June

June

பிரேசில் கடற்படையால் உடல்கள் மீட்பு

01-air-france.jpgகடந்த வாரம் விபத்துக்குள்ளான ஏர்பிரான்ஸ் விமானத்தில் பயணித்தவர்கள் என்று நம்பப்படும் மூன்று பேரின் உடல்களை மீட்டுள்ளதாக பிரேசில் கடற்படை கூறியுள்ளது. ரியோவில் இருந்து பாரீஸ் சென்ற இந்த விமானத்தில் 228 பேர் பயணித்தனர். இப்போது கண்டு எடுக்கப்பட்ட உடல்களோடு சேர்த்து இதுவரையில் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தன்னுடைய ஏர்பஸ் தயாரிப்பு விமானங்களில் உள்ள வேகத்தை காட்டும் கருவிகளை மாற்றும் பணியை துரிதப்படுத்தப் போவதாக ஏர் பிரான்ஸ் கூறியுள்ளது. இந்தக் கருவிகளில் பிரச்சனை இருப்பது ஒராண்டுக்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டது, எனினும் விபத்து நடைபெறுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த கருவிகளை மாற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

விபத்தை ஆராய்ந்து வருபவர்கள், காணாமல் போவதற்கு முந்தைய நிமிடங்களில், விமானத்தின் உணர்வான்கள் முரண்பட்ட தகவல்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சகல வசதிகளுடனும் உட்கட்டமைப்பு – பசில்

basil.jpgவட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் பாடசாலை, சுகாதாரம், நீர், மின்சாரம் உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகள் வெகுவிரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம். பி. தெரிவித்தார்.

இங்குள்ள மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் கட்டம் கட்டமாக செய்து கொடுத்து வெகு விரைவில் வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முக்கிய எதிர்பார்ப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் ‘தெற்கின் தோழன்’ என்ற தொனிப் பொருளில் கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரையான ரயில் சேவை நேற்று முன்தினம் ஆரம்பமானது. கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்ற ரயில் தாண்டிக்குளம் சென்றடைந்த பின்னர் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பசில் ராஜபக்ஷ எம். பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில்:-

எமது படை வீரர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளும், அர்ப்பணிப்புக்களுமே இன்று யாழ் தேவியை தாண்டிக்குளம் வரை கொண்டுவர முடிந்தது. எமது படை வீரர்கள் மனிதாபிமான நடவடிக்கையை மனிதாபிமான முறையில் முன்னெடுத்தனர். அவர்களது சேவையும், பங்களிப்புக்களும் மிகவும் மகத்துவமானது எனவே அவர்களை என்றும் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையும் புகையிரத சேவைகளை ஏற்படுத்தி கொடுப்பது மாத்திரமின்றி இதுபோன்ற சகல வசதிகளையும் படிப்படியாக செய்து கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அது கட்டாயம் வெகுவிரைவில் நிறைவேறும்.

எனவே தான் ஏ-9 பிரதான வீதி, மதவாச்சி – மன்னார் வீதி, மன்னார் – பூநகரி வீதி என்று பல முக்கிய வீதிகளை புனரமைப்பதற்கான பணிகளை அரசாங்கம் வேகமாக முன்னெடுத்து வருகின்றது. புகையிரதம், போக்குவரத்து, மின்சாரம், நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம், பாடசாலை சுகாதாரம் உட்பட சகல உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் ஐந்து மாவட்டங்களிலும் செய்து கொடுக்கப்படும்.

இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களை போன்று சகல வளங்களையும் கொண்ட இந்த மாகாணம் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யப்படும். நிவாரணக் கிராமம் என்பது சுற்றுலா விடுதியல்ல. சில சில குறைபாடுகள் இருக்கலாம். இதனையும் நிவர்த்தி செய்த வண்ணம் தமது பணிகளை அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் 30 புதிய பாடசாலை கட்டடங்கள் நிர்மாணிக்க திட்டம் – சுசில்

civiling_fleeng3.jpgவட மாகாணத்தில் 30 புதிய பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் வவுனியாவில் தெரிவித்தார். மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இந்தப் புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார்.

‘வடக்கின் வசந்தம்’ 180 நாள் வேலைத்திட்டத்துடனேயே பாடசாலைக் கட்டட நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்படுமென்று தெரிவித்த அமைச்சர் பிரேம்ஜயந்த் ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா 35 இலட்சம் ரூபாய் செலவிடப்படுமென்று தெரிவித்தார்.

