைந்தது 7 சதவீதமான (36 சதவீதம் வரை) பெண்களும் 3 சதவீதம் ஆண்களும் (29 சதவீதம் வரை) தாம் பிள்ளைப் பருவத்தில் பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பதிவுசெய்துள்ளனர்.

15 வயதின் முன் முதற் பாலுறவில் ஈடுபட்ட பெண்களில் 11 முதல் 45 வீதத்தினர் பலாத்காரப்படுத்தப்பட்டதைப் பதிவுசெய்துள்ளனர்.
இப்போதுள்ள பிள்ளைகளில் குறைந்தது 82 மில்லியன் பெண்கள் 10 முதல் 17 வயதிலும் மேலும் பலர் அதைவிடக் குறைந்த வயதிலும் திருமணம் செய்யப்படுவர். [unicef.org]

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் பாரிய சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இலங்கையின் வட பகுதியில் 2009ஆம் ஆண்டு முதலரைப் பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மட்டும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் இருப்பதாக இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். இவர்களில் ஆயிரத்து 34 சிறுவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் எனவும் அவர் கூறியிருந்தார். கடந்த முப்பதாண்டுகளாக இலங்கையில் ஏற்பட்டிருந்த யுத்தநிலை காரணத்தினால் இலட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது பொதுப்படையான விடயம்.

மறுபுறமாக விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவற்றின் துரித அபிவிருத்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் காணப்படுகின்ற அதேவேளை இத்தகைய பாரிய கண்டுபிடுப்புக்களின் அதிகளவான பாவனை அபாயங்களைத் தோற்றுவிக்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. அதுபோலவே இரசாயன போதைப் பொருட்களின் துஸ்பிரயோகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் இடம்பெறுகின்ற இரணுவ முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசியல் சமூகப் பிரச்சினைகள் என்பன நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுவர்களையே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான சிறுவர்கள் போரின் விளைவுகளால் உடல் உள உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைக் பொறுத்தவரையில் அதிகளவில் மதுபானம், சிகரெட் மற்றும் போதைபொருள் பாவனை என்பவற்றிற்கு அடிமையாவதுடன் அதிகமானோர் HIV / AIDS போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுடன் வறுமை என்பது சிறுவர்களைப் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.

இன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்களை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் UNICEF போன்ற சர்வதேச முகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக்கொண்டுவரப்படாதவையாகவே காணப்படுகின்றன.

‘குழந்தைத் தொழிலாளர் அவலம்’ குறித்துப் பேசப்பட்டு, அறியப்பட்டு அதை எதிர்த்துச் சட்டமும் இயற்றப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. ‘குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அதிக அளவில் சட்டமியற்றிய நாடு இந்தியா என்று கூறப்படுகின்றது. ஆனால், அண்மைக்காலத்து ஆய்வின் பிரகாரம் இந்தியாவில் சிறுவர் தொழிலாளர்கள் மில்லியக் கணக்கில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள்.

1986 இல் இந்திய அரசாங்கம் 14 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் வேலை செய்வதைத் தடை செய்தது. 1997 இல்  ‘abolision act’ என்ற பெயரில் சட்டமியற்றியது. தீப்பெட்டித் தொழிற்சாலை, நூற்பாலைகள், செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள், கண்ணாடி மற்றும் செம்புத் தயாரிப்பு, தரைவிரிப்பு பின்னும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை அதிகம் ஊக்குவிக்கப்படுவதாகவும் இச்சட்டம் கண்டனம் தெரிவித்துள்ள. இச்சட்டம் குறிப்பிடாத மற்றொரு தொழில் ‘விவசாயம்’. அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவது விவசாயத்தில்தான் என்பது இத்துறையை அறிந்த அனைவருக்கும் தெரியும். சட்டங்கள் ஏன் நடைமுறையில் செயல்படுவதில்லை

எடுத்துக்காட்டாய், ஒரு ‘குழந்தைத் தொழிலாளி’ பற்றிய புகாரை  சமர்ப்பித்தால், அந்தத் தொழிலாளி 14 வயதுக்குட்பட்டவர் தானா எனப் பரிசோதித்துச் சான்றிதழ் வழங்க ஒரு மருத்துவர் வர வேண்டும். மருத்துவர் கணிக்கும் வயதைக் காட்டிலும் இரண்டு வயது கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என சட்டம் சொல்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் பத்து வயதைக் கடந்தவர்களே. அதனால் இந்த சட்ட நுணுக்கத்தினால் பல புகார்கள் செயலிழந்து போகின்றன. அப்படியும் உயிரோடு மீண்டு வரும் புகார்கள், குழந்தைத் தொழிலாளி அல்லது அவரது குடும்பத்தாரின் ஒத்துழையாமையால் பலனிழந்து போகின்றன.

பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் பல உறுப்பினர்களைக் கொண்ட ஏழைக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் என்ற பரவலான ஒரு எண்ணமும் உண்டு. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் சிறுவர் வேலையாட்கள் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையாவது படித்துவிட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இச்சிறுவர்களைப் பொறுத்தமட்டில் படிப்பதற்கு ஆர்வமில்லை என்பதை விட குடும்பப் பொருளாதாரமே மேலோங்கி நிற்பதை அவதானிக்கலாம்.

இலங்கையிலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். அதிலும் பெருந்தோட்டத்துறையில் உள்ள சிறுவர்களே அதிகமாக இந்த நிலைக்கு உள்ளாகியுள்ளனர். குடும்பங்களில் போதிய வருமானமின்மை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே, வளர்முக நாடுகளில் சிறுவர் பணிக்கமர்த்துவதை கட்டுப்படுத்தல் என்பது ஒரு விரிவான ஆய்வுப் பொருளாக இருப்பதையும் இதனுடன் இணைந்த வகையில் குடும்பப் பொருளாதாரப் பின்னணி பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதையும் அவதானத்தில் கொள்ளுதல் வேண்டும்.

வஸிரிஸ்தான் மாகாணத்தின் எஞ்சிய பிரதேசங்களை மீட்கும் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்

தலிபான் களின் மறைவிடங்கள் முகாம்களைத் தேடி அழிக்கும் இராணுவ நடவடிக்கையில் நேற் றிரவு இருபது தலிபான்கள் உயிரிழந்தனர். தலி பான்களின் முக்கிய தலைவர்கள் அல்கைதாவின் தலைவர்கள் மறைந்துள்ளதாகக் கருதப்படும் பான்னா மாவட்டத்தில் இராணுவ நடவடிக்கைகள் அரம்பமாகியுள்ளன.

வஸிரிஸ் தான் பிர தேச இராணுவ நடவடிக்கைகள் வெற்றியடை ந்து வரும் நிலையில் இராணுவத்தினர் முக்கிய கட்டத்துக்குள் வந்துள்ளனர். பான்னூ மாவட்ட த்தில் அல் கைதாவின் தலைவர்கள் மறைந்திருந்து மேற்குலகிற்கும் அமெரிக்காவுக்கு எதிராகத் திட்டமிடுவதாக அமெரிக்கா கருதுகின்றது. இத னால் பான்னூ மாவட்டத்தில் முன்னெடுக்கப்ப டும் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் கண்கள் அகலத் திறந்துள்ளன.

இரண்டு தினங்களுக்கு முன்னர் பான்னூ மாவட்டத்துக்குள் இராணுவம் நுழைந்த போது தலிபான்கள் கடும் தாக்குதலைத் தொடுத்தனர். கடுமையான மோதலின் பின் இராணுவம் அப்பகுதிக்குள் பிரவேசித்தது. இச்சண்டையில் அறுபது தலிபான்கள் பலியானதுடன் பெருந்தொகையானோர் காயமடை ந்தனர். பின்னர் பான்னூ மாவட்டத்திலுள்ள தலிபான்களின் மறைவிடங்கள் முகாம்களைத் தேடும் நடவடிக்கை இராணுவத்தால் தீவிரப்படுத்தப்பட்டது.

வஸிரிஸ்தான் மாகாணத்தை தலிபான்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதிலிருந்து இதுவரை மூன்று மாவட்டங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள பான்னூ மாவட்டத்தை மீட்கும் இராணுவ நடவடிக்கை நேற்றிரவு ஆரம்பமா னது. இதன் முதற்கட்டத்தில் இருபது தலிபான்களும் மூன்று படைவீரர்களும் உயிரிழந்தனர்.