வங்காள விரிகுடாவின் வட மேற்கு பகுதியில் தாழ முக்க அறிகுறிகள் உருவாகி யிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் நந்தலால் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.
இதன் விளைவாக அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்கு நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடைஇடையே கடும் காற்று வீச முடியும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், வங்காள விரிகுடாவின் வட பகுதியில் தாழமுக்க அறி குறி ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினால் அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்கு நாட்டில் இடையிடையே கடும் காற்று வீச முடியும். இச்சமயம் மணித் தியாலத்திற்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், இந்த நாட்களில் கடலும் கொந்தளிப்பாக இருக்கும். அதனால் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்வது அவசியம். இதேவேளை, கடல் பரப்பிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்தோடு மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் என்றார்.