இதற்குக் கேள்விப்பத்திரம் கோரப் படாமல், ‘ரேம்’ எனும் அரச சார்பற்ற நிறுவனமொன்றுடன் விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வட மாகாணப் பாடசாலைகளினதும், இடம்பெயர்ந்த மாணவர்களினதும் குறை நிறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கு முகமாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட மாநாடொன்று நடைபெற்றது.

இதில் வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் தற்போதைய நிலைவரத்தை விளக்கினார். இந்த மாநாட்டில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கல்வி பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு ஐந்து கண்காணிப்பு அலுவலகங்களை அமைப்ப தாகக் கூறிய அமைச்சர் பிரேம் ஜயந்த், அதன் செயற்பாட்டுக்கென 30 சைக்கிள்கள், சீ.டி.எம்.ஏ. தொலைபேசி வசதி, ஃபக்ஸ் இயந்திரம், பிரதிபண்ணும் இய ந்திரம் ஆகிய வசதிகளை அடுத்த வாரம் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.

பிரதம நீதிபதியாக மேலுமோர் என் டீ சில்வா.

asoka-de-silva.jpgநீதித் துறையில் இலங்கையில் அதியுயர் பதவியாகிய பிரதம நீதியரசர் பதவியில் இருந்து சரத் என் சில்வா அவர்கள் 7ம் திகதி யூன் மாதம் ஓய்வு பெறும் நிலையில், ஜோசப் அசோக என் டீ சில்வா அவர்கள் புதிய பிரதம நீதியரசராக நியமனம் பெறுகின்றார்.

1971ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட இவர், 1972ம் ஆண்டு உச்ச நீதிமன்றில் சட்டத்தரணியாக சத்தியப்பிமாணம் செய்துகொண்டதுடன் இலங்கை சட்டத் துறையிலே பல பதவிகளை வகித்து, 2001 ஆண்டு உச்ச நீதிமன்றின் மேலதிக விசாரணை நீதிபதிகளுக்கான தலைவராக விளங்கியுள்ளார்.

ருவண்டாவில் நிறுவப்பட்டிருந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு அன்றைய ஐ.நா செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களால் அசோக என் டீ சில்வா அவர்கள் நிரந்தர நீதிபதியாக 2004ம் ஆண்டு நியமனம் பெற்று, அங்கிருந்த 16 நீதிபதிகளுள் ஒருவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச சட்டவியலில், விசேடமாக இனஅழிப்பு, படுகொலைகள் போன்றவற்றில் மிகவும் பெயர்போன இவர் இன்று இப்பதவிக்கு நியமனம் பெற்றிருப்பாதானது இலங்கையில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினை விவகாரங்களை கையாள்கையில் நீதித்துறை நிமிர்ந்து நிற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: இலங்கைக்கு நேரடி பாதிப்பு இல்லை

sea.jpgவங்காள விரிகுடாவின் வட மேற்கு பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கைக்கு நேரடியான பாதிப்பு கிடையாது என்று வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ். ஆர். ஜயசேகர நேற்றுத் தெரிவித்தார்.

இருப்பினும் இத்தாழமுக்கம் காரணமாக இலங்கையில் காற்றின் வேகம் அதிகரிக்க முடியும். அத்தோடு கடலும் கொந்தளிப்பாகக் காணப்படும். அதனால் கடலுக்குச் செல்லும் மினவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையிலிருந்து மிகவும் தூரமான கடற் பிரதேசத்தில் தான் இத்தாழமுக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இத்தாழமுக்கத்தினால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு கிடையாது.

என்றாலும் வடக்கு, கிழக்கு மற்றும் தென் கிழக்கு கடற் பரப்புக்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன், கடல் கொந்தளிப்பாகவும் உள்ளது. இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 60 கிலோ மீட்டர் வரை அதிகரித்துக் காணப்பட முடியும்.

ஆகவே, இப்பிரதேசங்களில் வாழும் மீனவர்கள், கடலுக்குச் செல்வதாயின் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். தற்போதைய காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கலாம். அதனால் கடும் காற்றின் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் நேற்று முன்தினமிரவு முதல் இடையிடையே கடும் காற்று வீசுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன கூறினார்.

