June

June

யாழ். ரயில் நிலைய வளாகத்தில் தங்கியுள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – யாழ். அரசாங்க அதிபர் உத்தரவு.

yaal-devi.jpgயாழ்ப் பாண ரயில் நிலையத்திலும் ரயில் நிலைய விடுதிகளிலும் தங்கியுள்ளவர்கள் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டுமென யாழ்.அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்குமிடையே மீண்டும் ரயில் சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்குப் பிரதேசம் 1990ஆம் ஆண்டு உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு வசித்துவந்த பல குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து ரயில் திணைக்களத்துக்குச் சொந்தமான இடங்களில் குடியிருந்ததுடன் அங்கு தற்காலிகக் கொட்டகைகளையும் குடியிருப்புக்களையும் அமைத்திருந்தனர்.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் பணிகளை போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு: ஈரானில் கலவரம்

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, ஜனாதிபதி அகமதி நிஜாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட மவுசாவியின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த 12ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தற்போதைய ஜனாதிபதி முகமது அகமது நிஜாத்தை எதிர்த்து மவுசாவி போட்டியிட்டார். இந்த தேர்தலில் முகமது அகமதி நிஜாத் 62.6% வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மவுசாவிக்கு 33.7% வாக்குகள் கிடைத்தன.

ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சியினர் ஏற்கவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக மவுசாவி ஆதரவாளர்கள் புகார் கூறியதுடன், ஜனாதிபதி அகமதி நிஜாத் ஆதரவாளர்களுடன் பல இடங்களில் மோதினர்.

டெக்ரான் நகரில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் காவல்துறையினர் மீது எதிர்கட்சியினர் கல்வீசி தாக்கினர். இதற்கிடையே ஈரான் மதத் தலைவரும், நாட்டின் உயர்ந்த தலைவராக கருதப்படுவருமான அயதுல்லா கொமேனி ‘ஜனாதிபதி தேர்தல் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘பெற்ற வெற்றியை எவரும் பறித்துக்கொள்ள இடமளிக்க கூடாது’

mahinda-rajapaksha.jpgஇந்நாட்டில் சுமார் மூன்று தசாப்தங்கள் நிலவிய குரூர தீவிரவாதத்தைக் குறுகிய காலத்தில் முழுமையாக ஒழித்துக் கட்டி பெற்றிருக்கும் பாரிய வெற்றியை எவரும் பறித்துக் கொள்ள இடமளிக்கக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் மாலை களுத்துறையில் தெரிவித்தார்.

அதேநேரம், சட்டம், ஒழுங்கைப் பேணி தேசத்தின் கெளரவத்தைப் பாதுகாக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். விசேட அதிரடிப்படையில் அடிப்படை பயிற்சியை முடித்த 60 வது குழுவினர் வெளியேறும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். விசேட அதிரடிப்படையினரின் களுத்துறை, கட்டுக்குருந்தை பயிற்சி கல்லூரியில் பயிற்சியைப் பூர்த்தி செய்த விசேட அதிரடிப்படையின் 100 உதவி பரிசோதகர்களும், 314 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இவ்வைபவத்தின் போது வெளியேறினர்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகில் மிகவும் குரூர தீவிரவாதிகள் ஆசிய நாடான இலங்கையில் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு விசேட அதிரடிப்படையினரின் அர்ப்பணிப்புக்களும், திறமைகளும் பெரும் பங்களிப்பு செய்துள்ளது. இந்நாட்டில் பெரும் கெளரவத்திற்குரிய படைப் பிரிவொன்றில் இணைந்துள்ள உங்களை வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகின்றேன்.

1983ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலால் நான்கு விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். அன்று முதல் இற்றைவரையும் 461 விசேட அதிரடிப்படை வீரர்கள் நாட்டுக்காக உயிர் நீத்திருக்கின்றார்கள். இருநூறுக்கும் மேற்பட்டோர் ஊனமடைந்திருக்கிறார்கள். இவர்களுக்குத் தேசத்தின் கெளரவத்தை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். தீவிரவாதம் தலைதூக்கத் தொடங்கிய போதே விசேட அதிரடிப்படை ஸ்தாபிக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கை நடைமுறைப்படுத்தி, அமைதி, சமாதானத்தை நிலைநாட்டும் பொலிஸாரைப் படுகொலை செய்வதற்கு பயங்கரவாதிகள் ஆரம்பித்தனர். அல்பிரட் துரையப்பாவை படுகொலை செய்து அரசியல் கொலைகளையும், சப். இன்ஸ்பெக்டர் பஸ்தியான் பிள்ளையைப் படுகொலை செய்து பாதுகாப்பு படையினருக்கும் பொலிஸாருக்கும் எதிரான கொலை நடவடிக்கைகளையும் தீவிரவாதிகள் தொடங்கினர்.

