“வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தல் தொடர்பான திட்டங்களை ஆராயும் விசேட கூட்டமொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றுக் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மின்சாரம், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீள்குடியேற்றம், கல்வி கைத்தொழில், தொழில் பயிற்சி, சுகாதாரம், சமூக சேவைகள், கூட்டுறவு, வர்த்தகம், தேசத்தை கட்டியெழுப்புதல், போக்குவரத்து உட்பட அனைத்து அமைச்சுக்களின் ஊடாகவும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முன்னெடுக்க உத்தேசித்துள்ள வேலைத் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு அமைச்சின் செயலாளர்களும் விளக்கமளித்தனர்.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் 180 நாள் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தனர். முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் யாவற்றையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ செவிமடுத்ததுடன் சில ஆலோசனைகளையும் முன்வைத்தார்