ஜனாதிபதி மியன்மாருக்கு விஜயம்

he_speech_ranaviru_.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மியன்மாருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மியன்மாரில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட நர்க்கிஸ் புயலில் பாதிக்கப்பட்டு மீள புனரமைக்கப்பட்ட கிராமம் ஒன்றை ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கிராமத்தின் நிர்மாணப்பணிகளுக்கென இலங்கை பிக்குமார் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘எங்களின் சமுத்திரங்களும், எங்களின் பொறுப்புகளும் : ஜுன் 08ஆம் திகதி – உலக சமுத்திர தினம் World Oceans Day – புன்னியாமீன்

world-ocean-day.jpgஉலக சமுத்திர தினம் World Oceans Day  ஆண்டு தோறும் ஜூன் மாதம் 08ஆம் திகதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களின்  சமுத்திரங்களும்,  எங்களின் பொறுப்புகளும் “Our oceans, our responsibility ” எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2009 ஜூன் மாதம் 08ஆம் திகதி செயற்பாட்டு நிகழ்ச்சி நிரலை ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ளது.

1992 ஜுன் மாதம் 08ஆம் திகதி பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ  Rio de Janerio  நகரில் நடைபெற்ற “புவி மகாநாட்டின் போது”  EARTH – SUMMIT  சமுத்திரங்கள் மனித சமூகத்திற்கு வழங்கும் செல்வங்களை இனங்கண்டு மக்கள் மத்தியில்  சமுத்திரதினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து  முன்வைக்கப்பட்டது.  2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் 08ஆம் திகதியிலிருந்து  உலக சமுத்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என 2008 டிசம்பர் 05ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை  63/iii ம் தீர்மானத்தின்படி முடிவெடுத்துள்ளது.

சமுத்திர விவகாரங்கள் மற்றும் சமுத்திர நீதிக்குப் பொறுப்பான திணைக்களம், செய்தித் திணைக்களத்துடன் இணைந்து இத்தினத்தில் பல நிகழ்ச்சிகளையும்,  செயற்பாடுகளையும் செய்து வருகின்றது.  விழிப்புணர்வு நடவடிக்கையாக நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளன. உலகின் சமுத்திரங்களால் நாம் பெறும் பயனை அளவிடவும்,  அவை எமக்கு வழங்கும் (கடல்) உணவுகள்,  மீன்கள், செல்லப் பிராணிகள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களையும்,  அவற்றின் பயன்கள், பெறுமதிகள் பற்றி உயர் மதிப்புடன் நோக்கவும் இத்தினத்தை வருடாவருடம் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது

சமுத்திரம் என்பது கூடிய பரப்பைக்கொண்ட உப்பு நீர் நிலையாகும். இது நீர்க் கோளத்தின் முக்கியமான கூறாகும். ஏறத்தாழ 71% புவி மேற்பரப்பு (361 மில்லியன் சதுர கிலோமீட்டர்) தொடர்ச்சியாக அமைந்துள்ள சமுத்திரங்களினால் மூடப்பட்டுள்ளன. இவை பல சமுத்திரங்களாகவும், பல கடல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் பரப்பளவின் அரைப் பகுதிக்கு மேல் 3, 000 மீற்றருக்கு (9, 800 அடி) மேற்பட்ட ஆழத்தைக் கொண்டன. சராசரி உப்புத்தன்மை ஆயிரத்தில் 35 பகுதி (35%) ஆகும். பொதுவாக முழுக் கடல்நீரும் சராசரியாக ஆயிரத்துக்கு 30 – 38 பகுதிகள் உப்புத்தன்மை கொண்டது.

பொதுவாகப் புவி மேற்பரப்பிலுள்ள சமுத்திரங்கள் தனித்தனியானவை எனக் கொள்ளப்பட்டு வந்தாலும்,  அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாகும். இவ்வாறு சமுத்திரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கட்டற்ற பரிமாற்றங்களைக் கொண்ட ஒரே உலகச் சமுத்திரம் என்னும் எண்ணக்கரு கடலியலில் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றது. முதன்மையான சமுத்திரங்களின்,  ஒரு பகுதி கண்டங்களாலும்,  தீவுக் கூட்டங்களாலும்,  ஏனைய பகுதி இயற்கை நீதிகளினாலும் வரையறுக்கப்பட்டுள்ளன.

இன்று உலகில் பசிபிக் சமுத்திரம், அத்லாந்திக் சமுத்திரம்,  இந்து சமுத்திரம்,  அந்தாட்டிக் சமுத்திரம்,  ஆர்க்டிக் சமுத்திரம் என ஐந்து சமுத்திரங்கள் காணப்படுகின்றன. பசிபிக்,  அத்திலாந்திக் சமுத்திரங்களை புவிமையக் கோட்டை வைத்து வடக்குத் தெற்குப் பகுதிகளாகப் பிரிப்பதும் உண்டு. சமுத்திரங்களின் சிறிய பகுதிகள் கடல்கள்,  வளைகுடாக்கள்,  விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றைவிட நிலத்தால் சூழப்பட்ட சில உப்புநீர் நிலைகளும் உள்ளன.

