June

June

அரச படையினர் வென்றது புலிகளையே அன்றி தமிழ் மக்களையல்ல என்பதை உணர்த்தும் வகையில் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்

அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல என்ற உண்மையை ஒவ்வொரு பெரும்பான்மையின மக்களும் உணரும் வகையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இரா.தங்கவேல் தெரிவித்தார்.

கட்டபுலாத் தோட்டக் கீழ்ப்பிரிவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

அரசாங்கம் பயங்கரவாதத்தை அடக்கி ஒடுக்கி விட்டதாக அமைச்சர்கள் மார்தட்டி மகிழ்ச்சியில் குதூகலித்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் தலைவர்களையும் மிஞ்சும் வகையில் அதிகாரிகள் எதிர்க்கட்சியினர் மீது குற்றஞ் சுமத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.  ஏதோ ஒரு வழியில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. ஆனால் அந்த வெற்றியை காரணங்காட்டி காலத்தையும் நேரத்தையும் வீணடிப்பது விவேகமற்ற செயல். அத்துடன் தூர நோக்கின்றி கேளிக்கைகளை முன்னெடுப்பது பாமர மக்கள் மத்தியில் நச்சு விதைகளை விதைப்பது போன்றது. இது ஆரோக்கியமானதாக அமையாது. மாறாகப் பாரதூரமான விளைவுகளுக்கே வழிவகுக்கும்.

அரசாங்கம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த இந்த வேளையில் இந்நாட்டில் இன மோதல்கள், பாரிய யுத்தம், ஆயுதக் கலாசாரம் என்பன ஏற்பட ஆணிவேராக அமைந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப உடனடி அரசியல் தீர்வு காண வேண்டியது தலையாய கடமை.

அந்தக் கடமையிலிருந்து தவறி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் வகையில் செயற்படின் முன்னொருபோதும் ஏற்படாத அளவில் பாரிய இனப்பிரச்சினை வெடித்து இந்நாட்டில் ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதியையும் கூடப் பறிகொடுக்க நேரிடும்.

இன்று சாதாரண தமிழ், முஸ்லிம் மக்கள் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போதும் அன்றாட அலுவல்களுக்காக வெளியில் நடமாடும் போதும் மானசீகமாக எதிர்நோக்குகின்ற தொல்லைகளும் துயர்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. 1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இந்நாட்டில் விதைத்த இனத்துவேச விதைகளினையே அண்மைக் காலத்தில் அறுவடை செய்யப்பட்டது என்ற உண்மையை ஆட்சியாளர்கள் நெஞ்சில் நிலைநிறுத்தி மீட்டிப் பார்த்து தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக நடமாடும் வகையில் கௌரவமான அரசியல் தீர்வைக் காணவேண்டும்.

அத்துடன், பேரினவாதிகள் சந்தர்ப்பத்தைச் சாதகமாகக் கொண்டு இனவெறியைத் தூண்டும் வ?யில் தமிழ் மக்களை அவமதித்து அவதூறு செய்கின்ற அருவருக்கத்தக்க அனைத்துச் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல என்ற உண்மையை ஒவ்வொரு பெரும்பான்மையின மக்களும் உணரும் வகையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரையிலான ரயில் சேவை இன்று ஆரம்பம்

yaal-devi.jpgகொழும் பிலிருந்து தாண்டிக்குளம் வரையிலான யாழ் தேவி ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வவுனியா வரை மட்டுப்பட்டிருந்த இந்த ரயில் சேவை கடந்த 20 வருடங்களுக்கு பின்னர் வட பகுதியான தாண்டிக்குளம் வரையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் இதன் ஆரம்ப வைபவத்தில் அமைச்சர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்

மியன்மாரின் மனிதாபிமான உதவி: 50,000 டொலர் இலங்கைக்கு அன்பளிப்பு

இடம் பெயர்ந்த மக்களின் நலன்பேண மியன்மார் அரசாங்கம் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளது.

இதற்கமைய 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முதற்கட்டமாக நன்கொடை யாக வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக மியன்மார் தூதரகம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளவ ர்களின் நலன்களுக்கே இந்த நன்கொடை பயன்படுத்தப் படவுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்தது.

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள்-விசாரிக்க பான் கி மூன் வலியுறுத்தல்

uno.jpgஇலங் கையில் அரசுப் படையினரும், விடுதலைப் புலிகளும் செய்த போர்க் குற்றங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியை தமிழ் மக்களின் தோல்வி என கருதி இலங்கை அரசு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு  கவுன்சிலில் நேற்று பான் கி மூன் பேசினார். இலங்கை விவகாரம்  குறித்து அவர் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில் நீடித்து நடந்த இனப் போரின்போது இரு தரப்பும் போர்க் குற்றங்கள் செய்திருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே இதுகுறித்து விரிவான போர்க் குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்

சர்வதேச அளவில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும். எப்படிப்பட்ட முறையில் இது அமைய வேண்டும் என்பதை நான் விவரிக்க விரும்பவில்லை. இருப்பினும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள், மனித உரிமை நியதிகள் மீறல் உள்ளிட்டவை குறித்த முக்கியமான புகார்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

எந்த விசாரணையாக இருந்தாலும் அது அர்த்தப்பூர்வமாக இருக்க வேண்டும். ஐ.நா. உறுப்பினர்களின் ஆதரவுடன் அது நடைபெற வேண்டும். பாரபட்சமில்லாமலும் அந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் பான்.