நாட்டைத் துண்டாடுவதற்காகப் தீவிரவாதிகள் அன்று முதல் நடவடிக்கை எடுத்தார்கள். இவர்களுக்கு எதிராகக் கடந்த கால ஆட்சியாளர்கள் தொடராக நடவடிக்கை எடுக்கவில்லை. சில ஆட்சியாளர்கள் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடராக மேற்கொள்ளத் தயங்கினார்கள். ஆனால் நாம் மாவிலாறு முதல் இடைவிடாது தீவிரவாதிகளுக்கு எதிராகத் தொடராகப் போராடி அவர்களைக் குறுகிய காலத்தில் ஒழித்துக் கட்டி பாரிய வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றோம். இந்த வெற்றியை எவரும் கவர்ந்துகொள்ளவோ, பறித்துக்கொள்ளவோ இடமளியாதீர்கள்.

மனிதாபிமான நடவடிக்கையின் மூலமே நாடு தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. அதனால் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் தொடர்ந்தும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்நாட்டில் மக்களுடன் மிகவும் நெருங்கி செயற்படும் திணைக்களமாக பொலிஸ் திணைக்களமே விளங்குகின்றது. அதனால், சட்டத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவர்களிடமுள்ளது. அதுவே எமது பாரிய வெற்றியை அர்த்த பூர்வமாக்கும்.

தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. சமாதானமில்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாது. இவற்றைக் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றோம். இதன் பயனாக தீவிரவாதம் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

இந்நாட்டில் எல்லைக் கிராமங்கள் என்ற பெயரை இல்லாமலாக்குவதற்கும் விசேட அதிரடிப்படையினர் பெரும்பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இராணுவத்தினர் வன்னியில் மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்த போது பயங்கரவாதிகள் மொனறாகலை, யால, ஒக்கம்பிட்டி வாழ் அப்பாவிகள் மீது தாக்குதல்களை நடத்தினர். இதன் மூலம் வன்னி மனிதாபிமான நடவடிக்கையை நிறுத்தலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் இப்பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினர் பயங்கரவாதிகளை முறியடித்தனர்.

தீவிரவாதிகளின் முக்கிய பிரதேசங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட கஞ்சிகுடிச்சாற்றிலும், விசேட அதிரடிப்படையினர் பயங்கரவாதிகளுக்கு நல்ல பாடம் புகட்டினர். அம்பாறை மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் 24 முகாம்களை விசேட அதிரடிப்படையினர் குறுகிய காலத்தில் நிர்மூலமாக்கினர்.

கொழும்புக்குள் தற்கொலைப் பயங்கரவாதிகள் பிரவேசிப்பதையும் முறியடித்தனர். தீவிரவாதிகளை ஒழிப்பதில் விசேட அதிரடிப் படையினரின் பங்களிப்பும் அளப்பரியதாகும். இதற்கு பல நாடுகளின் வீரர்கள் பயிற்சியைப் பூர்த்தி செய்து வெளியாகியுள்ள சர்வதேச தரத்திலான இக்கல்லூரியின் பயிற்சி பெரிதும் உதவியுள்ளது என்றார்.

20 -20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை Vs அயர்லாந்து / இந்தியா Vs இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

muralitharan-sri-lankas.jpg ஐ.சீ.சீ. உலக் கிண்ண ‘டுவன்டி-20’ கிரிக்கட் தொடரின் ‘சுப்பர்-8′ சுற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது உலகக் கிண்ண டுவன்டி-20’ கிரிக்கட் தொடரில் ‘சுப்பர்-8’ எனப்படும் இரண்டாவது சுற்றின் இன்றைய ஆட்டம் லண்டன்,  லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகியது.