மக்கள் வாழ்வில் சமுத்திரங்கள் வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் சமுத்திரங்கள் சம்பந்தமாக நாம் எவ்வாறான வழிகளில் பணியாற்ற முடியும் என்பது பற்றி உலக சமுத்திர வலை பின்னலோடு சமுத்திர திட்டமும் இணைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.

அளவுக்கதிகமாக மீனினங்களை நாம் உணவாக உட்கொள்வதன் காரணமாகவும், மீன்களினதும் மற்றும் பெரும்பாலான கடல் உயிரினங்களினதும் தொகை சீக்கிரமாகக் குறைந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இன்னும் 12 வருடங்களில் மீனினங்கள் வெகுவாககக்குறைந்து விடலாம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு நேரடியாகப் பங்கு கொள்வதற்கு இத்தினமானது எமக்கொரு அரிய சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது. இத்தினத்தில் புதிய மன நிலையுடன் தனிப்பட்ட மற்றும் சன சமூக நடவடிக்கைகளில் இடுபடல், கடற்கரைகளின் சுத்திகரிப்பு,  கல்வி சம்பந்தமான நிகழ்ச்சி நிரல்கள்,  வரைதல் போட்டிகள்,  திரைப்பட விழாக்கள்,  கடலுணவுகள் பற்றிய அறிவுறுத்தல் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு,  எங்களின் வாழ்வு சமுத்திரங்களில் எவ்வாறு தங்கியுள்ளது என்பதை உணர்த்துவதன் மூலம் மக்களின் மனச்சாட்சியினை மேம்படுத்த முடிகின்றது. இச்சமுத்திரங்களினால் மக்களுக்கு ஏற்படும் சேவைகள் விசாலமானவை. அதே நேரம் பாரிய அழிவுகளையும் நொடிப்பொழுதில் இந்த சமுத்திரங்கள் ஏற்படுத்தி விடும.; உதாரணமாக 2004ஆம்ஆண்டு சுனாமிப்பேரலையைக் குறிப்பிடலாம். இந்த நிகழ்வு பற்றிய உணர்வுகளையும் மாற்றியமைக்க எத்தனித்தல் வேண்டும்.

சமுத்திரங்கள் எங்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும். கடல் வளங்கள் மக்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. சமுத்திரங்கள்,  சர்வதேச வர்த்தக பாதைகளாகவும் விளங்குகின்றன. நாம் சுவாசிக்கும் தூய காற்றினையும்,  உணவையும் வழங்கும் சமுத்திரங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கின்றன. உலக சமுத்திர தினத்தில் Dr. சால்ஸ் குளோவர் என்பவரின் நூலை அடிப்படையாகக் கொண்ட அவரின் முகவுரையை கொண்ட புகழ்வாய்ந்த THE END OF THE LIVE எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்படுகின்றது.

நொட்டர்டேமிலுள்ள இராஸ்மஸ் பல்கலைக்கழகமும், DELFT தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து இத்தினத்தைக் கொண்டாடுவதற்குப் பல திரைப்பட நிகழ்ச்சிகளை நடாத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை உயிரினங்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.  

எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி!? ‘வணங்கா மண்’ வரிசையில் ஜனனி ஜனநாயகத்தின் அரசியல் கப்பலும் கவிழ்ந்தது!!! : ரி கொன்ஸ்ரன்ரைன்

Jan Jananayagamதேர்தல்களில் நிற்பவர்கள் எல்லோரும் வெற்றி பெறுவதில்லைத் தான் அதிலும் குறிப்பாக தேர்தலில் நிற்பவர்கள் எல்லோரும் தாம் வெற்றி பெறப் போவதில்லை என்று எண்ணுவதும் இல்லை. சிலர் கட்சியின் சார்பாக நிறுத்தப்படுகின்றனர். சிலர் ஏதோகொள்கையின் நிமித்தம் தேர்தலில் நிற்கின்றனர். சிலருக்குப் பேராசை. இன்னும் சிலருக்கோ நப்பாசை. இதில் லண்டன் தொகுதியில் நின்று தோல்வியுற்ற ஜனனி ஜனநாயகம் எவ்வகை?