20க்கு 20 உலகக் கிண்ண துடுப்பாட்ட போட்டித் தொடரின் நேர அட்டவணை

muralitharan-sri-lankas.jpgபிரித்தா னியாவில்  லோட்ஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமான 20க்கு 20  உலகக் கிண்ண துடுப்பாட்ட போட்டித் தொடரின்  நேர அட்டவணை வருமாறு (இலங்கை நேரப்படி) .

ஜுன் 5:  இங்கிலாந்து நெதர்லாந்து பிரிவு – பி  லண்டன் இரவு 10 மணி (நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.)

ஜுன் 6:  நியுசிலாந்து ஸ்காட்லாந்து பிரிவு – டி லண்டன் பிற்பகல் 2.30 மணி

ஜுன் 6: ஆஸ்திரேலியா மேற்கு இந்தியா பிரிவு – சி லண்டன் மாலை 6.30 மணி

ஜுன் 6: வங்காளதேசம் இந்தியா பிரிவு – ஏ நாட்டிங்காம் இரவு 10.30 மணி

ஜுன் 7: ஸ்காட்லாந்து தென் ஆப்பிரிக்கா பிரிவு – டி லண்டன் மாலை 6 மணி

ஜுன் 7: இங்கிலாந்து பாகிஸ்தான் பிரிவு – பி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 8: வங்காளதேசம் அயர்லாந்து பிரிவு – ஏ நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 8: ஆஸ்திரேலியா இலங்கை பிரிவு – சி நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 9: நெதர்லாந்து  பாகிஸ்தான் பிலண்டன் மாலை 6 மணி

ஜுன் 9: நியுசிலாந்து  தென்ஆப்பிரிக்கா பிரிவு – டி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 10: இலங்கை மேற்குஇந்தியா பிரிவு – சி நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 10: இந்தியா அயர்லாந்து பிரிவு – ஏ நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 11: டி1 ஏ2 நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 11: பி2 டி2 நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 12: பி2 சி2 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 12: ஏ1 சி1 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 13: சி1 டி2 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 13: டி1 பி1 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 14: ஏ2 சி2 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 14: ஏ1 பி2 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 15: பி2 சி1 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 15: பி1 ஏ2 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 16: டி1 சி2 நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 16: டி2 ஏ1 நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 18: முதலாவது அரை இறுதி நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 19: 2 வது அரை இறுதி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 21 இறுதிப்போட்டி லண்டன் இரவு 7.30 மணி

விடுதலைப் புலிகள் இயக்கம் செயலிழந்துவிட்டது; பயங்கரவாதப் பட்டியிலில் இருந்து அது இனி நீக்கப்பட வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது செயலிழந்து போன ஒரு இயக்கம் என்பதனாலும் சிறிலங்கா அரசாங்கத்தின் கூற்றின் படி அந்த இயக்கத்தின் அனைத்து தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டமையாலும் – அமெரிக்காவும் ஏனைய மேற்குலக அரசுகளும் விடுதலைப் புலிகளை தமது பயங்கரவாதப் பட்டியல்களில் இருந்து நீக்க வேண்டும் என ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெர்மனி நாஜி வதைமுகாமுக்கு அதிபர் ஒபாமா விஜயம்

obamaspeech.gifஜெர் மனியின் ட்ரெஸ்டன் நகரில், ஜேர்மனிய தலைவி ஆங்கெலா மெர்கெல் அவர்களைச் சந்தித்து உரையாடிய அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள், பூகென்வால்ட் நகரில் முன்னாள் நாஜி சித்திரவதை முகாமுக்கு விஜயம் செய்துள்ளார்.

கெய்ரோவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உரையை ஆற்றிய மறுதினம், கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அதிபர் ஒபாமா, மத்திய கிழக்கில் அமைதியை எட்டுவதற்கான தருணம் இது என்று கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது அமெரிக்கா சமாதானத்தை திணிக்காது என்கின்ற போதிலும், அவர்கள் பேச்சை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை அது ஏற்படுத்தும் என்று ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும், ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகள் குறித்துப் பேசிய அவர், உலக விவகாரங்கள் குறித்து தொடர்ச்சியான பல விடயங்கள் கையாளப்பட வேண்டிய நிலையில் ஜேர்மனி தமது முக்கிய கூட்டாளி என்று குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை கையாள செயலணி

susil_prem_minister.jpgஇடம் பெயர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கவனிக்கவென கல்விச் செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் பிரதிக் கல்வியமைச்சர் சச்சிதானந்தனும் அங்கம் வகிக்கின்றார்.

கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று நேற்று வவுனியா தெற்கு கல்வி வலய அலுவலகத்திற்கு விஜயம் செய்தது. இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று வவுனியா தெற்கு கல்வி வலயக் காரியாலயத்தில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், பிரதியமைச்சர் சச்சிதானந்தன் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டிலேயே கல்விச் செயலணி அமைக்கப்பட்டது. கல்வி தொடர்பான குறைபாடுகள் மற்றும் அதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக மேற்படி செயலணி நடவடிக்கைகள் எடுக்கும். அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த், அனைத்துக் குறைபாடுகளும் குறுகிய காலத்தில் நிவர்த்திக்கப்படுமென உறுதியளித்தார்.

வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் 17 பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவைகள் இடைத்தங்கல் முகாம்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்வரும 31ம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளில் தங்கியிருப்போர் ஆறாவது வலய நிவாரணக் கிராமங்களுக்கு மாற்றப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் அதன் பின்னர் 17 பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுமெனக் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் 55 ஆயிரம் மாணவர்களும் 1969 ஆசிரியர்களும் தங்கியுள்ளனர். இவர்களுக்கென 13 கோடி ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஆசிரி யைகளுக்கான சேலைகள் உட்பட ஏராளமான பொருட்கள் கல்வியமைச்சரினால் கையளிக்கப்பட்டன. இதேவேளை நிவாரணக் கிராமங்களில் கல்வி நடவடிக்கைகளைக் கண்காணிக்கவென கண்காணிப்பு அலுவலகமொன்று அமைக்கப் பட்டுள்ளது. கல்வியமமைச்சர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

‘கப்டன் அலி’ தொடர்ந்தும் தடுத்துவைப்பு: கடற்படையினர் தீவிர விசாரணை

vanangaaman-captainali.jpgஇலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த “கப்டன் அலி” சரக்குக் கப்பல் பாணந்துறை கடற்பரப்பினுள் தடுத்து நிறுத்தப்பட்டு கடற்படையினரின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என கடற்படையின் பேச்சாளர் கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். கொழும்பிலிருந்து சுமார் 87 கடல் மைல் தொலைவில் நேற்றுமுன்தினம் அதிகாலை 4.00 மணியளவில் கைப்பற்றப்பட்ட எம். வி. கப்டன் அலி சரக்குக் கப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றுக்கொண்டுவந்துள்ளதாக கூறியே இக் கப்பல் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்துள்ளது. எனினும் இன்னொரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதாயின் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் எதனையும் பின்பற்றாமல் எதுவித முன்னறிவித்தலும் இன்றி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவிக்கிறது. கடற்படையின் விசாரணைகள் இன்னும் முடியவில்லை. முடிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாணந்துறை கடல் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட இக் கப்பலில் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் அடங்கலாக சுமார் 884 மெற்றிக் தொன் பொருட்கள் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர். ஒரு ஐஸ்லாந்து பிரஜையும், ஒரு ஆங்கிலேய பிரஜையும் இரண்டு எகிப்திய பிரஜைகளும். 11 சிரிய பிரஜைகளும் உட்பட 15 மாலுமிகள் இருந்தனர். கப்பலின் கப்டனும் சிரிய பிரஜையென கடற்படை அறிவிக்கிறது.

சுமார் 93 மீற்றர் நீளமும், 14 மீற்றர் அகலமும் கொண்டதான சரக்குக்கப்பல் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை கடற்பரப்பிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளது.கப்பல் தொடர்பாக கடற்படையினரின் விசாரணைகள் யாவும் பூர்த்தியானதுமே மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என இலங்கை வெளிநாட்டமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித்த கொஹன தெரிவித்தார்.

வங்காளவிரிகுடாவில் சிறிய தாழமுக்கம்; சில தினங்களுக்கு காற்றுடன் மழை

fishing_peoples.jpgவங்காள விரிகுடாவின் வட மேற்கு பகுதியில் தாழ முக்க அறிகுறிகள் உருவாகி யிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் நந்தலால் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

இதன் விளைவாக அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்கு நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடைஇடையே கடும் காற்று வீச முடியும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், வங்காள விரிகுடாவின் வட பகுதியில் தாழமுக்க அறி குறி ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினால் அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்கு நாட்டில் இடையிடையே கடும் காற்று வீச முடியும். இச்சமயம் மணித் தியாலத்திற்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், இந்த நாட்களில் கடலும் கொந்தளிப்பாக இருக்கும். அதனால் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்வது அவசியம். இதேவேளை, கடல் பரப்பிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்தோடு மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் என்றார்.