இதேவேளை, ‘சுப்பர்-8’சுற்றின் மற்றுமொரு போட்டியும் இன்று நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் இப்போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பசில் எம்.பி. தலைமையில் விசேட உயர்மட்ட மாநாடு

basil.jpg“வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தல் தொடர்பான திட்டங்களை ஆராயும் விசேட கூட்டமொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றுக் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மின்சாரம், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீள்குடியேற்றம், கல்வி கைத்தொழில், தொழில் பயிற்சி, சுகாதாரம், சமூக சேவைகள், கூட்டுறவு, வர்த்தகம், தேசத்தை கட்டியெழுப்புதல், போக்குவரத்து உட்பட அனைத்து அமைச்சுக்களின் ஊடாகவும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முன்னெடுக்க உத்தேசித்துள்ள வேலைத் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு அமைச்சின் செயலாளர்களும் விளக்கமளித்தனர்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் 180 நாள் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தனர். முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் யாவற்றையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ செவிமடுத்ததுடன் சில ஆலோசனைகளையும் முன்வைத்தார்

யாழ். மா.ந.சபை, வவுனியா ந.ச.தேர்தல்: ஐ.ம.சு.மு கட்சிகளுடன் தனித்தனிச் சந்திப்பு

யாழ். மாநகர சபை, வவுனியா நகரசபை தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பாக வடக்கிலுள்ள கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த நேற்றுத் தெரிவித்தார்.

வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஏதுவாக விரைவில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப் படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவி த்தார்.

வடக்கிலுள்ள சிறு சிறு கட்சிகளுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது அரசாங்கம் வெற்றிலைச் சின்னத்தின் கீழேயே போட்டியிடவுள்ளது என்பது பற்றி திட்டவட்டமாக கூறியுள்ளது, எனக் குறிப்பிட்ட அமைச்சர் இதற்கு ஏனைய கட்சிகளும் தமது இணக்கத்தை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

யாழ். மாநகர, வவுனியா நகர சபைத் தேர்தலில் பிரதான வேட்பாளராக நியமிக்கப்ப டவுள்ளவர் யார் எனக் கேட்டபோது இதுபற்றி கட்சியின் தலைமை இதுவரை முடிவு செய்ய வில்லை என்றும் குறிப்பிட்டார். ஈ.பி.டி.பி, புளொட், ஈ.ரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ (சிறி) அணி போன்ற கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டதாக தெரியவருகிறது

காலை 6 மணி முதல் மாலை 6 வரை A9 தனியார் லொறிகளுக்கு அனுமதி

08lorry-good.jpgயாழ். குடாநாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களுடன் முதற்கட்டமாக தனியார் வர்த்தகர்களின் பொருட்களுடன் சுமார் 120 லொறிகள் ஏ-9 பாதையூடாக செல்லவுள்ளன.

எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பிலிருந்து மேற்படி லொறிகள் ஏ-9 பாதையூடாக செல்கின்றன என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் குறிப்பாக ஓமந்தைக்கு அப்பால் மோதல்கள் ஓய்ந்ததன் பின்னர் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்களுடன் ஏற்கனவே லொறிகள் சென்றன.

இதனையடுத்து குடாநாட்டிலுள்ள தனியார் வர்த்தகர்களின் கடைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அவர்களது லொறிகளிலேயே ஏற்றி செல்வதற்கு ஏதுவாக லொறிகளை பதிவு செய்யுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கேட்டிருந்தார்.

இந்த அறிவித்தலையடுத்து இதுவரை சுமார் 300 லொறிகள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திணைக்களத்தில் பதிவு செய்துகொண்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட இந்த லொறிகளில் சுமார் 120 லொறிகளே முதற்கட்டமாக செல்லவுள்ளன.