யூன் 4ல் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் இடம்பெற்றது. பிரித்தானியா உட்பட 27 நாடுகளில் உள்ள 375 மில்லியன் பிரஜைகள் 736 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். பிரித்தானியாவில் உள்ள 72 ஆசனங்களில் லண்டனில் 8 ஆசனங்களுக்கு 19 பேர் போட்டியிட்டனர். அதில் ஜனனி ஜனநாயகம் புலியாதரவு அலையுடன் தேர்தலில் நின்றார். தேர்தலின் முடிவுகள் இன்று (யூன் 7) வெளியாகியது. 

இவ்வாரம் வெளியாகிய புலியாதரவு ஈழமுரசு பத்திரிகையில் ‘வணங்கா மண்’ கப்பலைத் தொடர்ந்து ஜனனியின் தேர்தல் பிரவேசம் புலத்து தமிழர்களின் விடுதலைப் பாதையை தெளிவாகச் செப்பனிடுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. வீர காவியங்களோடு புறப்பட்ட ‘வணங்கா மண்’ ‘வணங்கிய மண்’ ணாக போய் சிறிலங்கா அமைச்சரின் காலில் கூனிக் குறுகி நிற்கின்றது.

ஈழப் பிரச்சினையுடன் கூட்டாக பொஸ்னியா தீபெத் பிரச்சினையையும் தீர்க்கப் புறப்பட்ட ஜனனியின் கப்பல் ஈஸ்ற்ஹாமைத் தாண்ட முதலே கவிழ்ந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் மிகவும் செறிந்து வாழும் ஈஸ்ற்ஹாமில் ஜனனி பெற்ற வாக்குகள் 3520 மட்டுமே. முருகானந்தன், ஒரு பேப்பர் கோபி, பற்றிமாகரன், ராஜாமனோகரன், மற்றும் வெற்றுவாய் அரசியல் ஆய்வாளர்களின் அரசியல் சித்தாந்தங்களை நம்பியும் தீபம் ஜிரிவி ஐபிசி ஒரு பேப்பர் ஈழமுரசு போன்ற ஜால்ரா ஊடகங்களை நம்பியும் நடாத்தப்படும் அரசியலின் விளைவு தான் ஜனனியின் தோல்வி.

ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு லண்டனில் ஒரு ஆசனத்தைப் பாதுகாக்க குறைந்தது 8 வீத வாக்குகளாவது (190 000) தேவையென்று தேசம்நெற்றில் முன்னரே குறிப்பிட்டு இருந்தோம். இம்முறை ஒரு ஆசனத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட ஆகக் குறைந்த வாக்கு 188 440. ஜனனி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வாக்குகள் 50 014. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.9 வீதமான வாக்குகளை ஜனனி ஜனநாயகம் பெற்றிருந்தார். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அவர் தனது கட்டுப் பணத்தை தக்க வைத்துக் கொள்ள 40 000க்கும் அதிகமான வாக்குகளை 2.5 வீதமான வாக்குகள் –  பெற வேண்டி இருந்தது. 2.5 வீதத்திற்கு சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டதால் ஜனனி ஜனநாயகம் தனது 5000 பவுண் கட்டுப்பணத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ( தமிழீழத் தேசியத் தலைவி மேதகு ஜன ஜனநாயகம் அவர்களே! : ஈழமாறன் )

எவ்வித பொது அறிவும் இல்லாமல் யதார்த்தமற்ற கொள்கையினாலும் முரட்டுப் பிடிவாதங்களாலும் தடம்புரண்ட ஈழப்போராட்டம் அதே அணுகுமுறையினால் புலத்திலும் தடம் புரண்டது. அதிஸ்டவசமாக தாயகத்தில் ஏற்பட்டது போன்ற மனித அவலம் எதுவும் புலத்தில் ஏற்பட்டுவிடவில்லை.

புலத்து தமிழர்ளும் புலிப் பினாமிகளும் இன்னும் யதார்த்தத்தில் இருந்து வெகுதொலைவில் நிற்கின்றனர். தமிழகத்தில் மம்மியை கொண்டாடி மம்மியை கவிழ்த்து விட்டார்கள். இங்கு பேபியைக் கொண்டாடி பேபியையும் கவிழ்த்து விட்டார்கள். ஒரு பேப்பர் கோபியும் ஈஸ்ற்ஹாம் முருகானந்தனும் வோட்டுப் போடாதவர்களுக்கு இனி ‘துரோகிகள்’ என்று சிறப்புப் பட்டம் கொடுத்து கௌரவிப்பார்கள்.

