சீனாவின் ஆக்கிரமிப்பு மேகம் வட கிழக்குப் பகுதியில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அஸ்ஸாமில் சுகோய் போர் விமானங்களை இந்திய விமானப்படை நிறுத்தியுள்ளது. மிகவும் எளிமையாக நடந்த நிகழ்ச்சியில் நான்கு சுகோய் விமானங்கள் அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூர் விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டன.
சமீபத்தில் ஏஎன் 32 ரக விமானம் விபத்துக்குள்ளாகி ஏழு விமானப்படையினரும், 6 ராணுவத்தினரும் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுகோய் சேர்ப்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. சுகோய் -30 ரக போர் விமானம் அதி நவீனமானது. 2 பேர் அமர்ந்து செல்லக் கூடியது. அனைத்து விதமான வானிலையையும் தாக்குப் பிடிக்கக் கூடிய தன்மை கொண்டது. வானிலிருந்தபடியே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. அணு ஆயுதங்களையும் இது சுமந்து செல்லக் கூடிய வல்லமை படைத்தது.
ரஷ்யாவிலிருந்து பெற்ற தொழில்நுட்பம் மற்றும் வடிவத்தைக் கொண்டு, தற்போது நாசிக்கில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திலேயே சுகோய் ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் வகையில் வட கிழக்குப் பகுதியில் தற்போது இந்திய மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.