காலை ஆறு மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே ஏ-9 வீதியூடாக செல்ல லொறிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன் எக்காரணம் கொண்டும் லொறிகளை வீதியின் ஓரத்தில் நிறுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீதி ஓரங்கள் கண்ணிவெடி, மிதிவெடி அச்சுறுத்தல் உள்ளது என்பதாலேயே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டை நோக்கியோ அங்கிருந்து கொழும்பு நோக்கியோ வரும் போது போகும் போது தற்செயலாக லொறி பழுதடைந்தால் லொறிச் சாரதிகள், நடத்துனர்கள் லொறி நிறுத்தப்பட்டுள்ள இடத்தைவிட்டு செல்லவேண்டாம் எனவும், வீதியின் ஓரங்களுக்கு செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தனியார் வர்த்தகர்களினால் லொறிகளுக்கு ஏற்றப்படும் பொருட்கள் ஒரே இடத்தில் வைத்து ஏற்றப்பட்டு சீல் வைக்கப்படும். குடாநாட்டில் கைதடி களஞ்சியசாலையில் வைத்தே பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு சோதனையின் பின்னர் தனியார் வர்த்தகர்களின் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், உடைகள், கட்டடப் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் குடாநாட்டிற்குள் சென்றடைந்ததும் சகல பொருட்களின் விலைகளும் வெகுவாக குறைந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கைப் பெண் பாகிஸ்தானில் மரணம்

பாகிஸ் தான், கராய்ச்சி நகரிலுள்ள இலங்கை தூதரக கொன்சியூலர் அலுவலகத்தில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அக்னஸ் (48) என்ற பெண்ணே மரணமடைந்தவாராவார்.

அவர் தனது விடுதியில் தங்கியிருந்த போது மரணமடைந்துள்ளார். இயற்கை மரணமென பொலிஸார் தெரிவித்திருந்த போதிலும் அவரது கணவன் தேடப்படுகிறார். பங்களாதேஷ் பிரஜையான இவரது கணவர் சிராஜூள் ஹக் தலைமறைவாகியுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

அஸ்ஸாமில் சுகோய் படையை நிறுத்தியது இந்திய விமானப்படை

iair-force.jpgசீனாவின் ஆக்கிரமிப்பு மேகம் வட கிழக்குப் பகுதியில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அஸ்ஸாமில் சுகோய் போர் விமானங்களை இந்திய விமானப்படை நிறுத்தியுள்ளது. மிகவும் எளிமையாக நடந்த நிகழ்ச்சியில் நான்கு சுகோய் விமானங்கள் அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூர் விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டன.

சமீபத்தில் ஏஎன் 32 ரக விமானம் விபத்துக்குள்ளாகி ஏழு விமானப்படையினரும், 6 ராணுவத்தினரும் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுகோய் சேர்ப்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. சுகோய் -30 ரக போர் விமானம் அதி நவீனமானது. 2 பேர் அமர்ந்து செல்லக் கூடியது. அனைத்து விதமான வானிலையையும் தாக்குப் பிடிக்கக் கூடிய தன்மை கொண்டது. வானிலிருந்தபடியே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. அணு ஆயுதங்களையும் இது சுமந்து செல்லக் கூடிய வல்லமை படைத்தது.

ரஷ்யாவிலிருந்து பெற்ற தொழில்நுட்பம் மற்றும் வடிவத்தைக் கொண்டு, தற்போது நாசிக்கில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திலேயே சுகோய் ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் வகையில் வட கிழக்குப் பகுதியில் தற்போது இந்திய மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறபப்டும் பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றபடப்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையமொன்றில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினரொருவரிடமிருந்து கிடைத்த தகவல்களையடுத்தே விசேட பொலிஸ் குழுவினரால் இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறபப்டுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலுள்ள தோணிதாண்டமடுவில் மறைவிடமொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி 56 துப்பாக்கிகள் – 210 ,ரீபீட்டர் ரக துப்பாக்கி – 01 , 303 வகை துப்பாக்கி – 01 உட்பட ஆயுதங்களும் வெடிப் பொருட்களும் நேற்று பாதுகாப்பான முறையில் பொதியிடப்பட்டு புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்று திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசத்திலுள்ள கல்லடி என்னுமிடத்திலும் ஆயுதங்களும் வெடி பொருட்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

ரி – 56 துப்பாக்கி – 51 ,அதற்கான மகசீன்கள் – 900,ஆர்.பி.ஜி. ரக துப்பாக்கிகள் – 02,ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள் – 03 உட்பட யுத்த உபகரணங்கள் ஒரு தொகுதி இதில் அடங்குவதாக பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மொரவெவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வான்வில் காட்டுப் பகுதியில் விடுதலைப் புலி சந்தேக நபரொருவர் நேற்று முன் தினம் மாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தப் பகுதியில் மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது ரி – 56 ரக துப்பாக்கி சகிதம் குறிப்பிட்ட சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.