ஜனனி ஜனநாயகம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ஒவ்வொரு தமிழரும் 5 வேற்று இனத்தவர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைப்பார்கள் அதன் மூலம் தனது சீற்றை செக்குயர் (secure)பண்ணலாம் என்று குறிப்பிட்டார். பாவம் ஜனனி புலத்து தமிழர்களைப் போல் முட்டாள்கள் வேற்று இனத்திலும் இருப்பார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார்.

எமது சமூகத்தில் பெண்களின் அரசியல் பங்களிப்பு மிகக் குறைவான நிலையில் ஜனனி ஜனநாயகம் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் புலிப் பினாமிகளின் தற்கொலை குண்டுதாரிகள் போன்று அரசியலில் நுழைவது அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தையே சிதறடித்துவிடுகின்றது.

இலங்கையில் கொல்லப்பட்ட 20 000 தமிழர்களின் இரத்தக்கறை ஜனனி போன்றவர்களிலும் இருக்கின்றது. அம்மக்கள் இலங்கை அரசாலும் புலிகளாலும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் தனது அரசியல் நலன்களுக்காக புலிகளைக் காப்பாற்றுவதிலேயே ஜனனி ஜனநாயகம் மிகத் தீவிரமாக இருந்தார். யுத்தப் பகுதிக்குள் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருப்பதை ஜனனி எச்சந்தர்ப்பத்திலும் கண்டிக்கவில்லை. புலிகள் பலவந்தாமாக இளைஞர்களையும் யுவதிகளையும் பிடித்து யுத்த முன்னரங்கிற்கு அனுப்பி அவர்களைப் பலிகொடுத்த போது ஜனனியும் அவரது ஆதரவாளர்களும் பிரபாகரனது படத்தையும் புலிக்கொடியையும் தாங்கிச் சென்றனரேயன்றி அம்மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மிகப்பெரும் மனித அவலத்தில் குறுகிய அரசியல் நோக்குடன் செயற்பட்ட ஜனனி ஜனநாயகம் வன்னி முகாம்களில் தேர்தலில் நின்றிருந்தால் கட்டுக் காசையும் பறிகொடுத்து இருப்பார்.

அமைச்சர் தொண்டமான் தலைமையில் இ.தொ.கா.குழுவினர் இந்தியா பயணம்

arumugam-thondaman.jpgஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தூதுக்குழுவினர் புதுடில்லி சென்றுள்ளனர். வடக்கு, கிழக்கு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இக்குழுவினர் இந்தியாவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பாதுகாப்புப் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக இந்திய அரசின் உயர்மட்டத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவே இக்குழுவினர் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழக் கிழமை சென்ற இக்குழுவினர் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதேவேளை, இவர்கள் இந்தியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், இ.தொ.கா. உபதலைவர்களான எம்.மணிமுத்து, செந்தில் தொண்டமான் உட்பட பலர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடு திரும்புவார்கள்.

கவிஞர் ராஜமார்த்தாண்டன் மரணம்

07rajamarthandan-1.jpgகவிஞர் ராஜமார்த்தாண்டன் 06.06.2009 அன்று அகால மரணமடைந்துவிட்டார். ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர்.

1 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்),
2 என் கவிதை (கவிதைகள்),
3 ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு),
4 கொங்குதேர் வாழ்க்கை – 3 (தொகுப்பு, தமிழினி),
5 புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி),
6 புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி).

நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே முன்வைக்கப்படுகிறார். தொடர்ந்து கவிதைகளின் போக்கையும், கவிஞர்களையும் அவர் உள்வாங்கிக்கொண்டிருந்ததால், இது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. தொடரந்து கவிதைகளை வாசிக்கும் எவரும் ஒருவித தொடர்ச்சியையோ தொடர்ச்சியின்மையையோ காலப்போக்கில் கண்டுகொண்டுவிடமுடியும். மனமாச்சரியங்களுக்கு ஆட்படாமல் தம் கருத்துகளைச் சொல்லும் திறனாய்வாளர்கள் அருகி வரும் நிலையில் ராஜமார்த்தாண்டனின் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தமிழினி வாயிலாக கொங்குதேர் வாழ்க்கை என்னும் தமிழின் மரபு-புதுக்கவிதைகளின் தொகுப்பு வந்தபோது, புதுக்கவிதைகளைத் தொகுக்கும் பணியை ராஜமார்த்தாண்டன் செய்தார். கிட்டத்தட்ட 93 கவிஞர்களின் 893 கவிதைகளை அவர் தொகுத்திருந்தார்.

தகவல் :இளைய அப்துல்லா